MAP

வறியோர்க்கான இன்னிசைக் கச்சேரி ஒருங்கிணைப்பாளர்களுடன் திருத்தந்தை வறியோர்க்கான இன்னிசைக் கச்சேரி ஒருங்கிணைப்பாளர்களுடன் திருத்தந்தை  (VATICAN MEDIA Divisione Foto)

வறியோர்க்கான இன்னிசைக் கச்சேரி அன்பின் நற்செய்தி – திருத்தந்தை

அனைவரின் ஒத்துழைப்பை உணராமல் சிம்பொனி எனப்படும் கூட்டிசையை உருவாக்க முடியாது – திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

வறியோர்களுடனான இன்னிசைக் கச்சேரி ஒருங்கிணைந்த நல்லிணக்கப் பயணத்தின் ஓர் அழகான அடையாளம் என்றும், மிகவும் பலவீனமான சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணைந்து நடத்தப்படும் இச்செயல் அன்பின் அற்புதமான நற்செய்தி என்றும் கூறினார் திருத்தந்தை.

டிசம்பர் 7 சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் வறியோர்க்கான இன்னிசைக் கச்சேரியின்  ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஏறக்குறைய 240 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 40ஆவது ஆண்டினைச் சிறப்பிக்கும் உரோம் மறைமாவட்ட பாடகர் குழுவினருக்குத் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

டிசம்பர் 7 சனிக்கிழமை மாலை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் வறியோர்கள் பலர் பங்கேற்க இருக்கும் இந்த இன்னிசைக் கச்சேரியை ஒருங்கிணைத்த அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இன்னிசைக் கச்சேரி என்பது நல்லிணக்கத்தின் அழகான உவமை என்றும், நிறைவாக வாழ முயற்சிக்கும் திருஅவையின் ஒருங்கிணைந்த பயணத்தின் நல்லிணக்கம் என்றும் கூறினார்.

பல்வேறு இசைக்கருவிகள் ஒன்றிணைந்து அழகான இசையை எழுப்புகின்றன, பல்வேறுபட்ட குரல்கள் ஒன்றாக இணைந்து இனிய ஓசையை எழுப்புகின்றன என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பல வகை இசைக்கருவிகளும், பாடும் நபர்களும் ஒருவர் மற்றவருடன் இணக்கத்துடன் இருக்கும்போது இசையின் அழகை உருவாக்குகின்றனர் என்றும் எடுத்துரைத்தார்.

இசைக் கச்சேரியில் இடம்பெறும் அமைதியான நேரங்கள், இடைவெளிகள், மாற்று ஒலிகள் ஆகிய அனைத்தும் மிக முக்கியம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தேவையற்றவை என எந்த ஒன்றையும் கடவுள் ஒருபோதும் உருவாக்குவதில்லை, ஒவ்வொருவரும் அவரவர் பகுதியை மற்றவர்களுடன் இணைந்து வெளிப்படுத்தவே இவ்வுலகில் அழைக்கப்படுகின்றார்கள் என்றும் கூறினார்.

நல்லிணக்கத்தின் உவமையாகிய இன்னிசைக்கச்சேரியைப் பற்றிச் சிந்திக்கும் நேரத்தில் இருத்தலின் தேவையைத் தேர்ந்தெடுப்பது மிக அவசியம் என்றும், தேவையிலிருக்கும் மக்களுக்கான இந்த இன்னிசைக் கச்சேரியில் பங்கேற்பது என்பது நம்பிக்கையின் அடையாளத்தை உருவாக்குகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

அன்பின் ஊற்றாகிய இயேசுவின் இதயத்திலிருந்து தொடங்கி எதிர்நோக்கின் அடையாளங்களை உருவாக்குவதைத்தான் வரும் யூபிலி ஆண்டு முன்வைக்கின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள்,  அனைவரின் ஒத்துழைப்பை உணராமல் சிம்பொனி எனப்படும் கூட்டிசையை உருவாக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 டிசம்பர் 2024, 14:46