வாரம் ஓர் அலசல் - படைப்பின் அக்கறைக்கான உலக செப நாள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இவ்வுலகில் உள்ள எல்லாவற்றையும் படைத்த இறைவன் அதனைப் பேணிப்பராமரிக்கவே மனிதர்களாகிய நம்மையும் படைத்தார். இயற்கையை நாம் செழிக்க வைத்தால், இயற்கை நம்மை செழிக்க வைக்கும். மாறாக இயற்கையை நாம் அழிக்க நினைத்தால் அந்த இயற்கை நம்மை அழித்து விடும். காடுகளாக பச்சைப்பசேலென இருந்த உலகை நவீனக் கட்டிடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புக்களாக மாற்றினான் மனிதன். அவன் சுகபோகமாக வாழ இயற்கையை அழித்தான். இறுதி வரை பொறுமை காத்த நிலம் தன் சூழல் உணர்ந்து தன்னைத்தானே குலுக்கியது. பூகம்பமாக மாறி கட்டிடங்கள் ஒன்றின்மேல் ஒன்று சரிந்தன. காலநிலை மாற்றங்களின் சீற்றங்கள் அதிகரித்தன. மாறிவரும் கலாச்சார சூழலைக் கருத்தில் கொண்டு நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையை நாம் பாதுகாத்தால் மட்டுமே நமக்கு இனிமையான வாழ்க்கை உண்டு என்பதை நாம் நினைவில் கொண்டு வாழ அழைக்கப்படுகின்றோம்.
இயற்கையை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நாளை படைப்பின் மீதுள்ள அக்கறைக்கான செப நாளாக திருஅவை கொண்டாடி மகிழ்கின்றது.
2025-ஆண்டிற்கான கருப்பொருளாக அமைதி மற்றும் எதிர்நோக்கின் விதைகள் என்பதை ஏப்ரல் 8ஆம் நாளன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார். அவ்வகையில்
இறைவாக்கினர் எசாயா நூலின் 32ஆம் பிரிவின் 14 முதல் 18 வரையுள்ள வரிகளிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டிற்கான தலைப்பாக ‘அமைதி மற்றும் எதிர்நோக்கின் விதைகள்' என்பதை எடுத்துள்ளார்.
நம் பொதுவான இல்லம் குறித்த அக்கறைக்கு அழைப்புவிடுக்கும் Laudato si’ என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சுற்றுமடல் வெளியிடப்பட்டதன் 10ஆம் ஆண்டு இந்த 2025 யூபிலி ஆண்டில் இடம்பெறுவதை முன்னிட்டு இவ்வாண்டிற்கான தலைப்பாக, ‘அமைதி மற்றும் எதிர்நோக்கின் விதைகள்' என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.
படைப்பின் மீதான அக்கறைக்கான உலக செப நாள் செப்டம்பர் முதல் தேதி சிறப்பிக்கப்பட்டு, இயற்கையின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த புனித பிரான்சிஸ் அசிசியின் திருவிழாவான அக்டோபர் 4ஆம் தேதி வரை படைப்பிற்கான கிறிஸ்தவ ஒன்றிப்பு மாதம் சிறப்பிக்கப்படுகிறது. படைப்பிற்கான அக்கறையும் அமைதியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்பதை திருத்தந்தையர்கள் தங்களின் பல்வேறு சுற்றுமடல்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட உலகம் அல்லது தரத்தாழ்ந்த போருக்கும் இடையேயுள்ள நெருங்கிய தொடர்பினால் பாதிக்கப்படும் நாம் ஒவ்வொருவரும், எதிர்நோக்கினை நம்மில் வளர்க்க உதவும் வகையில் நீடித்த, நிலைத்த அமைதியை உருவாக்க ஒவ்வொருவரும் இறைவேண்டலில் ஈடுபடவேண்டிய காலமே இக்காலமாகும். விதை என்பது நம் நீண்ட கால அர்ப்பணத்தைக் குறிக்கும். எனவே அனைத்துக் கண்டங்களிலும் அமைதியின் விதைகள் முளைக்கும் என்பதற்கேற்ப இந்த செப நாளுக்கானக் கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு நிசேயாவின் திருச்சங்கத்தின் 