அன்னை மரியா உயர்மறைமாவட்ட இணைய வழி செபக்குழுவின் நான்காம் ஆண்டு
மெரினா ராஜ் - வத்திக்கான்
2021-ஆம் ஆண்டு மே 24 அன்று தொடங்கப்பட்ட முதல் தினசரி இணையவழி செப வழிபாடானது இளைஞர்களிடையே ஆர்வத்தையும் செப மனப்பான்மையையும் ஏற்படுத்தி நான்கு ஆண்டுகளைக் கடந்து சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.
ஆகஸ்டு மாதத்தின் இறுதியில் இணைய வழி செபவழிபாட்டின் 1550-ஆம் நாள் நிறைவுக் கொண்டாட்டம் சென்னை சாந்தோம், புனித தோமையார் தேசிய திருத்தலப் பேராலயத்தில் சென்னை - மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் தலைமையில் ஆடம்பர திருப்பலியுடன் நடைபெற்றது.
தொடர்ந்து ஜந்தாம் ஆண்டு நோக்கி செபித்து மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ள இச்செபக்குழுவானது பல செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளது. 2021, 2022, 2023, 2024 ஆகிய நான்கு ஆண்டுகள் 24 மணி நேர தொடர் செபமாலை நடத்தி இளைஞர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. அன்னையின் அரவணைப்பில் எனும் நிகழ்வை 2022, 2024, 2025 ஆகிய மூன்று ஆண்டுகள் நடத்தி, மரியன்னையின் பக்தியை பரப்பியதோடு, அன்னையின் சுரூபம் அனைத்து மறைவட்டங்கள் வாரியாக சென்று அனைத்து பங்கு இளைஞர்களையும் செபிக்க வைத்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணைய வழி செபவழிபாட்டின் 1550 நாள் நிறைவுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட தனிநபர் பாடல் போட்டி, சுவரொட்டி தயாரித்தல் ( Poster Making), குறுகிய வீடியோ (Reels), நிழற்படம் எடுத்தல் (Photography) ஆகிய போட்டிகளுக்கான பரிசுகளும் அன்று வழங்கப்பட்டன. இத்தகைய பல சிறப்புகளைக் கொண்ட செபக்குழுவில் தலைவி செல்வி. அஸ்வினி ஆரோக்யா, துணைத்தலைவர் செல்வன். பெர்னார்ட் பிரவீன், உறுப்பினர்களான செல்வன். சரண்ராஜ், செல்வன். ரூபக் ரோசாரியோ, செல்வி. ரீட்டா, செல்வி. ஐஸ்வர்யா, செல்வன். மைக்கேல், செல்வி. நட்டாலியா, செல்வி. ஷாலினி, செல்வி. சோபியா, செல்வன். கிளாடியஸ், செல்வன். ரொமுலஸ், செல்வன். பிலிப் ஆலன், செல்வி. சார்மி, செல்வி. செர்லி, செல்வி. வினோலி ஆகிய 16 நபர்கள் தற்போது இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழுவினரின் முயற்சிக்கு ஒத்துழைப்பாய் இளைஞர் இயக்குநர் அருட்பணி. ரொணால்டு ரிச்சர்டு திறம்பட செயலாற்றி வருகிறார்.
