MAP

வெள்ளம் சூழ்ந்துள்ள பாகிஸ்தான் பகுதி வெள்ளம் சூழ்ந்துள்ள பாகிஸ்தான் பகுதி   (ANSA)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வரும் திருஅவை

கிறிஸ்தவ சமூகங்கள், காரித்தாஸ் அமைப்பு மற்றும் தலத் திருஅவை வழியாக உதவி திட்டங்களைத் தொடங்கியுள்ளதோடு, கத்தோலிக்க ஆலயங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை தங்கள் கதவுகளைத் திறந்து உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படை தேவைகளை வழங்குகின்றன.

ஜெர்சிலின் டிக்ரோஸ்  - வத்திக்கான்

பாகிஸ்தானில் தொடர்ச்சியான பருவமழையால் ஏற்பட்ட  வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால், 650-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டின்  வடமேற்கிலுள்ள கைபர் பாக்துன்க்வா மலைப்பகுதிகளின் பல கிராமங்கள் நிலச்சரிவுகள் சிக்கி, புதைந்து பல குடும்பங்கள் அழிந்துவிட்டன என்றும் Fides  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் உதவி நடவடிக்கைகள் கடினமாக உள்ளதாகவும், பல பகுதிகளில் மக்கள் பேரழிவிலும், ஆபத்திலும்  இருப்பதாகவும்  இஸ்லாமாபாத், ராவல்பிண்டி மறைமாவட்டப் பிரதிநிதி  அருள்பணியாளர். அசிஃப் ஜான் கோகார்  அவர்கள் கூறியதாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மாநில அரசுகளும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் இந்தக்  கடினமான சூழ்நிலையில், கிறிஸ்தவ சமூகங்கள், காரித்தாஸ் அமைப்பு  மற்றும் தலத் திருஅவை  வழியாக உதவி திட்டங்களைத் தொடங்கியுள்ளதோடு, கத்தோலிக்க ஆலயங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை தங்கள் கதவுகளைத் திறந்து உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படை தேவைகளை வழங்குகின்றன என்றும் அருள்பணியாளர்.கோகார்  கூறியதா தெரிவித்துள்ளது அச்செய்தி நிறுவனம்.

இந்நிலையில், வெள்ளப்பாதிப்பால் இடம்பெயர்ந்தவர்கள் இஸ்லாமியர்களாக  இருந்தாலும், கிறிஸ்தவர்களாக இருந்தாலும், எவ்வித வேறுபாடும்  இல்லாமல் அனைவருக்கும் தேவையான உதவிகளை வழங்கி வருவதாக, இலாகூர் மறைமாவட்டத்தின்   குஜ்ரன்வாலாவில் உள்ள புனித  ஜோசப்  பங்குத்தளத்தின் அருள்பணியாளர்  பிரான்சிஸ் குல்சார் அவர்கள் கூறியதாக Fides  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஆகஸ்ட் 2025, 12:28