அரசுத்தூதர்கள் நேர்மறையான நடுநிலையில் செயல்படவேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
துன்பங்கள், துயரங்கள், தோல்விகள், போர்கள், மோதல்கள் போன்றவைகள் இருந்தாலும் உரையாடல், நல்லிணக்கம், பரஸ்பர புரிதல், ஒவ்வொரு நபரின் மாண்பு, மற்றும் உரிமைகளுக்கு மதிப்பளித்து, அமைதியை தேடும் கடமையை பன்னாட்டு சமூகம் கைவிட முடியாது என்றும், பொதுநலனுக்கான பணியில் உரையாடலை ஊக்குவிக்க நேர்மறையான நடுநிலையில் அரசுத்தூதர்கள் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 7 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இந்தியா, ஜோர்தான், டென்மார்க், இலக்ஸம்பர்க், சாவோ டோம் மற்றும் பிரின்சிபே, ருவாண்டா, துர்க்மெனிஸ்தான்,அல்ஜேரியா, பங்களாதேஷ், ஜிம்பாப்வே, கென்யா ஆகிய நாடுகளின் அரசுத்தூதர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பன்னாட்டு சமுதாயத்தின் மீதுள்ள அக்கறை மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள சவால்களை எதிர்கொள்ளுதல், விரிவான மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை உருவாக்குதல் போன்றவற்றிற்கு ஒவ்வொரு நாடும் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அரசின் செயலாண்மைத்திறம் கொண்ட பொறுமையான பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அரசின் செயலாண்மைத்திறம் என்பது மிக நுணுக்கமான நடனம் போன்றது, அந்நடனத்தில் ஒன்றிணைந்து செய்யப்படும் ஒவ்வொரு சிறு அசைவுகளும் ஒன்றிப்பை இணக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நீண்டகாலமாக உள்ள உலகியல் பிரச்சனைகள் நம்மை ஊக்கமிழக்கச் செய்வதற்குப் பதிலாக புதுமையான தீர்வுகளைக் கண்டறிய நம்மைத் தூண்ட வேண்டும் என்றும் கூறினார்.
புதிய ஆண்டிற்காகக் காத்திருக்கும் நாம், நாளை என்ன நடக்கும் என்ற ஆசையோடும் எதிர்பார்ப்போடும் புதிய ஆண்டை எதிர்நோக்குடன் காண அழைக்கப்படுகின்றோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், 2025ஆம் ஆண்டு யூபிலி வலியுறுத்துவது போல எதிர்நோக்குடன் வாழவும் வலியுறுத்தினார்.
ஆக்கப்பூர்வமான நட்புறவு, ஒத்துழைப்பு, அமைதிப் பணியில் உரையாடல் ஆகியவற்றின் பிணைப்புகளை மேம்படுத்துவதில் அரசுத் தூதர்கள் துணிவுடன் தொடர்ந்து பணியாற்ற அவர்களை ஊக்கப்படுத்திய திருத்தந்தை அவர்கள், துணிவு, படைப்பாற்றல், அறிவாற்றல் கொண்டு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்யப்படும் அரசுத்தூதர்களின் செயல்கள் போரினால் களைப்படைந்த உலகிற்கு எதிர்நோக்கின் விதைகளை விதைக்க உதவுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்