பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
இலாகூரின் தெற்குப் பகுதியில் உள்ள பாய் பேரு பங்கில் வீடுகள், நிலங்கள் என அனைத்தையும் இழந்த 32 குடும்பங்களுக்கு உணவு வழங்கியதாகவும், இந்தத் துயரம் நிறைந்த சூழலில், சாலையோரங்களில் வாழும் அம்மக்களை பராமரிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று அப்பங்கில் பணிபுரியும் கப்புச்சின் சபை அருள்பணியாளர் Qaiser Feroz கூறியதாக Fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும், 15 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர் என்று அருள்பணியாளர் Qaiser Feroz தெரிவித்ததாககவும் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் சட்லெஜ், ரவி, செனாப் ஆகிய நதிகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான கிராமங்களும், விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஏறக்குறைய 2.5 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் உள்ளனர் என்றும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 800 பேர் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளனர் அருள்பணியாளர் Qaiser Feroz குறிப்பிட்டுள்ளதாக Fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனமழை மற்றும் இந்தியப் பகுதியின் அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட கூடுதல் நீர் காரணமாக, சில இடங்களில் அதிகாரிகள் கரையை உடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும், இதன் விளைவாக 1,400-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்றும் தகவலளித்துள்ளது அச்செய்தி நிறுவனம்.
இக்கடினமான சூழலில், அரசு தற்காலிக முகாம்கள் மற்றும் மருத்துவ உதவி மையங்களை அமைத்து இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துப் பொருட்கள் போன்ற அடிப்படை தேவைகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம், மேலும் கூடுதலாக, 2 இலட்சம் கால்நடைகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏறக்குறைய 700 தற்காலிக முகாம்கள் மற்றும் 265 மருத்துவ உதவி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் Fides செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்