மனித குலத்தின் முழுமையின் மாதிரி அன்னை மரியா
மெரினா ராஜ் – வத்திக்கான்
இதயப்பூர்வமாக இறைவனில் வேரூன்றிய மரியா, தனது பிள்ளைகளின் தேவையில் கவனம் செலுத்துகின்றார், அவர்களைச் சந்தித்து இறைவனின் ஆறுதலைப் பெற ஊக்கமூட்டுகின்றார் என்றும், மனித குலத்தின் முழுமையின் மாதிரியாக இருக்கும் அவருடன் இணைந்து இறைவனின் அருளால் உலகை மேம்படுத்த நம்மால் முடியும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 9 திங்கள்கிழமை வத்திக்கானில், இஸ்பெயினில் உள்ள ஒன்றிணைந்த கரங்கள் எனப்படும் Manos Unidas நிரந்தர ஆணைக்குழு உறுப்பினர்கள் ஏறக்குறைய 20 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஸ்பெயினில் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவையில் உள்ள இறைமக்களுக்கான பொதுச் சங்கமான "மானோஸ் யுனிதாஸ்" பசி, வளர்ச்சியின்மை மற்றும் கல்வியின்மைக்கு எதிராக போராடுவது, அவற்றை உருவாக்கும் கட்டமைப்பு காரணங்களை ஒழிப்பதற்கான வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது என்றும், நற்செய்தியையும் திருஅவையின் சமூகக் கோட்பாட்டையும் அடித்தளமாகக் கொண்ட மனிதனைப் பற்றிய கிறிஸ்தவப் பார்வையால் மட்டுமே இப்பணி சாத்தியமாகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2025ஆம் ஆண்டு யூபிலியில் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நாம் இருக்கவும், நமது வாழ்க்கையை இயேசுவை நோக்கி மாற்றியமைக்கவும் அக்குழுவினருக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் பலவீனமான மற்றும் தேவைப்படுபவர்களின் பொருளாதார மேம்பாடு, முன்னேற்றம், ஆன்மிக வளர்ச்சி போன்றவற்றிற்கு அளிக்கும் பங்களிக்க வேண்டும் என்றும் அதன் வழியாகக் கடவுளின் குழந்தைகள் அவர்கள் என்பதற்கு பதிலளிக்கும் மாண்புள்ள வாழ்க்கை வாழ உதவுங்கள் என்றும் கூறினார்.
கடவுளின் வாக்குறுதியில் பொறுமை மற்றும் நிறைவான எதிர்நோக்குடன் நாம் காத்திருக்கும் இத்திருவருகைக் காலமானது, அன்பின் நாகரிகத்தைக் கட்டியெழுப்புதல், அதற்கான ஏக்கத்தை உருவாக்குதல், பங்களித்தல் போன்றவற்றின் வழியாக ஆன்மிக புதுப்பிப்பை அடைந்து கடவுளோடும் அயலாரோடும் அன்புகொள்ள நமக்கு பெரிதும் உதவட்டும் என்று கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்