இறைவேண்டலும் இரக்கத்தின் செயல்களும் பிரிக்க முடியாதவை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தையின் உலகளாவிய செப வலைதள அமைப்பின் பணி என்பது, தூய ஆவியாரின் பணியாக அமைகின்றது என்றும், அவரின் அருள் இல்லாமல் நம் இதயங்கள் கிறிஸ்துவுடன் பயணிக்க முடியாது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 23, வியாழக்கிழமை இன்று, திருத்தந்தையின் உலகளாவிய செப வலைதள அமைப்பின் பிரதிநிதிகள் குழுவைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை, உறுதியான மனதுடன் இவ்வமைப்பின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
"இதயத்தின் வழி" என்று அழைக்கப்படும் வலைதள அமைப்பின் ஆன்மிகத்தை ஊக்குவிக்கும், இயேசு கிறிஸ்துவின் தூய்மைமிகு இதயத்தின் மனித மற்றும் தெய்வீக அன்பைப் பற்றி தான் எழுதிய நான்காவது திருத்தூது மடலான ‘அவர் நம்மை அன்புகூர்ந்தார்' (Dilexit nos) என்ற திருமடலிலிருந்து சில முக்கிமான சிந்தனைகளை அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
இது, இயேசுவின் பயணம் மற்றும் அன்னை மரியா மற்றும் தூய ஆவியால் வழிநடத்தப்படும் அன்பின் மூலம் மனித இதயங்களின் மாற்றம் ஆகிய இரண்டையும் குறிக்கிறது என்பதையும் அவர்களுக்குக் கூறினார்.
இறைவேண்டல், பரிவு மற்றும் இரக்கத்தின் செயல்களை ஊக்குவிப்பதன் வழியாக இந்த யூபிலி ஆண்டிற்குப் பங்களிக்க இந்த வலைதள அமைப்பு ஊக்குவிக்கப்படுகிறது என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நன்றியுணர்வு, ஆசீர் வழங்கல் மற்றும் இறைவேண்டலில் ஒன்றிப்புக்கான அழைப்பு விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்