MAP

மிகுதியான செல்வம் ஒருபோதும் வாழ்வு தராது மிகுதியான செல்வம் ஒருபோதும் வாழ்வு தராது  

பொதுக் காலம் 18-ஆம் ஞாயிறு : மிகுதியான செல்வம் ஒருபோதும் வாழ்வு தராது!

நமது அன்றாட ஆன்மிக இறைவேண்டல்களில் தொடர் முயற்சியும், தாழ்ச்சியும் தழைத்தோங்கட்டும்!
பொதுக் காலம் 18-ஆம் ஞாயிறு : மிகுதியான செல்வம் ஒருபோதும் வாழ்வு தராது!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. சஉ 1:2; 2:21-23     II. கொலோ 3: 1-5, 9-11    III. லூக் 12: 13-21)

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் இரத்தன் டாடா அவர்கள், வயது மூப்பு காரணமாக உடல்நிலை மோசமான நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதியன்று மும்பையில் மரணமடைந்தார்.  86வது வயதில் மரணம். அறிவுத்திறன், தொலைநோக்குப் பார்வை மற்றும் பணி நெறிமுறைகளுக்கு பெயர் பெற்றவர் இவர். 2008 ஆம் ஆண்டில், 2000 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் பெற்ற பிறகு, இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் பெற்றார். ரூபாய் 88,556.759 (எண்பத்தெட்டு ஆயிரம் ஐந்நூறு ஐம்பத்து ஆறு கோடி எழுபத்து ஐந்து இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் ரூபாய்) மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருந்த இரத்தன் டாடாவின் மரணத்திற்கு முந்தைய கடைசி வார்த்தைகள். "வணிக உலகில் வெற்றியின் உச்சத்தை அடைந்துள்ளேன். மற்றவர்களின் பார்வையில் என் வாழ்க்கை ஒரு சாதனை. இருப்பினும், வேலையைத் தவிர எனக்கு மகிழ்ச்சி இல்லை. பணம் என்பது நான் பயன்படுத்தும் உண்மை.  இந்த நேரத்தில், மருத்துவமனை படுக்கையில் படுத்து, என் வாழ்நாள் முழுவதையும் நினைவில் வைத்துக் கொள்ளும்போது, நான் பெருமைப்பட்ட அடையாளமும் பணமும் மரணத்திற்கு முன் பொய்யாகவும் மதிப்பற்றதாகவும் மாறிவிட்டன என்பதை உணர்கிறேன். உங்கள் காரை ஓட்டுவதற்கு அல்லது பணம் சம்பாதிப்பதற்கு நீங்கள் ஒருவரை வாடகைக்கு எடுக்கலாம். ஆனால், கஷ்டப்பட்டு சாவதற்கு யாரையும் வேலைக்கு அமர்த்த முடியாது.  இழந்த பொருள்கள் கிடைக்கலாம். ஆனால் தொலைந்தால் கண்டுபிடிக்க முடியாத ஒன்று இருக்கிறது - அதுதான் "வாழ்க்கை".  வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருந்தாலும், காலப்போக்கில் இதயம் நின்றுவிடும் நாளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.   உங்கள் குடும்பம், மனைவி மற்றும் நண்பர்களை நேசியுங்கள். அவர்களை நன்றாக நடத்துங்கள், அவர்களை ஏமாற்றாதீர்கள், ஒருபோதும் நேர்மையற்றவர்களாகவோ அல்லது துரோகம் செய்பவர்களாகவோ இராதீர்கள்.  

