திருஅவை சிறப்பிக்கும் உலக சகோதரத்துவக் கூட்டம்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
சகோதரத்துவம் குறித்த அனைத்துலகக் கூட்டம் வருகின்ற செப்டம்பர் 12,13 ஆகிய தேதிகளில் உரோமையின் முக்கியமான பகுதிகளில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோதல்கள், தனிமை, புதிய வடிவிலான வறுமை, சுற்றுச்சூழல் நெருக்கடிகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தொடர்புடைய சவால்கள் நிறைந்த இன்றையக் காலகட்டத்தில், மனிதத்துவத்தின் பொருள் என்ன என்பதை சிந்திப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், உரையாடலுக்கும் அனுபவங்களைப் பகிர்வதற்கும், சகோதரத்துவத்தின் அடிப்படையில் நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கான புதிய பாதைகளை உருவாக்குவதற்குமான ஒரு வாய்ப்பாகவும் இக்கூட்டம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று முதல் நாள் கூட்டத்தில், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை, உள்ளூராட்சி நிர்வாகிகள், கலை மற்றும் இலக்கியம், குழந்தைகள், பொருளாதாரம் மற்றும் நிதி, கல்வி, அரசியல் பயிற்சி, தொழில் முனைவோர், தகவல் தொடர்பு, செயற்கை நுண்ணறிவு, தொழில், சுகாதாரம், விளையாட்டு என 15 தலைப்புகளில் ஆலோசனைக் குழுக்கள் இடம்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் குழு அனுபவம் சகோதரத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு மையங்கள் தொடங்கி, செயற்கை நுண்ணறிவு வரை என அனைத்திற்கும் புதிய பொருளையும் மதிப்பையும் வழங்குவதற்கும் வாய்ப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரத்துவத்தின் புதிய இலக்கணத்தை அனைவரும் ஒன்றாக எழுத உலகிற்கு புதிய மனித நேயக் கூட்டணி தேவை என்றும், நாம் நம்பிக்கையாளர்களாக இருப்பதற்கு முன் மனிதர்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்ற திருத்தந்தை 14- ஆம் லியோ அவர்களின் வார்த்தைகளும் அச்செய்தியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 13-ஆம் தேதி சகோதரத்துவத்தை மையமாகக் கொண்ட இசைநிகழ்ச்சி நடைபெறும் என்றும், இந்நிகழ்வு உலகம் முழுவதும் அருளைப் பரப்புவதற்கான ஒரு யூபிலி நிகழ்வு என்றும் கர்தினால் Mauro Gambetti கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 13, சனிக்கிழமை – உரோமையின் Capitoline Hill-ல் அமைந்துள்ள Hall of the Horatii and Curiatii -ல் சகோதரத்துவத்திற்கான பேரவை (Assembly of Humanity) நடைபெறும் என்றும் இதில் நோபல் பரிசு பெற்றோர் மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், முந்தைய நாளின் ஆலோசனைக் குழுக்களின் பணிகளை ஒருங்கிணைத்து, “இன்றைய காலத்தில் மனிதராக இருப்பதன் அர்த்தம்” என்ன என்பதைக் கண்டறியும் உலகளாவிய ஒருங்கியக்கப் பயணத்தை தொடங்குவதே இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் புனித பேதுரு பெருங்கோவிலின் முதன்மை அருள்பணியாளரும், வத்திக்கான் நகருக்கான திருத்தந்தையின் நிர்வாகப் பிரதிநிதி கர்தினால் Mauro Gambetti அவர்களும்,மனித உரிமை செயல்பாட்டாளரும்,The Elders அமைப்பின் இணை நிறுவனரும் Mozambique, அரசுத்தலைவருமான Graça Machel Mandela, அவர்களும், பிலிப்பீன்ஸ் மற்றும் அமெரிக்க பத்திரிகையாளரும், Rappler நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியுமான, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற Maria Ressa அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் Grace for the World என்னும் உலக புகழ்பெற்ற கலாச்சார சிறப்பு வாய்ந்த அந்த்ரேயா போசெல்லி இசைநிகழ்ச்சியுடன் கூடிய Nova Sky Stories நிறுவனம் வடிவமைக்கும் ட்ரோன்கள் மற்றும் விளக்குகளின் ஆகாயக் காட்சிகளும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 13 மாலையிலான இறுதி நிகழ்ச்சியில் பொதுமக்களும் பங்கேற்கலாம் என்றும், இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்காப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு, திருப்பீடச் செய்தி தொடர்பகத்தின் வழியாக இந்த நிகழ்ச்சியின் அனைத்து விவரங்களும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்