MAP

இத்தாலியின் கத்தானியா புனித பவுல் இறையியல் நிறுவனத்தின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை இத்தாலியின் கத்தானியா புனித பவுல் இறையியல் நிறுவனத்தின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை  (VATICAN MEDIA Divisione Foto)

நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து நடைபோடவேண்டிய தேவை

படிப்புக் காரணங்களுக்காக சிசிலி தீவிலிருந்து வெளியேச் செல்லும் மாணவர்கள் படிப்பு முடிந்ததும் இப்பகுதிக்கு திரும்பி, சிசிலி தீவின் மேம்பாட்டிற்காக உழைக்கவேண்டியது தேவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருஅவை மற்றும் சமூக வாழ்வில் பெறும் பயிற்சிகளுடன், வருங்காலம் குறித்த நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து நடைபோடவேண்டிய தேவை சிசிலி தீவுக்கு உள்ளது என இத்தாலியின் கத்தானியா புனித பவுல் இறையியல் நிறுவனத்தின் அங்கத்தினர்களை சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பவுல் இறையியல் நிறுவனத்தின் ஏறக்குறைய 200 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை டிசம்பர் 6, வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளைய தலைமுறையை சுதந்திரத்துடனும் வெளிப்படைத் தன்மையுடனும் பயிற்சியளித்து பொதுநலன் குறித்த அக்கறையை அவர்களில் ஊட்டி பழைய மற்றும் புதிய ஏழ்மை நிலைகளை இல்லாததாக்குவது நம் கையில் உள்ளது என்றார்.

இத்தாலியின் சிசிலி தீவில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் முதல் கனியாக 1969ஆம் ஆண்டு பிறப்பெடுத்த இந்த இறையியல் நிறுவனம் அப்பகுதியில் உள்ள ஏனைய கிறிஸ்தவ சபைகளையும் ஒன்றிணந்து நடக்க உதவியுள்ளது என்றார் திருத்தந்தை.

இந்த இறையியல் நிறுவனத்தில் பெருமளவில் மாணவிகளும் இணந்து கற்று வருவது குறித்தும் மகிழ்ச்சியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாஃபியா கும்பலின் ஆதிக்கத்தால் அப்பகுதியில் முன்னேற்றம் தடைபட்டுவருவது குறித்த கவலையையும் வெளியிட்டார்.

குற்றக்கும்பல்களின் ஆதிக்கத்தால் இளையதலைமுறை அங்கிருந்து வெளியேற விளைவதாகக் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், படிப்புக் காரணங்களுக்காக இத்தீவிலிருந்து வெளியேச் செல்லும் மாணவர்கள் படிப்பு முடிந்ததும் இப்பகுதிக்கு திரும்பி, சிசிலி தீவின் மேம்பாட்டிற்காக உழைக்கவேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.

குடியேற்றதாரர் வரவேற்கப்படவேண்டியதன் அவசியம், கலாச்சாரத்தோடு உரையாடல் நடத்தவேண்டிய தேவை, நம்பிக்கையின் மறைப்பணியாளர்களாக செயல்படவேண்டியது ஆகியவை குறித்தும் மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 டிசம்பர் 2024, 15:41