ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனை சந்தித்தார் திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
டிசம்பர் 4, இப்புதனன்று காலை, ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஓர்பனை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ 35 நிமிடங்கள் நிகழ்ந்த இந்தச் சந்திப்பின்போது, புனித பூமியின் 18-ஆம் நூற்றாண்டின் வரைபடம் உட்பட வழங்கம்போல இருவருக்குமிடையே பரிசு பொருள்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்றும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புதன் பொது மறைக்கல்வி உரை வழங்க புறப்படுவதற்கு முன்பாக ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஓர்பன் தனது மனைவி அனிக்கோ லெவாய், திருப்பீடத்திற்கான ஹங்கேரி நாட்டுத் தூதர் Eduard Habsburg-Lothringen ஆகியோருடன் திருத்தந்தையைச் சந்தித்தார் என்றும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சந்திப்புக்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் துணை செயலர் பேரருள்திரு Mirosław Wachowski அவர்களையும் பிரதமர் விக்டர் ஓர்பன் சந்தித்தார் என்றும் மேலும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.
ஹங்கேரி மற்றும் திருப்பீடத்திற்கு இடையேயான வலிமையான மற்றும் பலனளிக்கும் இருதரப்பு உறவுகளை இந்தச் சந்திப்பு எடுத்துக்காட்டியது என்றும், ஹங்கேரிய சமுதாயத்தின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்விற்குக் கத்தோலிக்கத் திருஅவையின் பங்களிப்புகளுக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன என்றும் குறிப்பிடுகிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்