புலம்பெயர்ந்த பாப்புவா நியு கினி மக்களுக்கு உதவும் கத்தோலிக்க ஆணையம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
பாப்புவா நியு கினி நாட்டில் வாழும் புலம்பெயர்ந்தோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு போதுமான ஆதரவையும் உதவியையும் வழங்குவதற்காகவும், அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் காண்பதற்காகவும் பல செயல்திட்டங்களைச் செய்துள்ளது பன்னாட்டு கத்தோலிக்க புலம்பெயர்ந்தோர் ஆணையம்.
பாப்புவா நியூ கினியில் வாழும் புலம்பெயர்ந்தோர் மற்றும் நாட்டில் வாழும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உதவுவதில் அங்குள்ள கத்தோலிக்கர்கள் அர்ப்பணிப்பு மனநிலையுடன் வாழ்ந்து வருகின்றனர் என்றும், தீவின் பல்வேறு பகுதிகளில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது ஃபீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனம்.
புலம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த வசதிகள் மற்றும் அவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும், நாட்டில் வாழும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு போதுமான ஆதரவையும் உதவியையும் வழங்குவதற்காகவும், ICMC எனப்படும் பன்னாட்டு கத்தோலிக்க புலம்பெயர்ந்தோர் ஆணையமானது ஆய்வு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது ஃபீதேஸ் செய்தி நிறுவனம்.
மேலும், உள்ளூர் சமூகத்தில் புலம்பெயர்ந்தோர் அனைவரையும் ஒருங்கிணைப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் எதிர்காலத் திட்டங்களும் விவாதிக்கப்பட்டு வருகின்றன என்றும், இந்தத் திட்டங்களின் முக்கிய பயனாளிகளாகிய மேற்கு பப்புவாவிலிருந்து வந்த அகதிகள், போர்ட் மோர்ஸ்பிக்கு வந்து தற்காலிக தங்குமிடங்கள் அல்லது நெரிசலான முகாம்களில் வசிக்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளது.
திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ், திருத்தந்தை ஆறாம் பவுல், பொதுநிலையினரான ஜேம்ஸ் ஜே. நோரிஸ் ஆகியோரின் ஆதரவுடன் நிறுவப்பட்ட ICMC ஆனது, இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கத்தோலிக்க அமைப்புகளை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
இவ்வாணையத்தின் உதவிகளைப் பெறும் மக்கள், பெரும்பாலும் 50 முதல் 60 வயதுக்குட்பட்ட தனி நபராக வாழும் ஆண்கள் என்றும், அவர்கள் விறகு மற்றும் காலி கேன்கள், செய்தித்தாள்கள் விற்று உயிர்வாழ்கின்றனர் என்றும், இருப்பினும், வேலை தேடும் பெண்கள், முதியவர்கள் மற்றும் இளைஞர்களும் அவர்க்ள் குழுவில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
ஹோஹோலா அல்லது வைகானி போன்ற போர்ட் மோர்ஸ்பியைச் சுற்றியுள்ள முகாம்களில், பப்புவா நியூ கினியா முழுவதும், மேற்கு பப்புவாவிலிருந்து புலம்பெயர்ந்துள்ள ஏறக்குறைய 10,000 புலம்பெயர்ந்தோர் உள்ளனர் என்றும், ஐக்கிய நாடுகளின் தரவுகளின்படி புலம்பெயர்ந்தோர்களாக பலர் பதிவு செய்யப்பட்டுள்ளனர் மற்றும் சிலர் உள்ளூர் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு இயற்கைமயமாக்கல் செயல்முறை மூலம் பாப்புவா குடியுரிமையையும் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது பீதேஸ். (FIDES)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்