அன்னை ஓர் அதிசயம் - பூண்டி புதுமை மாதா திருத்தலம்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பூண்டி, இயற்கை வளமிக்க அழகிய கிராமமாகும். காவிரி நதியின் கரைக்கு அருகில் அமைந்திருப்பதால், இவ்வூர் ஆண்டு முழுவதும் பசுமை நிறைந்ததாக விளங்குகிறது. செழிப்பான நிலங்களைக் கொண்ட பூண்டியில் நெற்பயிர் அதிகம் விளைவதால் நெற்களஞ்சியம் என்று புகழப்படும் தஞ்சை மாவட்டத்தின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது. பசுமை நிறைந்த நெற்பயிரும், செங்கரும்பும், உயர்ந்த தென்னை மரங்களும் சூழ்ந்த சோலைவனமாக பார்போற்ற விளங்குவது தான் பூண்டி எனப்படும் அலமேலுபுரம் பூண்டி ஆகும். இவ்வூரின் இயற்கை வளம் மக்கள் வாழ்க்கையை வளமாக்குவதோடு மட்டுமல்லாது, அங்கு கோயில் கொண்டுள்ள அன்னை மரியா, பூண்டி புதுமை மாதாவாக தன்னை நாடி வரும் அனைத்து மக்களுக்கும் இறைவனின் அளப்பரிய ஆசிரை பெற்றுத் தருவதோடு, எண்ணற்ற புதுமைகளால் மனஅமைதியையும், நலவாழ்வையும் வழங்கி வருகிறார். இவ்வாறு இயற்கை வளமும், ஆன்மீக சிறப்பும் இணைந்த அவ்வூரின் பெயராலேயே அன்னையும் பூண்டி புதுமை மாதா என்று அழைக்கப்படுகிறார்.
தமிழகத்திலுள்ள பேராலயங்களுள் ஒன்றான பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா பேராலயம், 1710-ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்க வந்த, இத்தாலியைச் சேர்ந்த இயேசு சபை அருள்பணியாளர் கான்ஸ்டண்டைன் ஜோசப் பெஸ்கி எனும் வீரமாமுனிவரால் கட்டப்பட்டது. தான் சென்ற இடமெல்லாம் அன்னைமரியின் பெயரில் கோவில்களை நிறுவி, மக்கள் வணங்கி இறைவேண்டல் செய்ய வழிவகை செய்வது இவரின் சிறப்பு. அவ்வாறு 1714 முதல் 1718 வரை அவர் பூண்டியில் தங்கி, அங்கே அன்னை மரியாவுக்கென்று ஒரு கோவிலை எழுப்பினார். வீரமாமுனிவர் அப்போது ஆலயத்தில் வைத்த மாதாவின் திருஉருவச்சிலை, பல நூற்றாண்டுகள் கடந்ததாலும் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் பொலிவிழந்து காணப்பட்டது. பின்னர் 1858ஆம் ஆண்டில் பிப்ரவரி 11-ஆம் நாள், பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் அன்னை மரியா, பெர்னதத் என்ற சிறுமிக்கு காட்சியளித்து தம்மையே “நான் அமலோற்பவம்” என வெளிப்படுத்தி, உலகமெங்கும் மக்கள் செபமாலை ஜெபிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அந்த நிகழ்வை நினைவுகூர்ந்து, இந்தியாவில் பணியாற்றிய இயேசு சபை அருள்பணியாளர்கள், பிரான்ஸ் நாட்டின் பாரீசிலிருந்து லூர்து அன்னையின் அந்த காட்சியை ஒத்திருக்கும் மூன்று சிறப்பு திருஉருவச் சிலைகளை வரவழைத்தனர். அவற்றில் ஒன்றை பூண்டி ஆலயத்தில் நிறுவினர். இத்திருஉருவச்சிலை “ஜென்மராக்கினி மாதா” என அழைக்கப்படுகிறது.