நாம் வயதாகி, புத்திசாலியாக மாறும்போது, 300 அல்லது 3000 அல்லது 2 முதல் 4 இலட்சம் மதிப்புள்ள கடிகாரத்தை அணிவது - எல்லாமே ஒரே நேரத்தை காட்டுகிறது என்பதை படிப்படியாக உணர்கிறோம்.  நம்மிடம் 100 அல்லது 500 ரூபாய் பர்ஸ் இருந்தாலும் - உள்ளே இருக்கும் அனைத்தும் ஒன்றுதான்.  5 இலட்சம் மதிப்புள்ள காரை ஓட்டினாலும் சரி, 50 இலட்சம் மதிப்பிலான காரை ஓட்டினாலும் சரி. பாதையும் தூரமும் ஒன்றுதான், நாம் ஒரே இலக்கை அடைகிறோம். நாம் வசிக்கும் வீடு, அது 300 சதுர அடியாக இருந்தாலும் சரி, 3000 சதுர அடியாக இருந்தாலும் சரி - தனிமை எல்லா இடங்களிலும் ஒன்றுதான்.  உங்கள் உண்மையான உள் மகிழ்ச்சி இந்த உலகத்தின் பொருள்களிலிருந்து வரவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.  நீங்கள் முதல் வகுப்பில் இருந்தாலும் சரி, ecconamy என்ற சாதாரண வகுப்பில் இருந்தாலும் சரி, விமானம் கீழே விழுந்தால், நீங்களும் கீழே இறங்குவீர்கள்.  எனவே.. உங்களுக்கு நண்பர்கள், சகோதரர் சகோதரிகள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன், நீங்கள் யாருடன் பேசுகிறீர்களோ, சிரிக்கிறீர்களோ, பாடுகிறீர்களோ, மகிழ்ச்சி மற்றும் துக்கத்தைப் பற்றி பேசுகிறீர்களோ அதுதான் உண்மையான மகிழ்ச்சி!  பணக்காரர் ஆவதற்காக உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்காதீர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொடுங்கள். அவர்கள் வளரும்போது, பொருள்களின் விலையை அல்ல, அதன் மதிப்பை அறிவார்கள்.

பொதுக்காலத்தின் 18-ஆம் ஞாயிறை நாம் இன்று சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் எவ்வித பொருளாசைக்கும் இடம் கொடாதவாறு வாழ்வதற்கு நமக்கு அழைப்புவிடுகின்றன. இன்றைய முதல் வாசகம், "வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்; ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன?" என்று வாழ்வின் நிலையாமைக் குறித்து கேள்வி எழுப்புகிறது. இந்த இறைவார்த்தைகள் நமது வாழ்வை தவறாக சித்தரிக்கவில்லை, மாறாக, இந்த உலகமும், அதில் நாம் சேர்த்து வைக்கும் செல்வங்களும் நிலையற்றவை என்பதையும், என்றும் நிலையான செல்வமாகிய கடவுளை மட்டுமே உண்மைச் செல்வமாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன. மேலும் கடவுளை மறந்து இவ்வுலகச் செல்வங்கள்மீது மனதைப் பதிக்கும் ஒருவருக்கு, "வாழ்நாளெல்லாம் துன்பம்; வேலையில் தொந்தரவு; இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியின்மை ஏற்படும்" என்று எச்சரிக்கும் விதமாகவே, "எல்லாமே வீண்" என்று உரைக்கிறது. மேலும், இதே கருத்தை வேறுவழியில் உரைக்கும் விதமாகவே இன்றைய இரண்டாம் வாசகத்தில், "நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில், நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்" என்று கூறும் புனித பவுலடியார், "உலகப்போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்" என்றும் எச்சரிக்கின்றார். மேலும் நாம் கிறிஸ்துவின் புதிய இயல்பை அணிந்திருக்கின்றோம் என்றும் எடுத்துக்காட்டுகின்றார்.

