எதிர்நோக்கின் திருப்பயணிகள் : திருத்தந்தையின் டிசம்பர் மாத செபக் கருத்து!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வரவிருக்கும் யூபிலி நம் விசுவாசத்தில் நம்மை பலப்படுத்தவும், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை நம் வாழ்வின் மத்தியில் அடையாளம் காணவும், கிறிஸ்தவ எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நம்மை மாற்றவும் இறைவேண்டல் செய்வோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 3, செவ்வாய், புனித சவேரியார் பெருவிழாவன்று வெளியிட்ட டிசம்பர் மாதத்திற்கான தனது செபக் கருத்தில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, கிறிஸ்தவ எதிர்நோக்கு என்பது கடவுளிடமிருந்து கிடைத்த கொடை என்றும், அது நம் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நிரப்புகிறது என்றும் உரைத்துள்ளார்.
நாளை உங்கள் பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியுமா, அல்லது நீங்கள் படிப்பது உங்களுக்கு நல்லதொரு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருமா என்று உங்களுக்குத் தெரியாதபோது, நீங்கள் எளிதில் சோர்வடைந்துவிடுவீர்கள் என்றும், அந்நிலையில் நீங்கள் கொண்டிருக்கும் எதிர்நோக்கு மட்டுமே உங்களுக்கு நங்கூரமாக உதவிட முடியும் என்றும், அந்த எதிர்நோக்கு என்னும் கயிற்றை மட்டுமே நாம் இறுக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
நமக்கு வாழ்வளிக்கும் கிறிஸ்துவின் இந்தச் சந்திப்பை கண்டறிய நாம் ஒருவருக்கொருவர் உதவுவோம், மேலும் அந்த வாழ்க்கையை மகிழ்வுடன் கொண்டாட எதிர்நோக்கின் திருப்பயணிகளாக ஒரு பயணத்தை மேற்கொள்வோம் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, வரவிருக்கும் யூபிலி ஆண்டிற்குள் நுழைவது அந்த வாழ்க்கையில் அடுத்த கட்டமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள், கடவுள் நமக்குத் தரும் எதிர்நோக்கின் கொடையால் நம் வாழ்க்கையை நாம் நிரப்புவோம் என்றும், அக்கொடையைத் தேடும் அனைவருக்கும் அதைச் சென்றடைய அனுமதிப்போம் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்பதை ஒருபோதும் மறவாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டு டிசம்பர் மாதத்திற்கான தனது செபக்கருத்தை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்