1700 வது ஆண்டு நிறைவு மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறைவா உமக்கே புகழ் சுற்றுமடல் வெளிவந்ததன் 10ஆம் ஆண்டு ஆகியவற்றை சிறப்பிக்கும் பொருட்டு, படைப்பின் மீதான அக்கறைக்கான செபநாளானது கடைபிடிக்கப்படுகின்றது., செப்டம்பர் 1 திங்களன்று படைப்பின் மீதான அக்கறைக்கான செப நாளை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் செபத்தில் இணைகின்றார்கள், ஏனெனில் படைப்பிற்கான செப நாளில் வாழ்வது என்பது சுற்றுச்சூழல் மாற்றத்திற்காக பாடுபடும் உலகெங்கிலும் உள்ளவர்களின் பல முயற்சிகளில் சேர்வதற்கான ஒரு வாய்ப்பாகும். படைப்பிற்கான செப நாள் மற்றும் காலம் என்பது ஆண்டுதோறும் செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 4 வரை, அதாவது இயற்கை மேல் அளவற்ற அன்புகொண்ட புனித பிரான்சிஸ் அசிசியின் திருவிழா வரைக் கொண்டாடப்படும் ஒரு கிறிஸ்தவ முயற்சியாகும். இம்முயற்சியானது இறைவா உமக்கே புகழ் அமைப்பு, தலத்திருஅவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு சங்கங்கள், லூத்தரன் உலக கூட்டமைப்பு மற்றும் ஆங்கிலிகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் ஊக்குவிக்கப்பட்டு ஆதரிக்கப்படுகிறது.
1989 - ஆம் ஆண்டில், கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான முதுபெரும்தந்தை முதலாம் திமிதிரியோஸ் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்காக படைப்பிற்கான உலக செப நாளாக செப்டம்பர் முதல் நாளினை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, உலக கத்தோலிக்க திருஅவைகள் மன்றம் (WCC) இந்த கொண்டாட்டத்தை அக்டோபர் 4 வரை நீட்டித்தது. 2015-ஆம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் “லௌதாதோ சி' “இறைவா உமக்கே புகழ்” என்ற சுற்றறிக்கையை வெளியிட்டு, பின்னர் "படைப்பின் அக்கறைக்கான உலக செப நாளை" நிறுவினார். மேலும் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "அமைதி மற்றும் எதிர்நோக்கின் விதைகள்" என்பதை தேர்ந்தெடுத்தார். மேலும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், படைப்பின் அக்கறைக்கான Missa pro custodia creationis என்ற திருப்பலி ஆணையினையும் அறிவித்தார். ஜூலை 9 அன்று காஸ்தல் கந்தோல்போவில் உள்ள போர்கோ லௌதாதோ சியில் இந்த திருப்பலியை நிறைவேற்றினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த ஆண்டு கொண்டாட்டங்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஆர்த்தடாக்ஸ் மற்றும் பிற கிறிஸ்தவ தலத்திருஅவைகளை ஒன்றிணைக்கும் அமைப்பான உலக கத்தோலிக்க திருஅவைகள் மன்றமானது, இந்த நாளின் வரலாறு மற்றும் அடையாளங்கள் பற்றிய புதிய காணொளியை வெளியிட்டுள்ளது.
படைப்பின் அக்கறைக்கான செப நாள் மற்றும் காலமானது, உலகெங்கிலும் உள்ள பல்வேறு கிறிஸ்தவ தலத்திருஅவைகள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து, ஆயர் ஹென்ரிச் பெட்ஃபோர்ட்-ஸ்ட்ரோம் தலைமையிலான உலக கத்தோலிக்க திருஅவைகள் மன்றத்தாரால் உலகளவில் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும், படைப்பிற்கான நாளைக் கொண்டாட ஓர் இணையவழி செப வழிபாடானது ஏற்பாடு செய்யப்படுகிறது.
நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்யவும் பணியாற்றவும் இது ஒரு அழகான நேரமாக இச்செப நாள் கருதப்படுகின்றது. படைப்பின் வேதனையான அழுகுரல்களைக் கேட்டு, நாம் மனமாற்றம் பெற்று, நமது வாழ்க்கை முறைகளையும், அழிவுதரும் செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். படைப்பின் குரலை நாம் கேட்கக் கற்றுக்கொண்டால், அந்தக் குரலில் ஒரு அதிருப்தி இருப்பதை நம்மால் காணமுடியும். நம் அன்பான படைப்பாளரைப் புகழ்ந்து பாடும் ஒரு இனிமையான பாடலையும் அக்குரலில் கேட்கலாம். அந்த இனிமையான பாடலின் வேதனையில் ஐந்துவிதமான அழுகுரல்களும் சேர்ந்துள்ளன என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1. நம் பூமித் தாய் கதறி அழுகிறாள். நமது நுகர்வோரின் அத்துமீறல்களுக்கு இரையாகி அவள் அழுவதுடன், நம் தவறான பயன்பாடுகளுக்கும் அவளது அழிவுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்படி கெஞ்சுகிறாள்.
2. புவியிலுள்ள வெவ்வேறு உயிரினங்கள் அனைத்தும் கதறி அழுகின்றன. குரலெழுப்ப முடியாத எண்ணற்ற உயிரினங்கள் அழிந்து வருவதோடு அவற்றின் புகழ்ச்சிப் பாடல்கள் மௌனமாக்கப்படுகின்றன.
3. கதறி அழும் ஏழைகளும் நம்மிடையே இருக்கிறார்கள். காலநிலை நெருக்கடிக்கு ஆளான இத்தகைய ஏழை மக்கள், வறட்சி, வெள்ளம், சூறாவளி மற்றும் வெப்பக் காற்றின் தாக்கத்தை இன்னும் தீவிரமாக உணர்ந்தவர்களாய் வேதனைக் குரல்களில் கதறி அழுகிறார்கள்.
4. பூர்வீக மக்களின் சகோதரர் சகோதரிகளும் கதறி அழுதுக் கொண்டிருக்கின்றனர், கொள்ளையடிக்கப்படும் பொருளாதார நலன்களின் விளைவாக, அவர்களின் மூதாதையர் நிலங்கள் எல்லாப் பக்கங்களிலும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருவதால் அவர்களின் அழுகுரல்கள் விண்ணை நோக்கி எழுகின்றன.
5. தொலைநோக்கு மற்றும் சுயநலச் செயல்பாடுகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளதை உணர்ந்து, இன்றைய நம் குழந்தைகளும் இளையோரும் கதறி அழுகிறார்கள். சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுக்கவோ அல்லது குறைந்தபட்சம் அதனைக் கட்டுப்படுத்தவோ முடிந்த அனைத்தையும் செய்யுமாறு பெரியவர்களாகிய நம்மை ஆர்வத்துடன் கேட்கிறார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” (மத் 3:2) என்ற இயேசுவின் வார்த்தைகளை எடுத்துக்காட்டி படைப்பின் வேதனையான அழுகுரல்களைக் கேட்டு, நாம் மனமாற்றம் பெற்று, நமது வாழ்க்கை முறைகளையும், அழிவுகரமான செயல்படுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். நமது இந்த மனமாற்றம் தனிப்பட்ட விதத்திலும் குழும நிலையிலும் நிகழவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளுக்கிணங்க நாமும் வாழ முயல்வோம். இயற்கையைப் போற்றி வணங்கி பாதுகாத்து பராமரித்து வாழ்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்