தடம் தந்த தகைமை – அரசர் சாலமோன் பெற்றிருந்த செல்வ வளம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அரசர் சாலமோனின் பானபாத்திரங்கள் அனைத்தும் பொன்னாலானவை; “லெபனோன் வனத்தில்” இருந்த எல்லாக் கலன்களும் பசும் பொன்னால் ஆனவை. சாலமோனின் காலத்தில் வெள்ளிக்கு எத்தகைய மதிப்பும் இல்லை. அரசரின் கப்பல்கள் ஈராமின் பணியாளருடன் தர்சீசுக்குச் சென்று வரும்; மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தர்சீசிலிருந்து கப்பல்கள் பொன், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்தன. செல்வத்திலும் ஞானத்திலும் அரசர் சாலமோன் உலகின் மற்ற மன்னர்களைவிடச் சிறந்து விளங்கினார். கடவுள் சாலமோனின் அறிவுக்கு அருளிய ஞானத்தை நேரில் கேட்க உலகின் எல்லா மன்னர்களும் அவரை நாடி வந்தனர். அவர்கள் ஆண்டுதோறும் வெள்ளியாலும் பொன்னாலுமான பொருள்கள், பட்டாடைகள், படைக்கலன்கள், நறுமணப் பொருள்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொண்டு வந்தனர்.
சாலமோன் குதிரைகளுக்கும் தேர்களுக்குமாக நாலாயிரம் கொட்டில்களையும், பன்னீராயிரம் குதிரை வீரர்களையும் கொண்டிருந்தார்; தேர்களைத் தேர்ப்படை நகர்களிலும் தம்முடன் எருசலேமிலும் நிறுத்தி வைத்திருந்தார். அவர் பேராறு முதல் பெலிஸ்தியர் நாடு வரையிலும், எகிப்திய எல்லைமட்டும் இருந்த எல்லா மன்னர்கள்மேலும் அதிகாரம்செலுத்தினார். எருசலேமில் வெள்ளி கற்களைப் போன்றும், கேதுரு மரங்கள் பள்ளத்தாக்கின் அத்தி மரம் போன்றும் ஏராளமாகக் கிடைக்கும்படி செய்தார். அவர்கள் எகிப்திலிருந்தும், மற்ற எல்லா நாடுகளிலிருந்தும் சாலமோனுக்குக் குதிரைகளைக் கொண்டு வந்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்