அன்னை மரியா உயர்மறைமாவட்ட செபக்குழு கடந்து வந்த பாதை
அழகு தமிழகத்தின் தொண்டை நாட்டின் வடக்கில், வங்காள விரிகுடா கடற்கரை முதல் திருத்தணியின் குறிஞ்சி மலைகள் வரை அமைவிடம் கொண்டதே சென்னை மயிலை உயர்மறைமாவட்டம். இதில் 1971- ஆம் ஆண்டு இளைஞர் பணிக்குழு ஆரம்பித்ததன் விளைவாக பல இளைஞர்கள் பங்கு அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட ஆரம்பித்தனர். இவ்வாறாக பல குருக்கள் இளைஞர் இயக்குநர்களாய் செயலாற்றி, தான் ஏற்ற பணியில் தடம் பதித்து சென்றுள்ளனர். மேலும், 2021 ஆண்டு இளைஞர் இயக்குநராய் பொறுப்பேற்றார் அருட்பணி. ரொனால்டு ரிச்சர்டு அவர்கள், பொறுப்பேற்றதும் மாபெரும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினார். மூன்றே ஆண்டுகளில் முத்தலைமுறைப் பேசும் அளவிற்கு எண்ணற்ற செயல்பாடுகள். இளைஞர்களை உற்சாகப்படுத்த பங்கு தோறும் தினசரி செபமாலை, தினசரி திருப்பலி சவால், எடைக் குறைப்பு சவால் போன்ற எண்ணற்ற சவால்கள்! இளைஞர்களின் திறமைகளை மெருக்கேற்ற செபக்குழு, ஊடகக் குழு, பாடகர் குழு, நடனக் குழு, பேச்சாளர் குழு, அச்சாக்கக் குழு, அரசியல் குழு போன்ற பல குழுக்களை ஆரம்பித்தார். மிகக் குறிப்பாக இளைஞர் பணிக்குழு வரலாற்றிலேயே நம் மறை மாவட்டத்திலுள்ள 132 பங்குகளின் இளைஞர் குழுவை தமிழக கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தில் பதிவு செய்ய வைத்தது இதுவே முதல் முறை. வாரம்தோறும் வெவ்வேறு பங்குகளில் பல விளையாட்டு போட்டிகள், விவிலிய போட்டிகள் என இளைஞர்களை என்றுமே துடிப்புடன் வைத்துக் கொண்டு அவர்களின் பணியில் 50% இறைப்பணிக்கும் 30% சமூக பணிக்கும் 20% கலாச்சார பணிக்கும் தயாரிக்க வழிவகுத்தார்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பொறுப்பேற்ற அருட்தந்தை. ரொணால்டு ரிச்சர்டு அவர்களால், இளைஞர்களை துடிப்போடு உற்சாகமாய் வைத்துக் கொள்ளவும், செபத்தில் வளர்த்தெடுக்கவும், 2021 மே 16 அன்று தொடங்கப்பட்டதே இந்த செபக்குழு. குழுவை வழிநடத்த தன்னார்வமாய் தலைவராக பொறுப்பேற்றார் செல்வன். ரெஜிலன் அவர்கள்.
இன்று அனைத்து பங்கு இளைஞர்களும் இந்த அளவுக்கு அனைத்து காரியங்களிலும் ஈடுபாட்டுடன் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட செபக்குழு அடித்தளமிட்ட செயல்பாடுகளே...
2021 மே 24 அன்று முதல் தினசரி இணையவழி செப வழிபாடு துவங்கியது.
செப வழிபாடு தொடங்கி நூறு நாள் ஆனது... இருநூறு நாள் ஆனது... ஓராண்டும் நிறைவுப் பெற்றது.... 550 வது நாள் கொண்டாட்டமும் முடிந்தது.... தற்போது 4 ஆண்டுகளை கடந்து ஆயிரமாவது நாளை எட்டிப்பிடித்து, ஆயிரத்து ஐநூற்று ஐம்பதாவது நாளையும் ஆகஸ்டு 23 அன்று தொட்டு மகிழ்ந்து, தொடர்ந்து ஜந்தாம் ஆண்டு நோக்கி செபித்து வருவது இக்குழுவின் மாபெரும் சாதனை.
நம் உயர்மறைமாவட்டத்தின் கடைக்கோடி பங்கிற்கும் செபக்குழுவின் இறைப்பணி சென்றடைய 2021 - ஆம் ஆண்டு அல்போன்சாபுரம் மறைவட்ட பங்குகளுக்கு திருயாத்திரை, 2022 ஆம் ஆண்டு எழும்பூர் மறைவட்டத்திற்கு சென்று தவக்கால சிலுவைப்பாதை, இணைய வழியில் "அழகோவியமே" எனும் பெயரில் பேச்சு, கவிதை ஓவியம், பாடல் ஆகிய போட்டிகளை நடத்தி இளைஞர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்துவித நபர்களையும் அதிக எண்ணிக்கையில் பங்குப் பெற வைத்தது இக்குழுவின் மிக முக்கிய சிறப்பு..