இன்றைய நற்செய்தியில், 'அறிவற்ற செல்வனின் உவமை' வழியாக, கடவுளை மட்டுமே உண்மைச் செல்வமாகத் தேடவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் இயேசு. இந்தப் பகுதி ஒத்தமை நற்செய்திகளில் லூக்காவில் மட்டுமே இடம்பெறுகிறது. கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” என்றார் என்றுதான் இன்றைய நற்செய்தி தொடங்குகிறது. 'கூட்டத்திலிருந்து ஒருவர்' என்று லூக்கா கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, கட்டாயம் அவர் ஒரு பெரும் பெரும் பணக்காரராகவோ அல்லது நிலபுலன்களை அதிகம் கொண்டவராகவோ இருந்திருக்கக் வாய்ப்புண்டு. அடுத்து, அவர் அந்த ஆளை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என்று கேட்டார் என்ற வார்த்தைகளில் 'அந்த ஆளை நோக்கி' என்பது சற்று மதிப்பற்ற நிலையை எடுத்துக்காட்டுகிறது. செல்வங்களுக்கு மட்டுமே மதிபளிபவர்கள், மனிதர் என்ற உயர் மதிப்பை இழந்துவிடுகின்றனர் என்பதையே இச்சொல் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, 'அந்த ஆளைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்படாதே' என்று சொல்வதற்கும், 'அவரைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்படாதே' என்று கூறுவதற்கும் வேறுபாடு இருக்கிறது அல்லவா? அதன் அடிப்படையில் இந்த வார்த்தையை நாம் கணிக்கலாம். அடுத்து முக்கிமாக, "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்று மக்கள் கூட்டத்தை நோக்கி இயேசு கூறும் வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. நமது அன்றாட நடைமுறை வாழ்கையில், “அவரு என்னப்பா பெரிய பணக்காரரு... எந்நேரமும் காசு பணத்திலேயே புரல்றாரு’ என்றும் உனக்கு என்னப்பா ஏகப்பட்ட சொத்துபத்து இருக்கு... உனக்கு ஒரு கவலையும் இல்ல...” என்றும் கூறக் கேட்டிருப்போம். ஆக, ஒருவரிடம் உள்ள பெரும் செல்வத்தைக் கொண்டே அவருடைய வாழ்வை நாம் கணிக்க முடியாது என்ற அர்த்தத்தில்தான் இயேசு இப்படிக் கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்வோம். அடுத்து இயேசு கூறும் அந்தப் பணக்காரனின் வாழ்வு, நாம் சேர்த்து வைக்கும் எதையும் நாம் முழுமையாக அனுபவிக்க முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. நோய்நொடிகள், இரத்த அழுத்தம், மாரடைப்பு, விபத்து போன்றவற்றாலோ, அல்லது சுனாமி, நிலநடுக்கம், பெருவெள்ளம், எரிமலை வெடிப்பு உள்ளிட்டஇயற்கைப் பேரிடர்களாலோ மனிதர் மரணித்தபோது அதில் எத்தனைப் பெரிய பணக்காரர்கள், செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் உள்ளடங்கி இருந்தார்கள் என்பதை எல்லாம் நாம் இக்கணம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அடிப்படையில் ஆசைகள் இருப்பது தவறில்லை, அவைகள் அவசியமானதுதான். நன்றாகப் படிக்க வேண்டும், பெரிய வேலைக்குச் செல்ல வேண்டும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும், நல்ல பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும், பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும், நல்லதொரு வீட்டைக் கட்டிக்கொண்டு வாழ வேண்டும் என்பதெல்லாம் அவசியமான தேவைகள்தாம். ஆனால் இவற்றை அடையவதற்கு நாம் செயல்படுத்தும் முறைகளில்தான் நமது வாழ்வு முறைகள் அடங்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன், தான் படித்து பெரிய மருத்துவர் ஆக வேண்டும் என்று எண்ணுகிறான் எனக் கொள்வோம். எதற்கு என்று கேட்டால், பொருளிள்ளதவர்களுக்கு, இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு என்று கூறுகிறான். இந்த உயர்ந்த இலட்சியம், அவன் மருத்துவர் ஆன பின்பும் தொடர்ந்தால், அவன் படிக்கும் போது கொண்டிருந்த அந்த  “ஆசை“, உண்மையிலேயே உயர்ந்தது எனலாம். ஆனால் நம்மில் எத்தனை ஆசைகள் இப்படி ஆரம்பித்த படியே நீடிக்கின்றன? என்பதையும் நாம் மனச்சான்றுக்கு உட்படுத்த வேண்டும்.

