யூபிலியின் எதிர்நோக்கு நம் இதயங்களில் மலரட்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
2025-ஆம் ஆண்டு, உண்மையிலேயே இரக்கத்தின் ஆண்டாக, உண்மை, மன்னிப்பு, சுதந்திரம், நீதி மற்றும் அமைதி நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 9, வியாழன், இன்று காலை, திருப்பீடத்துடன் தூதரக உறவுகளைக் கொண்டிருக்கும் உலகின் 184 நாடுகளைச் சேர்ந்த தூதர்களை, திருப்பீடத்தில் சந்தித்து அவர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த வேளையில், தொழுகைக்கூடத்தில் எசாயாவின் ஏட்டுச் சுருளில் ஆண்டவர் இயேசு வாசித்த (லூக் 4:16-21) பகுதியிலிருந்து தூதரக உறவுகளுக்கான எதிர்நோக்கு குறித்த தனது சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.
பதிமூன்று பக்கங்கள் கொண்ட திருத்தந்தையின் முழு உரையையும் வாசிக்கும்போது ஏறக்குறைய 7 தலைப்புகளின்கீழ் அவருடைய சிந்தனைகளை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அவற்றை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
01. தூதரக உறவு மற்றும் உரையாடலுக்கான அழைப்பு
தூதரக உறவுகள், வெறுப்புச் சுழற்சிகளை உடைத்து அமைதியை மேம்படுத்த, சவாலான உரையாசிரியர்களுடன் (interlocutors) கூட உரையாடலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, ஹெல்சின்கி உடன்படிக்கையின் உணர்வு இங்கே ஒரு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
02. கருத்தியல் பிரிவுகளின் விமர்சனம்
மனித உரிமைகளைக் கையாளுதல் மற்றும் விலக்கு கலாச்சாரத்தின் (cancel culture) எழுச்சி ஆகியவை மரபுகள் மற்றும் மதிப்புகளுக்கு அச்சுறுத்தல்களாக பயனற்றவை என ஒதுக்கித்தள்ளப்படுகின்றன என்று குறிப்பிட்ட திருத்தந்தை, கருக்கலைப்பு மனித உரிமையாகக் கருதப்படுவதைத் தான் எதிர்ப்பதாகவும், மற்றும் வாழ்க்கையின் புனிதத்தை வலியுறுத்துவதாகவும் கூறினார்.
03. மதச் சுதந்திரம்
வளர்ந்துவரும் யூத விரோதம், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துதல் மற்றும் மதச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளைக் கண்டித்த திருத்தந்தை, அமைதி மற்றும் மனித மாண்பிற்கு அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது என்பதையும் எடுத்துக்காட்டினார்.
04. உலகளாவிய மோதல்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள்
உக்ரைன், காசா, சூடான் மற்றும் பிற பகுதிகளில் இடம்பெற்று வரும் மோதல்கள் யாவும் மக்களின் வாழ்வில் அழுகுரல்களை ஏற்படுத்தியுள்ளன என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, போர்நிறுத்தம், மனிதாபிமான உதவி மற்றும் நீண்ட கால அமைதி முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
05. இடம்பெயர்வு மற்றும் நவீன அடிமைத்தனம்
புலம்பெயர்ந்தோர் மற்றும் மனித வர்த்தகத்தால் பாதிக்கப்படுபவர்களின் அவலநிலையை முதன்மைச் செய்தியாக எடுத்துக்காட்டிய திருத்தந்தை, புலம்பெயர்ந்தோரை மனித மாண்புடன் நடத்தவும், வறுமை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற அடிப்படைப் பிரச்சனைகளைக் கையாளவும் நாடுகள் வலியுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
06. பொருளாதார நீதி மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு
குறிப்பாக, சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுகளைக் கருத்தில் கொண்டு ஏழை நாடுகளின் கடன்களை மன்னிக்க பணக்கார நாடுகள் அழைக்கப்படுகின்றன என்று மொழிந்த திருத்தந்தை, காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.
07. 2025-ஆம் ஆண்டுக்கான எதிர்நோக்கு
இந்த யூபிலி ஆண்டு, அமைதி, மன்னிப்பு மற்றும் நீதியை வளர்ப்பதற்கும், சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் கூட்டு முயற்சிகளுக்கான காலமாகக் கருதப்படுகிறது என்றும் தனது உரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
இறுதியாக, நம்பிக்கை, அமைதி, இரக்கம் ஆகியவை தனிநபர்களிலும் நாடுகளிலும் ஒரே மாதிரியாக செழித்தோங்க வேண்டும் என்ற விருப்பத்துடன் தனது உரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை.
திருப்பீடத்துடன் தூதரக உறவு கொண்டுள்ள நாடுகள்
184 நாடுகள் தற்போது திருப்பீடத்துடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளன, அவற்றில் 89 நாடுகள் உரோமையில் பணிபுரிகின்றன. 2023-ஆம் ஆண்டில், ஓமன், கஜகஸ்தான் மற்றும் வியட்நாமுடன் புதிய உறவுகள் நிறுவப்பெற்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்