கடவுளின் கைவேலைப்பாட்டைப் பராமரிக்க ஊக்குவிக்கும் நாள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
படைப்பாளராம் கடவுளைப் புகழ்ந்து பேசுவதற்கும், கிறிஸ்துவில் படைப்பின் பெரிய மறைபொருளை நினைவுகூருவதற்கும், கடவுளின் கைவேலைப்பாட்டைப் பராமரிக்க கிறிஸ்தவர்களாகிய நம்மை ஊக்குவிப்பதற்குமான நாள் படைப்பின் அக்கறைக்கான செப நாள் என்று கூறியுள்ளார் ஆயர் ஜெரார்தோ அல்மினாஷா.
செப்டம்பர் 1, திங்களன்று சிறப்பிக்கப்பட்ட 10ஆவது ஆண்டு படைப்பின் அக்கறைக்கான செப நாளை முன்னிட்டு, "படைப்பிற்கான நாள்: ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவையின் விலைமதிப்பற்ற பரிசு" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் பிலிப்பீன்ஸின் தூய சார்லஸ் மறைமாவட்டத்தின் ஆயரும் பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் சமூக மேய்ப்பு ஆணையத்தின் தலைவருமான ஆயர் ஜெரார்டோ அல்மினாசா.
படைப்பின் மீதுள்ள அக்கறைக்கான செப நாள் கொண்டாடப்படுவது பெரும்பாலான கத்தோலிக்கர்களுக்கு உலக மக்களுக்குப் புதிதாக இருந்தாலும் பிலிப்பீன்ஸ் மக்களுக்கு அது பழக்கப்பட்ட ஒன்றே என்று கூறியுள்ள ஆயர் அல்மினாஷா அவர்கள், பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையானது 2003-ஆம் ஆண்டிலேயே படைப்பிற்கான நாளைக் கொண்டாட ஊக்குவிக்கத் தொடங்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
படைப்பிற்கான நாளை கத்தோலிக்க விசுவாசிகளுக்கு அறிமுகப்படுத்தவும், எல்லாம் வல்ல அன்பான படைப்பாளரின் விலைமதிப்பற்ற பரிசான 'படைப்பை' அங்கீகரிக்கவும் விரும்புகிறோம் என்று வலியுறுத்தி உலகளவில் இச்செப நாளை சிறப்பிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்ததிலிருந்து அதன் வேகம் இன்னும் அதிகரித்துள்ளது என்றும் இது மிகவும் பிரபலமாகவும் பரவலாகவும் மக்களிடயே மாறிவிட்டது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
பல பத்தாண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் படைப்பிற்கான நாள் ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவையிலிருந்து வந்த நம்பமுடியாத விலைமதிப்பற்ற பரிசாக இருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள ஆயர் அல்மினாஷா அவர்கள், படைப்பிற்கான நாள் ஒரு மேய்ப்புப்பணிக்கான பரிசு மற்றும் ஒரு இறையியல் வழிபாட்டுக்கான பரிசு என்றும் எடுத்துரைத்துள்ளார்.
நமது சுற்றுச்சூழல் அமைப்புகளின் உள்ளூர் அழிவு குறித்து கவலைப்படுவது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, உலகளாவிய காலநிலை அவசரநிலை மற்றும் அது நமது தீவுகளை எவ்வாறு அழிக்கின்றது என்பது குறித்தும் பிலிப்பீன்ஸ் மக்கள் கவலைப்படுவதாகவும், அண்மையில் அடிக்கடி நிகழும் மிகவும் ஆபத்தான சூறாவளிகள் நமது காலநிலையை மனிதர்கள் சீர்குலைப்பதால் ஏழைகளை கடுமையாக பாதிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார் ஆயர்.
படைப்புடன் நமது உடைந்த உறவை குணப்படுத்த படைப்பு நாள் உதவுகிறது என்றும், இது உலகளாவிய தெற்கில் நம்மில் பலருக்கு இருத்தலியல் மேய்ப்புப் பணியாகவும் விளங்குகின்றது என்று கூறியுள்ள ஆயர் அல்மினாஷா அவர்கள், படைப்பு நாள் என்பது ஒரு இறையியல் பரிசு, இது ஆர்த்தடாக்ஸ் வழிபாடானது அதன் பண்டைய வேர்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்