எல்லாரையும் விருந்திற்கு அழைத்து வாருங்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருக்காட்சிப் பெருவிழாவானது உலக குழந்தைகளுக்கான மறைப்பணி நாளாக சிறப்பிக்கப்படுகின்றது என்றும், எல்லாரையும் விருந்திற்கு அழைத்து வாருங்கள் என்பது இந்நாளின் மையக்கருத்தாக உள்ளது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 6 திங்கள்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் இளையோர் மறைப்பணியாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், செபம் மற்றும் ஒற்றுமைக்காக அவர்கள் இணைந்து எடுக்கும் உறுதியுள்ள செயல்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் அனைத்திற்கும் ஊக்கமூட்டி உற்சாகப்படுத்துவதாகவும் கூறினார்.
நாளைய தினம் ஜனவரி 7 செவ்வாய்க்கிழமை கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடும் கிழக்கத்திய திருஅவையினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், தொடர் மோதல்களால் பாதிக்கப்படும் மக்கள் துன்புறுபவர்கள் என அனைவரோடும் உடனிருப்பதாகவும் தொடர்ந்து செபிப்பதாகவும் கூறினார்.
அமைதியின் இளவரசராம் இயேசு, அமைதியையும் இனிமையையும் நமக்குத் தருவாராக என்று கூறிய திருத்தந்தை அவர்கள், திருக்காட்சிப் பெருவிழாவை பாரம்பரிய முறைப்படி உடைகள் அணிந்து, வத்திக்கான் வளாகத்தை அழகுபடுத்திய அமேலியா சமூகத்தாருக்கு தனது நன்றியினையும், மனித மற்றும் மத விழுமியங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வரலாற்று-நாட்டுப்புற ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அமைதிக்காக ஜெபிக்க மறக்க வேண்டாம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், போரினால் பாதிக்கப்பட்ட துன்புறும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மியான்மார் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் உள்ள மக்கள் அனைவருக்காக செபிக்கவும் அழைப்புவிடுத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்