முழுமையான மாண்பில் நாம் வாழவும் வளரவும் உதவும் இறை அன்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
வழியும் உண்மையும் வாழ்வுமான கிறிஸ்து நமது மீட்பிற்காக அனைத்தையும் இழந்து சிலுவையில் மரித்தார் என்றும், அன்பினால் மட்டுமே முழுமையான மாண்பில் நாம் வாழவும் வளரவும் முடியும் என்று அதன் வழியாக நமக்கு கற்பித்தார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 24 கிறிஸ்து அரசர் பெருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குற்றச்சாட்டுக்கள், ஒருமித்த கருத்துக்கள் மற்றும் உண்மை என்னும் தலைப்புக்களின் கீழ் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
அன்பு செய்ய இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்தபடி ஒருவரையொருவர் அன்பு செய்து, இரக்கச் செயல்களில் உண்மைக்குச் சான்றாக இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும், வன்முறையாளர்களால் வரலாறு படைக்கப்பட்டது என்பது உண்மையல்ல, நம்மைத் துன்புறுத்தும் பல தீமைகள், மனிதனின் தீய செயல்கள், ஏமாற்றுச் செயல்கள் எல்லாமே இறுதியில் நீதியும் இரக்கமுமுள்ள அரசரும் கடவுளுமான கிறிஸ்துவின் தீர்ப்புக்கு உட்பட்டவை என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுள் நம்மை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கின்றார், நம்மை அவர் ஒருபோதும் தனியாக விடுவதில்லை என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நம்மை அன்பு செய்யவும் தூக்கிவிடவும் அவர் ஒருபோதும் மறப்பதில்லை என்றும், நமது பயணத்தை அவருடன் மீண்டும் தொடங்க அவர் நமக்கு உதவுகின்றார் என்றும் கூறினார்.
பிலாத்து தன்மேல் சுமத்திய குற்றச்சாட்டுக்களைக் கண்டு அஞ்சாமல் துணிவோடு அவரிடம் இயேசு உரையாடினார் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இறுதி வரை உண்மையின் சான்றுக்கு தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் அவர் என்றும் கூறினார்.
இயேசுவைப் போல நாமும் குற்றச்சாட்டுக்களுக்கு அஞ்சாமல் துணிவுடன் வாழ வேண்டும் என்றும், உலக மாயைகள் என்னும் போதையில் இருந்துவிடக் கூடாது என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், எதார்த்தத்தில் உறுதியாக இருங்கள், மாயையில் எச்சரிக்கையாக இருங்கள் என்று இளையோர்க்கு வலியுறுத்தினார்.
கிறிஸ்து நமக்குக் கற்பிப்பது போல, எஞ்சியிருப்பது அன்பின் செயல்கள் மட்டுமே, உலகின் குற்றச்சாட்டுக்களுக்கு அஞ்சாமல் அன்பு செய்வதைத் தொடருங்கள் என்றும், இறை ஒளியில் பிறரை அன்பு செய்து அவர்களுக்கு உதவ நம்மையே நாம் கொடுப்பவர்களாக மாறுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசு நமக்குக் கற்பித்தது போல பிறருக்கு உதவிகள் செய்து வாழ வேண்டும் என்றும் நமது மாண்பினை விற்று வாழ வேண்டாம் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், ஆன்மாவிற்கு ஒப்பனை செய்யாமல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் வாழவும் இறைத்தந்தையின் எல்லையற்ற அன்பில் சுடவிடும் சிறு நட்சத்திரங்களாக வாழவும் அழைப்புவிடுத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்