MAP

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

முதன்முறையாக வத்திக்கான் நகர நிர்வாகத் தலைமைக்கு ஒரு பெண்

புலம்பெயரும் மக்களை வரவேற்பது மட்டுமல்ல, அவர்களோடு உடன்சென்று, அவர்களை உயர்த்த பாடுபட்டு அவர்களை சமுதாயத்தில் ஓர் அங்கமாக இணைக்க உழைக்க வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தற்போது வத்திக்கான் நகர உயர்மட்ட நிர்வாகத்தின் பொதுச்செயலராக பணியாற்றும் அருள்சகோதரி Raffaella Petrini அவர்கள், மார்ச் மாதத்திலிருந்து நகர நிவாகத்துறையின் தலைவராகப் பொறுப்பேற்பார் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்முகத்தில் இதனை அறிவித்த திருத்தந்தை, புதிய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் குடியேற்றதாரர்களை வெளியேற்றவுள்ளதாக நிலவிவரும் பேச்சுக்கள் குறித்தும் தன் கருத்துக்களை வெளியிட்டார்.

தற்போது வத்திக்கான் நகர நிர்வாக தலைமைப்பணியில் இருக்கும் கர்தினால் Fernando Vérgez Alzaga அவர்கள், வரும் மார்ச் மாதம் பணி ஓய்வு பெற உள்ளதை முன்னிட்டு, அதே நிர்வாகத்தின் பொதுச்செயலராக இருக்கும் அருள்சகோதரி பெத்ரினி அவர்களை அதன் தலைவராக மார்ச் மாதத்தில் நியமிக்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்சகோதரி Simona Brambilla அவர்கள், அர்ப்பண வாழ்வுக்கான திருப்பீடத்துறையின் தலைவராக  நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தகைய உயர்பதவியில், அதாவது வத்திக்கான் நகர நிர்வாகத் தலைவராக அருள்சகோதரி ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே வரலாற்றிலேயே முதன்முறையாகும்.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் புதிய அரசுத்தலைவர் டொனால்டு ட்ரம்ப் அவர்களின் கீழ், குடியேற்றதாரர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என பரவலாக இடம்பெற்றுவரும் வதந்திகள் குறித்தும் தன் கருத்துக்களை வெளியிட்ட திருத்தந்தை, இத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால் அது வெட்கக்கேடான ஒரு செயல், ஏனெனில் எதுவுமேயில்லாத ஏழை மக்கள் உலகின் ஏற்றத்தாழ்வு நிலைகளுக்கு பலியாக்கப்படுகிறார்கள் எனற கவலையை வெளியிட்டார்.

ஒவ்வொருவரும் புலம்பெயரும் மக்களை வரவேற்பது மட்டுமல்ல, அவர்களோடு உடன்சென்று, அவர்களை உயர்த்த பாடுபட்டு அவர்களை சமுதாயத்தில் ஓர் அங்கமாக இணைக்க உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்தியக்கிழக்குப் பகுதியில் போர் நிறுத்தம் இடம்பெற்றுள்ளதும் போர்க்கைதிகள் இரு தரப்பினராலும் விடுவிக்கப்பட்டுவருவதும் மகிழ்ச்சி தரும் செய்தி என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜனவரி 2025, 12:47