MAP

உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம்   (ANSA)

கத்தோலிக்க மரபு அறிவுத்திறனை ஒரு தெய்வீகக் கொடையாகக் கருதுகிறது!

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சமத்துவமின்மையைக் குறைத்து அனைவருக்கும் பயனளிக்க வேண்டும். மேலும் அது மனிதாபிமான மற்றும் சமூக ஒருங்கிணைக்கப்பட்ட உலகத்தை ஊக்குவிக்க வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கத்தோலிக்க மரபு அறிவுத்திறனை ஒரு தெய்வீகக் கொடையாகக் கருதுகிறது என்றும், மனித மாண்பு மற்றும் கடவுளின் படைப்புடன் இணைந்திருக்கும் போது அம்மரபு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை ஆதரிக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சுவிட்சர்லாந்திலுள்ள தாவோசு என்னும் மலை வாழிடத்தில், 'நுண்ணறிவு காலத்திற்கான ஒத்துழைப்பு' என்ற கருப்பொருளில் ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் (20-24) உலகப் பொருளாதார மன்ற ஆண்டுக் கூட்டத்தின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை

செயற்கை நுண்ணறிவு என்பது, மனித நுண்ணறிவின் விளைபொருளாக, அதன் தன்னாட்சிக் கற்றல், முடிவெடுத்தல் மற்றும் உலகில் உண்மை மற்றும் மனிதகுலத்தின் பங்கு பற்றிய நெறிமுறை, சமூக மற்றும் தத்துவ கேள்விகளை எழுப்புகிறது என்பதையும் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

செயற்கை நுண்ணறிவு மனித திறன்களை மேம்படுத்தும் அதேவேளையில், அது ஒழுக்கம் மற்றும் சுதந்திரத்தில் வேரூன்றிய மனித முடிவெடுத்தலை மாற்றக் கூடாது என்பதை எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, செயற்கை நுண்ணறிவு என்பது நீதி, உடன்பிறந்த உறவு மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக இருக்க வேண்டும் என்றும், வலியுறுத்தியுள்ளார்.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சமத்துவமின்மையைக் குறைத்து அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்றும், மேலும் அது மனிதாபிமான மற்றும் சமூக ஒருங்கிணைக்கப்பட்ட உலகத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் பொது நலனுக்காகப் பணியாற்றுகின்றனவா மற்றும் மனித மாண்பை மதிக்கின்றனவா என்பதை அரசுகள், வணிகங்கள் மற்றும் சமூகம் விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

செயற்கை நுண்ணறிவின் சவால்களை எதிர்கொள்ளவும், அனைவரின் நல்வாழ்வுக்கான அதன் திறனைப் பயன்படுத்தவும் துணை செயல்பாடு போன்ற கொள்கைகளால் வழிநடத்தப்படுகின்ற ஒரு கூட்டு மற்றும் பொறுப்பான அணுகுமுறைகள் இன்றியமையாதவை என்பதையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஜனவரி 2025, 12:40