1924-ஆம் ஆண்டு கடுமையான புயல்வீசி வெள்ளப்பெருக்கு ஏற்படவே, அன்னையின் திருஉருவச்சிலை சேதம் அடையாமல் இருக்க, மிக்கேல்பட்டி பங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1925-ஆம் ஆண்டு மீண்டும் பூண்டிக்கு கொண்டு வரப்பட்டு ஆலயத்தில் வைக்கப்பட்டது. பூண்டி மாதா திருத்தலத்தில் அன்னையின் புதுமைகள் வெளிப்படத் தொடங்கியது. இரவு நேரங்களில் ஆலயத்தின் உள்ளே யாரும் விளக்கோ, மெழுகுதிரியோ ஏற்றாத நிலையிலும் ஓர் ஒளி பிரகாசித்து ஆலயத்தை ஒளியால் நிரப்பியது. பலமுறை மக்கள் அதைக் கண்டு, ஆலயத்தின் கதவுகளைத் திறந்து பார்த்தனர்; ஆனால் உள்ளே எங்கும் விளக்கும் இல்லை, நெருப்பும் எரியவில்லை. அப்போதுதான், “இறையருள் இல்லாமல் வெளிச்சம் இருக்க முடியாது” என்ற ஆழமான உண்மை மக்கள் இதயத்தில் வேரூன்றியது.இதுவே பூண்டி புதுமை அன்னையின் பொற்காலம் தொடங்கிய தருணமாக அமைந்தது.
1949இல் மிக்கேல்பட்டி என்னும் சிற்றூரை சார்ந்த பெரியவர் ஞானதிக்கத்தின் வயிற்றுவலி, அன்னையை நம்பியதால் அற்புதமாக குணமானது. இதுவே இத்திருத்தலத்தில் நடந்த முதல் புதுமை. அவரளித்த காணிக்கையான நற்கருணை கதிர் பாத்திரம் இன்றும் அன்னை புகழ்பாடுகிறது. 1955-ஆம் ஆண்டு செப்டம்பரில், அருள்பணியாளர் வி. எஸ். லூர்துசேவியர் பூண்டி புதுமை அன்னை ஆலய பங்கு தந்தையாக பொறுப்பேற்றார். அவரது காலம் பூண்டி ஆலய வரலாற்றில் மறக்க முடியாத பொற்காலமாகும். அவரது பக்தியும், அயராத உழைப்பும், தன்னலமற்ற சேவையும், அர்ப்பண உணர்வும் பூண்டி புதுமை அன்னையின் பெருமையை உலகம் அரியச் செய்தன.
ஆலயம் பழமைவாய்ந்ததாக இருந்ததால், இயற்கை சீற்றங்களால் ஆலயச் சுவர்கள் சேதம் அடைந்து காணப்பட்டது. ஆகவே அருட்தந்தையவர்கள் ஆலயத்தை புதுப்பித்துக் கட்ட எண்ணினார். ஆனால் பழுதடைந்த பகுதியை இடிக்கவோ, கட்டவோ பணம் இல்லாமல் சிரமப்பட்டார். செபத்தினால் அடையமுடியாதது எதுவும் கிடையாது என்ற ஆழ்ந்த விசுவாசம் உடைய தந்தையவர்கள், "கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற இயேசுவின் வார்த்தைகளை மனதில் இருத்தி, பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவிடம் மனம் உருக 15 நாட்கள் நோன்பு இருந்து மன்றாடினார்.
அருள்பணியாளரின் இதயம் அன்னை மரியாவின் அருளோடு இணையும் போது இம்மண்ணுலகில் விண்ணின் மாட்சியைக் காண முடியும் என்பதற்கேற்ப 1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அருள்பணியாளர் .லூர்து சேவியர் அவர்களின் வேண்டுதலை ஏற்றவராய், மாதா புதுமை செய்தார்கள். பூண்டி புதுமை அன்னையின் கருணையால், தந்தையவர்களின் உள்ளுணர்வு ஆலயம் இடிந்து விழுவதுபோல் உணர்த்தியது. பள்ளிக் குழந்தைகளுக்கும், அன்னையின் பக்தர்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்க ஆலயத்தைச் சுற்றி தடுப்புக் கயிற்றை கட்டச் செய்தார். 1956-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் நாள் வெள்ளிக்கிழமை, ஆலயத்தில் இடிக்க வேண்டிய பகுதி மட்டும் யாருக்கும் எந்த இடையூறும் இன்றி இடிந்து விழுந்தது. பூண்டி மாதாவின் புதுமையை எண்ணி அருட்தந்தை அவர்களும், மக்களும் மாதாவிற்கு நன்றி கூறினர்.
