திருத்தந்தையின் ஜனவரி மாத வழிபாட்டு நிகழ்வுகள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜனவரி 18, இப்புதன்கிழமை, வத்திக்கான் வெளியிட்ட திருத்தந்தையின் வழிபாட்டு நிகழ்ச்சி நிரலின்படி, அடுத்த சில வாரங்களில், உலகத் தகவல் தொடர்புகள் மற்றும் ஆயுதப்படைகள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான யூபிலி திருப்பலிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்றுச் சிறப்பிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தகவல் தொடர்புகளுக்கான யூபிலி ஜனவரி 24 முதல் 26 வரையுள்ள தேதிகளில் நடைபெறுகிறது என்றும், பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியை சிறப்பிக்கிறார் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பொதுக் காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுதப் படைகள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் யூபிலியின் நிறைவு விழாவைக் கொண்டாடுவார் என்றும் இரண்டு யூபிலி திருப்பலிகளும் புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
வரும் வாரங்களுக்கான திருத்தந்தையின் வழிபாட்டுக் கால அட்டவணையின் படி ஜனவரி 25, சனிக்கிழமையன்று, புனித பவுலின் மனமாற்ற விழாவிற்கான இரண்டாம் திருபுகழ்மாலை வழிபாடு தொடங்கி, இன்னும் முக்கியமான திருவிழாக்களுக்கான வழிபாட்டு நிகழ்ச்சிகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் திருத்தந்தையின் இந்த வழிபாட்டுக் கால அட்டவணையில் உரோமையுள்ள புனித பவுல் பெருங்கோவிலில் நிகழும் கொண்டாட்டம் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான இறைவேண்டல் வாரத்தின் நிறைவும் அதில் குறிக்கப்பட்டுள்ளது.
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா
பிப்ரவரி 1 ஆம் தேதி, சனிக்கிழமையன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழாவுக்கான முதல் திருப்புகழ்மாலை வழிபாடு நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 25 : புனித பவுலடியாரின் மனமாற்றம்
ஜனவரி 25, சனிக்கிழமை, புனித பவுலடியாரின் மனமாற்றம் பெருவிழாவன்று, புனித பவுல் பெருங்கோவிலில் மாலை 5.30 மணிக்கு 58-வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்கான இரண்டாவது திருபுகழ்மாலை வழிபாடு நடைபெறுகிறது.
ஜனவரி 26, ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு
ஜனவரி 26, ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் காலை 09.30 மணிக்கு உலகத் தகவல்தொடர்புகளின் யூபிலி திருப்பலி இடம்பெறுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்