இவை எல்லாவற்றையும் தாண்டி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, ஒரு குழு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கெல்லாம் இக்குழுவை விட வேறென்ன சான்றாக இருக்க முடியும்?
ஏனென்றால் இக்குழுவுக்கென்று ஒரு சில தனிப்பட்ட தனித்துவ பண்புகள் இருக்கிறது. முக்கியமாக இக்குழுவின் செயற்குழு உறுப்பினரை தேர்ந்தெடுக்க, சிறப்பு நேர்காணல், அந்த நபரைப் பற்றிய பின்புலம் ஆகியவைகளைக் கொண்டே அவர் செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்படுகிறார். தங்கள் தனித்திறமையால், ஈடுபாட்டால் தடம் பதித்து இந்நாள் வரை பலர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இளைஞர் பணிக்குழுவின் செயல்பாடுகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், ஒற்றுமையோடு செயல்படுத்துவதிலும் செபக்குழு முக்கிய அங்கமாய் இருக்கின்றது.
மேலும் இக்குழுவில் இருப்பவர்கள் வெவ்வேறு பங்கைச் சார்ந்தவர்கள், பலதரப்பட்ட வயது பிரிவினர். இருப்பினும் பதவி, பொறுப்புகள் என எதுவாக இருப்பினும் அவர்களுக்குள் எவ்வித பாகுபாடுகளும் இருப்பதில்லை...
குறிப்பாக இந்த குழுவிற்கென்று தனிப்பட்ட நிர்வாக அமைப்பு என ஒன்று இருக்கிறது. அது வித்தியாசமானது. விசித்திரமானது. அதாவது "சர்வாதிகார கூட்டாட்சி" என சொல்வார்கள்... ஆங்கிலத்தில் Authoritarian federalism ( அத்தாரிடேரியன் பெடரலிசம்) என்பதாகும். ஜனநாயகம் அல்லாது ரஷ்யா, அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் பின்பற்றப்படும் ஆட்சி முறையாகும்.
இத்தகைய கொள்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களே இக்குழு நான்காண்டுகளாக வேகம் குறையாமல் சிறப்புற செயல்பட முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
அதோடு நின்றுவிட வில்லை இக்குழு. இளைஞர்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காய் மூன்று உறுப்புக் குழுக்களை செபக்குழு தன்னகத்தை வைத்துள்ளது.
வேலை வாய்ப்பிற்கு வழிகாட்ட...... கிறிஸ்து வேலைவாய்ப்பு குழுமம். மென்பொருளோடு விளையாட...... ஆசீர்வதிக்கப்பெற்ற கார்லோ தொழில்நுட்பக் குழு.....
சமூக வலைதளத்தோடு சிந்திக்க மற்றும் செயல்படுத்த....... புனித பிரான்சிஸ் சலேசியார் இலக்கமுறை செயற்பாட்டுக்குழு...
செபக்குழு மற்றும் மூன்று உறுப்புக் குழுக்கள் என அனைத்தும் சிறப்பாக இளைஞர்களின் வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்கிறது....
இளைஞர் பணிக்குழு பொறுப்பாளர்கள் மாறினாலும், ஆட்சியே மாறினாலும் இக்குழு என்றென்றும் மாறாமல் தங்களுக்கென தனி சாம்ராஜ்யம் அமைத்து தன் முத்திரையை பதித்துள்ளது.....
மிக முக்கியமாக நம் பணிக்குழுவின் தாரக மந்திரத்திற்கு சொந்தக்காரராய், ஒய்வறியா இளைஞனாய், நம் அனைவருக்கும் ஒரே வழிகாட்டும் நல் மேய்ப்பராய் திகழும் நம் பாசமிகு பேராயர் மேதகு. ஜார்ஜ் அந்தோணிசாமி ஆண்டகை அவர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை உங்கள் அனைவரின் சார்பாக உரித்தாக்குகின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்