அன்னையின் புதுமையைக் காண மக்கள் வெள்ளமென வந்தனர், நன்கொடைகள் அளித்தனர். அதுவரை "ஜென்மராக்கினி மாதா" என்று அழைக்கப்பட்டு வந்த அன்னை மரியாவை "பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா" என்று அழைத்து உலகறியச் செய்தது அருள்பணியாளர் லூர்துசேவியர் அவரையேச் சேரும். 1964 மே மாதம் மீண்டும் அன்னையின் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு குடந்தை ஆயர் மேதகு பவுல்அருள்சாமி அவர்களால் புனிதப்படுத்தப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. அதன்பிறகு அருள்பணியாளர் லூர்து சேவியர் அவர்களின் காலத்தில் தொடர்ந்த பூண்டி மாதாவின் புதுமைகள், தமிழகம் மட்டுமல்லாது மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களிலும் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், மேலும் ஜெர்மனி, அரபு நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா போன்ற வெளிநாடுககளிலும் பரவியது. அன்னையிடம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து வந்த நன்றிக் கடிதங்களும், காணிக்கைப் பொருட்களும் ஆலய அருங்காட்சியகத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. பூண்டிக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டியாய் அமைந்திட ஆலயத்தின் முன்பகுதியில் அருள்பணியாளர் லூர்து சேவியர் அவர்கள் வானுயர்ந்த கோபுரத்தைக் கட்டினார்.
பின்பு 17 ஆண்டுகள் தன்னலம் பாராது இறைபணி செய்த அருள்பணியாளர் லூர்துசேவியர் உடல் நலக்குறைவால் 16.04.1972ல் இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் பூண்டிக்கு கொண்டுவரப்பட்டு ஆலயத்தின் முன்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருஅவையால் இறைஊழியராக உயர்த்தப்பட்ட அவரது கல்லறையில் வேண்டுபவர்கள் இன்றளவும் நன்மைகளை பெற்று வருகின்றனர். மேலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, சிலுவை சுமந்து, ஆணிகளால் அறையப்பட்டு உயிர்விட்ட திருச்சிலுவையின் சிறுபகுதி மேதகு கர்தினால் லூர்து சாமி அவர்களின் பேருதவியால், அருள்பணியாளர் இராயப்பர் அவர்களால் உரோமையிலிருந்து கொண்டு வரப்பட்டு, மக்கள் வணக்கம் செலுத்த பூண்டிமாதா ஆலயத் திருப்பீடத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
பங்கு ஆலயமாக இருந்த பூண்டி மாதா ஆலயம், குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் 26.01.1995 அன்று திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03-ம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் பேராலயமாக உயர்த்தப்பட்டது. ஜனவரி 03 பேராலயம் புனிதப் படுத்தப்பட்ட பொன்னாள், தவக்காலத்தின் ஆறாவது வெள்ளிக்கிழமை, மே 15 பேராலய ஆண்டுப் பெருவிழா, ஜூன் 29 திருத்தூதர்களான புனித பேதுரு, பவுல் பெருவிழா, ஆகஸ்ட் 03 இவ்வாலயம் பேராலயமாக அறிவிக்கப்பட்ட நாள், செப்டம்பர் 08 அன்னையின் பிறப்புப் பெருவிழா ஆகிய 6 நாட்கலும், இப்பேராலயத்தின் நிறைபலன் பெறும் நாட்களாகவும் அறிவிக்கப்பட்டது. அதன் பின் பொறுப்பேற்ற பல அருள்பணியாளர்களால் பூண்டி புதுமை அன்னையின் பேராலயம் காலத்திற்கேற்றவாறும், நம்பிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறும்,சிலுவைப்பாதை நிலைகள், ஆராதனை ஆலயம், தியான இல்லம், சிறுவர் பூங்கா, புனித பூமி என பல சிறப்புகளுடன் புதுப்பிக்கப்படுள்ளது. பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா ஆண்டு தோறும் மே மாதம் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 14-ஆம் தேதி தேர்பவனியும், 15-ஆம் தேதி திருவிழா திருப்பலியும் நடைபெற்று நிறைவடையும். ஆயிரக்கணக்கான மக்கள் அன்னையின் திருவிழா நாள்களில் கலந்து கொண்டு அன்னையின் ஆசிரை பெற்றுச் செல்கின்றனர். ஒவ்வொரு மாத முதல் சனிக்கிழமையிலும் இரவு 9-12 மணிவரை அன்பிரவு செபகூட்ட வழிபாடு நடைபெற்று திருப்பலியுடனும், இறையாசீருடனும் நிறைவுறுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்