திருஅவை,கடவுள் மக்களை அடையாளப்படுத்தும் கிறிஸ்துமஸ் குடில், மரம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஏழ்மையிலும் ஏழ்மையாக நமக்காக மனுஉரு எடுத்த இயேசு மனிதகுலத்தின் பலவீனமான வளங்கள் வழியாக அவரது அரசை உருவாக்க விரும்பினார் என்பதை கிறிஸ்து பிறப்புக் குடிலானது எடுத்துரைக்கின்றது என்றும், திருஅவை, கடவுளின் மக்கள், கிறிஸ்துவின் ஒளி ஆகியவற்றைப் பரப்பும் அடையாளமாகக் கிறிஸ்துமஸ் மரம் இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 7 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் இவ்வாண்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகம் ,தூய பவுல் அரங்கம் போன்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்து பிறப்பு குடில் கிறிஸ்துமஸ் மரம் போன்றவற்றை வழங்கிய Ledro மற்றும் பெத்லகேம் பாலஸ்தீனம் மக்கள் ஏறக்குறைய 2000 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் Trento மறைமாவட்டத்தில் உள்ள Ledro பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட 29 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பெத்லகேம் கைவினைஞர்களால் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் டிசம்பர் 7 சனிக்கிழமையன்று வத்திக்கான் வளாகத்தில் “பெத்லகேம் குடில் 2024” (“Bethlehem Nativity 2024”) என்ற தலைப்பில் அதிகாரப்பூர்வமாகப் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது.
கிறிஸ்துமஸ் மரம்
இத்தாலியின் Trento மறைமாவட்டத்தில் உள்ள Ledro பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட 29 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரத்தின் கம்பீரம் வியக்க வைக்கின்றது என்றும், சூழலியல் கோட்பாடுகளின்படி வெட்டப்பட்ட இம்மரம் பல ஆண்டுகளின் அடையாளங்களைத் தாங்கி நிற்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
முதிர்ந்த வயதுடைய மரங்கள் வெட்டப்பட்டு புதிய மரங்கள் வளர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் முறையானது திருஅவை மற்றும் கடவுளின் மக்களை அடையாளப்படுத்தும் அழகான உருவகமாகவும் கிறிஸ்துவின் ஒளியைப் பரப்பும் அடையாளமாகவும் இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வயது முதிர்ந்தவர்கள் இளையோருக்குத் தங்கள் வாழ்வைக் கொடுத்தார்கள், இளையோர்கள், முதியோர்களை அரவணைத்துப் பாதுகாக்கின்றார்கள் இப்படியாக, உலகின் பணியிலும், விண்ணகத்தை நோக்கிச் செல்லும் பயணத்திலும் கடவுளின் மக்கள் முன்னேறிச் செல்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்து பிறப்புக் குடில்
கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் இருக்கும் கிறிஸ்து பிறப்பு குடிலானது, மண் மற்றும் நாணல்களால் கட்டப்பட்ட மீனவர்கள் வாழும் குடில் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், தங்களது கடினமான மீன்பிடித்தொழில், உழைப்பு, களைப்பு, மகிழ்ச்சி, துன்பம் என வாழ்வின் எல்லா உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளும் Laguna gradese என்னும் தீவுப்பகுதிகளில் வசிக்கும் mote இன மீனவ மக்களின் வீடு போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.
ஏழ்மையிலும் ஏழ்மையாக நமக்காக மனுஉரு எடுத்த இயேசு ஆற்றல் மிக்க பொருள்களால் அல்ல மாறாக மனித குலத்தின் பலவீனமான வளங்கள் வழியாக அவரது அரசை உருவாக்க விரும்பினார் என்பதை கிறிஸ்து பிறப்புக் குடிலானது எடுத்துரைக்கின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கசோனே (“casone”) எனப்படும் நீரால் சூழப்பட்டக் குடிலானது இயேசுவை அடைய திருஅவை என்னும் சிறிய படகு நமக்குத் தேவை என்பதை எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார்.
ஆழமற்ற பகுதிகளில் செல்லப் பயன்படும் “batela” எனப்படும் தட்டையான படகுகள் போன்று திருஅவை என்னும் படகு இயேவை அடைய நமக்கு தேவை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தனியாக அல்ல மாறாக ஒன்றிணைந்து அவரைச் சென்றடைய நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும், திருத்தூதர் பேதுருவால் இயக்கப்படும் அப்படகில் அனைவருக்கும் இடமுண்டு என்றும் கூறினார்.
திருஅவையில் அனைவருக்கும் எப்போதும் இடமுண்டு, பாவிகளுக்கு இடமுண்டு ஏனெனில் இயேசு பாவிகளுக்காகவும், நம் அனைவருக்காகவும் வந்தார் என்பதை நாம் மறக்கக்கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கிறிஸ்து பிறப்புக் குடிலில் இடம்பெற்றுள்ள பல்வேறு வகை மனிதர்கள் இயேசு நமக்கு விட்டுச்சென்ற அமைதி மற்றும் அன்பின் செய்தியை எடுத்துரைக்கின்றார்கள் என்றும் கூறினார்.
போர் மற்றும் வன்முறை போதும் மக்கள் அமைதிக்காகக் கண்ணீருடன் மன்றாடுகின்றார்கள், பிறரைக் கொல்வதற்காகத் தயாரிக்கும் ஆயுதங்களுக்கு அதிக முதலீடும் வருமானமும் கிடைக்கின்றது, போர் வேண்டாம், உலகிலும், கடவுள் அன்பு செய்யும் மக்கள் அனைவரிலும் அமைதி நிலவ செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்