இறுதியாக, "கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே” என்று கூறி இயேசு இந்த உவமையை முடிக்கின்றார். இங்கே 'தமக்காகவே செல்வம் சேர்ப்பவர்' என்று இயேசு கூறும் வார்த்தைகள், விண்ணக வாழ்வுக்கு அல்லது மறுவாழ்வுக்கு உரியவற்றைச் சேர்பவர் என்று பொருள்படுகிறது. இவ்விடத்தில் 'செல்வரும் இலாசரும்' (லூக் 16:19-31) என்ற தலைப்பில் இயேசு கூறும் உவமை குறித்தும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

மேலும் “மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்” (காண்க. மத் 6:19-21) என்று இயேசு கூறுவதும் இதன் அடிப்படையில்தான்.

அவ்வாறே செல்வம் குறித்து அறிவுரை வழங்கும் புனித பவுலடியார், செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள் என்றும், "நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்கவேண்டும். அவர்கள் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக; தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக. "இவ்வாறு, அவர்கள் தங்களது வருங்காலத்திற்கென்று நல்லதோர் அடித்தளமாக இச்செல்வத்தைச் சேமித்துவைப்பதால் உண்மையான வாழ்வை அடைய முடியும்" (1 திமொ 6:9-10, 17-19) என்று கூறுகின்றார்.

சீனாவில் ஒரு கிராமம். அங்கே இருக்கும் மக்கள் எந்த நிலையிலும் அளவுக்கதிகமாகப் பொருட்களைச் சேர்க்க மாட்டார்கள். அதேபோல, தாங்கள் பயன்படுத்திய பொருட்களை சுழற்சி முறையில் பிறருக்குக் கொடுத்து உதவுவார்கள்.  ஒரு பொருளை வெகுகாலத்திற்குப் பயன்படுத்துவது போலத்தான் வாங்கவே செய்வார்களாம். எடுத்துக்காட்டாக, குளிர்பிரதேசத்தில் பெரிய அளவிலான காலணிகளுடன்தான் நடக்க முடியும். பனிப்பொழிவு இருக்கும். தங்கள் குழந்தைகளுக்குக் காலணிகள் வாங்கும்போது, இரண்டு அல்லது மூன்று அளவுகளுக்கும் அதிகமான காலணிகளைத் தான் வாங்குவார்கள். உள்ளுறை (சாக்ஸ்), அதிகமாக வாங்கிக் கொள்வார்கள். முதலில் 3 உள்ளுறைகள் அணிந்து காலணிகள் அணிவார்களாம். பிறகு கொஞ்சம் வளர்ந்ததும் இரண்டு உள்ளுறை அணிவார்கள். அதே போல, இவர்கள் குழந்தைகள் பயன்படுத்த முடியாத அளவு அவை சிறியதானதும், அக்கம்பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவார்கள். இவர்களும் புதிதாக வாங்கும் முன், தங்கள் மகன் / மகளைவிட பெரிய வயதுள்ள குழந்தைகள் அக்கம்பக்கத்தில் இருந்தால், அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, தேவைப்பட்டால் மட்டுமே புதிதாக வாங்குவார்கள். இதனால் அந்தக் கிராமத்தில் திருட்டு என்ற ஒன்றே இல்லையாம். பேராசையற்ற ஊரில் திருட்டுக்கு என்ன தேவை இருக்கப் போகிறது? பேராசையை ஒழிக்க ஒரு எளிய சூத்திரம் பயிலச் சொல்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். நில்... கவனி.. கற்பனை செய்.. அதற்கு மேல் வேண்டாம் என்பதே அது. தொடக்கத்தில் இது மிகவும் கடினமாக இருந்தாலும் பழகிவிட்டால் மிகவும் எளிதாகிவிடும். ஆகவே, எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருப்போம். இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஆகஸ்ட் 2025, 10:31