MAP

அரச கல்லறையில் திருத்தந்தை பிரான்சிஸ் அரச கல்லறையில் திருத்தந்தை பிரான்சிஸ் 

அரசர் பால்டோவின் கல்லறையில் திருத்தந்தை பிரான்சிஸ்

லேகன் பர்க் தூய அன்னை மரியா ஆலயத்தின் அடிநிலக் கல்லறைக் கோவிலுக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக குரல்கொடுத்து போராடிய மன்னர் பால்டோவின் கல்லறை அருகில் சென்று சிறிது நேரம் அமைதியில் செபித்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

செப்டம்பர் 26 முதல் 29 வரை இலக்ஸம்பர்க் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு 46ஆவது திருத்தூதுப்பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமையுடன் தனது திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்கின்றார்.

செப்டம்பர் 28 சனிக்கிழமை காலை பெல்ஜியம் நாட்டு ஆயர்கள், அருள்பணியாளர்கள் துறவறத்தார், அருள்பணித்துவ மாணவர்கள், மேய்ப்புப்பணியாளர்கள் அனைவரையும் கோகெல்பர்க் திருஇருதயப் பேராலயத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை அவர்கள், பெல்ஜியம் அரச உறுப்பினர்களின் கல்லறைக்கு பெல்ஜியம் நாட்டு அரசர் பிலிப்போ மற்றும் அரசி மத்தில்தே ஆகியோரால் வரவேற்கப்பட்டார். லேகன்பர்க் தூய அன்னை மரியா ஆலயத்தின் அடிநிலக் கல்லறைக் கோவிலுக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருக்கலைப்புச் சட்டத்திற்கு எதிராகக் குரல்கொடுத்து போராடிய மன்னர் பால்டோவின் கல்லறை அருகில் சென்று சிறிது நேரம் அமைதியில் செபித்தார்.

1951 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை பெல்ஜியம் நாட்டின் அரசராக இருந்தவரும், 1992 ஆம் ஆண்டு கருக்கலைப்பு சட்டத்திற்கு தனது ஆதரவை அளிக்க மறுத்து கையெழுத்திட மறுத்ததற்காக முப்பத்தாறு மணி நேரம் தனது பதவியை இராஜினாமா செய்ய பணிக்கப்பட்டவருமாகிய அரசர் பால்தோவின் கல்லறையின் முன் அஞ்சலி செலுத்தினார் திருத்தந்தை.

அவரது மறைசாட்சிய வாழ்வு போற்றப்படும் வகையில் அவரது வீரத்துவ வாழ்வைப் பரீசீலனை செய்ய அதற்கான திருஅவை துறைகளுக்கு அழைப்புவிடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.

அரச கல்லறையைச் சந்தித்து அங்கிருந்து புறப்பட்டு திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்த திருத்தந்தை அவர்கள், இரண்டு புலம்பெயர்ந்தோர் குடும்பங்களைச் சந்தித்தார். சிரியாவில் இருந்து புலம்பெயர்ந்துள்ள ஒரு கிறிஸ்தவக்குடும்பம் மற்றும் ஜிபூத்தியில் இருந்து புலம்பெயர்ந்துள்ள ஒரு முஸ்லீம் குடும்பம் என இரு குடும்பத்தாரைச் சந்தித்தார். இவ்விரு குடும்பங்களும் சன் எஜிதியோ சமூகத்தாரால் வரவேற்கப்பட்டு பெல்ஜியத்தை வந்தடைந்துள்ளனர். இவ்விரு குடும்பங்களையும் சந்தித்த திருத்தந்தை மதிய உணவினை திருப்பீடத்தூதரகத்தில் உண்டு இளைப்பாறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 செப்டம்பர் 2024, 12:14