MAP

புனித பவுல் மனமாற்றத் திருவிழா மாலைசெப வழிபாடு

ஜனவரி 24 முதல் 26 வரை வத்திக்கானில் உலக சமூகத்தொடர்பாளர்களுக்கான யூபிலியும் ஜனவரி 18 முதல் 25 கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரமும் சிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் 25 புனித பவுல் மனமாற்றத் திருவிழாவைச் சிறப்பிக்கும் பொருட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாலை வழிபாட்டில் பங்கேற்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

சனவரி 25 சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 5. 30 மணியளவில் உரோமின் புறநகர்ப்பகுதியில் உள்ள தூய பவுல் பெருங்கோவிலில் நடைபெற்ற மாலைப்புகழ் செபவழிபாட்டு நிகழ்விற்குத் தலைமையேற்று மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஜனவரி 24 முதல் 26 வரை வத்திக்கானில் உலக சமூகத்தொடர்பாளர்களுக்கான யூபிலியும் ஜனவரி 18 முதல் 25 கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரமும் சிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் 25 புனித பவுல் மனமாற்றத் திருவிழாவைச் சிறப்பிக்கும் பொருட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாலை வழிபாட்டில் பங்கேற்றார். அவ்வழிபாட்டு நிகழ்வினைத் தொடக்க செபத்துடன் திருத்தந்தை அவர்கள் துவக்கிவைத்ததும், புகழ்ச்சிப்பாடல்கள் மற்றும் திருப்பாடல் 115, 125, எண்களும் பாடலாகப் பாடப்பட்டன. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமடலில் உள்ள இறைவார்த்தைகளும் அதனைத் தொடர்ந்து யோவான் நற்செய்தியில் உள்ள நம்புவோர் வாழ்வர் என்னும் தலைப்பின்கீழ் உள்ள இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டன. இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது மறையுரைக் கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு வழங்கினார். திருத்தந்தையின் உரைச் சுருக்கத்திற்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.    

இயேசு தனது நண்பர்களான மார்த்தா மற்றும் மரியாவின் வீட்டிற்கு வருகிறார், அப்போது அவர்களின் சகோதரர் இலாசர் ஏற்கனவே இறந்து நான்கு நாட்கள் ஆகின்றன. எல்லா நம்பிக்கையும் இழந்துவிட்டதாகத் தெரியும் நிலையில் ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்ற மார்த்தாவின் முதல் வார்த்தைகள் இயேசு தாமதமாக வந்ததற்கு வருத்தத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன. இருப்பினும், அதே நேரத்தில், இயேசுவின் வருகை மார்த்தாவின் இதயத்தில் நம்பிக்கையின் சுடரை ஏற்றி, அவளை விசுவாசத்தின் அறிக்கைக்கு இட்டுச் செல்கிறது என்பதை இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்ற வரிகள் வெளிப்படுத்துகின்றன. உண்மையில், இயேசு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலை காலத்தின் முடிவில் நிகழும் ஒரு நிகழ்வாக மட்டுமல்லாமல், நிகழ்காலத்தில் ஏற்கனவே நடக்கும் ஒன்றாக அவளுக்கு அறிவிக்கிறார், ஏனென்றால் அவரே உயிர்த்தெழுதலும் வாழ்வுமானவர். என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்கின்றார். இக்கேள்வியில் நமது கவனத்தை செலுத்துவோம்.

மார்த்தா மற்றும் இயேசுக்கு இடையிலான இச்சந்திப்பு நமது துயரமான நேரங்களில் நாம் தனியாக இல்லை, தொடர்ந்து நல்லது நடக்கும் என நாம் எதிர்நோக்கி இருக்க முடியும் என்பதை எடுத்துரைக்கின்றது. நமது எதிர்நோக்கு எல்லாம் வீணாகத் தோன்றினாலும் இயேசு நமக்கு வாழ்வினை கொடையாக அளிக்கின்றார். துயரமான இழப்புக்கள், கொடிய நோய்கள், கசப்பான தருணங்கள், மறுதலிப்புக்கள், கடினமான சூழல்கள் போன்றவற்றில் நமது எதிர்நோக்கு வீணானதாக தோன்றினாலும் இயேசு நமக்கு வாழ்வை அளிக்கின்றார். இத்தகைய துயரங்களை நாம் அனுபவித்தாலும், நம்பிக்கையை இழந்த சூழலில் வாழும் பிறரை நாம் சந்தித்தாலும், இயேசுவை நாம் சந்திக்கும்போது நமது எதிர்நோக்கு புதுப்பிறப்பெடுக்கின்றது புதுவாழ்வு பெறுகின்றது என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது. ஏனெனில் அவர் இறந்தோரிடமிருந்து உயிர்பெற்று எழுந்தவர். எனவே அவர் நம்மையும் எழுப்புகிறார், நமது பாதையில் நாம் மீண்டும் நடக்க நமக்கு ஆற்றலைத் தருகிறார்.

எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இது கிறிஸ்தவ சமூகங்களின் வாழ்க்கைக்கும், தலத்திருஅவைகளுக்கும், நமது கிறிஸ்தவ உறவுகளுக்கும் முக்கியமானது. சில நேரங்களில் நாம் நமது கடினமான சூழலினாலும் நமது முயற்சிகளின் பலனின்றிப் போவதாலும் சோர்வடைகின்றோம். நமது உரையாடலும் ஒத்துழைப்பும் பலனற்றவைகளாக நம்பிக்கையற்ற தன்மையை உருவாக்குகின்றன. எனவே மார்த்தாவைப்போல நாமும் துயரத்தை அனுபவிக்கின்றோம். அச்சூழலில் கடவுள் நம்மை நாடி வருகின்றார். புதுவாழ்வையும் நம்பிக்கையையும் தருகின்றார். இத்தகைய கிறிஸ்துவைப் பின்பற்றிய திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில் எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; ஏனெனில், நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது என்று வலியுறுத்துகின்றார். நாம் அனைவரும் ஒரே ஆவியைப் பெற்றுள்ளோம், இதுவே நமது கிறிஸ்தவ பயணத்தின் அடித்தளம்.

கத்தோலிக்க திருஅவையால் கொண்டாடப்படும் இந்த எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டானது, அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிசேயா திருச்சங்கத்தின் 1700 வது ஆண்டுவிழாவையும் நினைவுகூர்கின்றது. கடவுளது அருளின் ஆண்டை நினைவுகூரும் இந்த ஆண்டானது ஒரே விசுவாசக் கொள்கையை எடுத்துரைத்து ஒரே கடவுளை நம்பும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமைகின்றது. ஒரே நம்பிக்கை அறிக்கையை ஒன்றாக எடுத்துரைத்து, ஒரே கடவுளை வணங்குவதன் வழியாக நாம் நம்பிக்கைச் சமூகமாக இணைந்து நமது அடிப்படை வேர்களை மீண்டும் கண்டுபிடிப்போம், ஒற்றுமையைப் பாதுகாப்போம்! ஆர்த்தடாக்ஸ் இறையியலாரான  ஜொவான்னி  சீஸொலஸ் கூறுவதுபோல ஒன்றிப்பின் நிறைவு எப்போது வரும்? தீர்வு நாளின் இறுதியிலா? அதற்கு முன்பாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடப்போம், பணியாற்றுவோம், செபிப்போம், அன்புசெய்வோம்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே, நாம் பகிர்ந்து கொள்ளும் இந்த நம்பிக்கை ஒரு விலைமதிப்பற்ற கொடை. நாம் கொண்டாடும் யூபிலி ஆண்டானது, வெறும் வரலாற்று நினைவாக" மட்டுமல்லாமல், நம்மிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையைக் காணும் உறுதிப்பாடாகக் கொண்டாடப்பட வேண்டும். உறுதியான பிணைப்புகளை உருவாக்குதல், பரஸ்பர நட்புறவை வளர்த்தல் போன்றவற்றின் வழியாக, நாம் ஒன்றிப்பு மற்றும் உடன்பிறந்த உணர்வை நெசவு செய்பவர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஒரே கடவுள் மீதான நமது நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், கிறிஸ்து இயேசுவில் ஒற்றுமைக்கான வழியைக் கண்டறியவும் இதுவே நேரம். ​​நம்முடைய எல்லா நம்பிக்கைக்கும் அடிப்படைக் காரணரான கடவுளின் ஒரே மகனுக்கு எல்லா மக்களுக்கும் முன்பாக சான்றுள்ள வாழ்வைக் கொடுப்பதில் ஒருபோதும் சோர்வடையாமல் இருப்போம்.

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறையுரைக் கருத்துக்களை நிறைவு செய்ததும், அன்னை மரியின் புகழ்ச்சிப் பாடலானது பாடப்பட்டது. அதன்பின் ஆங்கிலம், மலையாளம்,இத்தாலியம், ருமேனியம், இஸ்பானியம், அர்மேனியம் ஆகிய மொழிகளில் மன்றாட்டுக்கள் எடுத்துரைக்கப்பட்டன. இறுதியாக விண்ணகத்தந்தையை நோக்கிய செபமானது பாடப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாலைவழிபாடு நிறைவுப்பகுதியாக இறுதிசெபத்தினை எடுத்துரைத்து தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஜனவரி 2025, 16:08