இறைவார்த்தை ஞாயிறு திருப்பலிக்குத் தலைமையேற்கும் திருத்தந்தை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வரும் ஜனவரி 26, ஞாயிறன்று, ஆறாம் ஆண்டு இறைவார்த்தை ஞாயிறைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்றுச் சிறப்பிக்கிறார் என்று நற்செய்தி அறிவிப்பு திருப்பீடத் துறையின் அறிக்கையொன்றை திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டது.
ஜனவரி 21, இச்செவ்வாயன்று வெளியிட்ட அதன் அறிக்கையில் இத்தகவலை வழங்கியுள்ள வேளை, திருப்பாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள "உமது வாக்கில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்" (திபா 119:114) என்பது இந்த இறைவார்த்தை ஞாயிறு கொண்டாட்டத்திற்கான மையக்கருத்தாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் உரைக்கின்றது.
கடவுளுடைய வார்த்தையை அறிவிக்கும் மரபுவழியைத் தொடரும் வகையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லூக்கா நற்செய்தியின் படிகளைப் பங்கேற்பாளர்களுக்கு வழங்குவார் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறைவார்த்தை ஞாயிறு கடந்த 2019-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நிறுவப்பட்டது என்றும், இவ்விழா திருவிவிலியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திருப்பலிக் கொண்டாட்டத்தின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 பொதுநிலையினருக்கு வாசகப் பணியாளருக்குரிய பணியை அளிப்பார் என்றும், இவ்வழிபாட்டியின் ஒரு பகுதியாக அவர்கள் திருவிவிலியத்தை பெற்றுக்கொள்வார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இவர்களின் ஆன்மிக வளர்ச்சியை ஆதரிக்கும் விதமாக, திருப்பீட நற்செய்தி அறிவிப்புத் துறை ஆறு மொழிகளில் இணையவழியில் ஓர் இலவச வழிபாட்டு-மேய்ப்புப்பணி வழிகாட்டியை வழங்கியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது அவ்வறிக்கை.
மேலும் கட்டுரைகள், தியானங்கள், ஆராதனை நூல்கள் மற்றும் மேய்ப்புப்பணி சார்ந்த பரிந்துரைகள் மூலம் திருவிவிலியத்துடன் ஒருவரின் தொடர்பை ஆழமாக்குவதற்கான வள ஆதாரங்களை இந்த வழிகாட்டி வழங்குகிறது என்றும், இதை அதிகாரப்பூர்வ இணையதளமான evangelizatio.va-லிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்