MAP

இரக்கத்தின் தூதுவர்களுடன் பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து இரக்கத்தின் தூதுவர்களுடன் பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து  

இரக்கத்தின் தூதர்கள் நடத்திய ஒப்புரவு அருளடையாளப் பயிற்சிப் பாசறை

மதுரை, பாளையங்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, கோட்டார், குழித்துறை, வேலூர், சேலம் ஆகிய மறைமாவட்டங்களைச் சேர்ந்த 60 அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தார் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பேராயம், உரோமை - உலகில் நற்செய்தி அறிவிப்பு பற்றி அக்கறைக்கான பிரிவு, பாப்பிறை மறைப்பணி கழகங்கள் - இந்தியா, மதுரை உயர்மறைமாவட்ட இரக்கத்தின் தூதர்கள் ஆகியோர் இணைந்து யூபிலி 2025-ஐ முன்னிட்டு 'ஒப்புரவு அருளடையாளம் மற்றும் இரக்கத் திருப்பணி' என்னும் தலைப்பில் அருள்பணியாளர்களுக்காக பயிற்சிப் பாசறை ஒன்றை, 26 ஆகஸ்ட் '2025, அன்று மதுரையில் நடத்தினார்கள்.

நிகழ்வுக்குத் தலைமை ஏற்ற மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள், 'ஒவ்வோர் அருள்பணியாளரும் இறைவனின் இரக்கத்தின் அடையாளங்களாகத் தங்கள் பணித்தளங்களில் திகழ வேண்டும். அதே வேளையில் திருஅவையின் சட்டத்திற்கு உட்பட்டு அருளடையாளத்தைக் கொண்டாட வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

மருத்துவர் திரு இ. அந்தோனி மனுவேல் விஜய் அவர்கள் ஒப்புரவு அருளடையாளம் தருகிற ஆன்மிக மற்றும் மனநலத்தை எடுத்துரைத்தார். அருள்திரு முனைவர் யேசு கருணாநிதி, அருள்திரு முனைவர் ஜோசப் மிக்கேல் செல்வராஜ், மற்றும் அருள்திரு முனைவர் அருள் அம்புரோஸ் ஆகியோர் ஒப்புரவு அருளடையாளத்திற்கான மேய்ப்புப் பணி சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி கலந்துரையாடல் செய்தார்கள்.

'இரக்கத்தின் தூதர்களின் இருத்தலை அனைவருக்கும் தெரியப்படுத்தவும், ஒப்புரவு அருளடையாளக் கொண்டாட்டத்தை நம் மறைமாவட்டங்களிலும் பங்குத்தளங்களிலும் உயிரோட்டமுள்ளதாகக் கொண்டாட வழிவகை செய்வதும், இறைவனின் இரக்கத்திற்குச் சான்று பகருமாறு அருள்பணியாளர்களைத் தூண்டி எழுப்புவதும்' இந்தப் பயிற்சிப் பாசறையின் நோக்கம் என எடுத்துரைத்தார் நிகழ்வின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் அருள்திரு முனைவர் யேசு கருணாநிதி.

மதுரை, பாளையங்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, கோட்டார், குழித்துறை, வேலூர், சேலம் ஆகிய மறைமாவட்டங்களைச் சேர்ந்த 60 அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தார் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனர். 

பயிற்சி பெற்ற அருள்பணியாளர்கள் தங்களுடைய மறைமாவட்டங்களிலும் பங்குத்தளங்களிலும் ஒப்புரவு அருளடையாளக் கொண்டாட்டத்தை ஊக்குவிப்பதாகவும், ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இரக்கத்தின் இருக்கை ஒன்றை அமைத்து மனித உறவுகளில் ஒப்புரவை ஏற்படுத்துவதாகவும், ஆண்டுக்குக் குறைந்தது 10 அருள்பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகவும் உறுதி அளித்தார்கள்.

நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பேராயம், உரோமை - உலகில் நற்செய்தி அறிவிப்பு பற்றி அக்கறைக்கான பிரிவின் தலைவர் மேதகு பேராயர் ரினோ ஃபிஸிகெல்லா அவர்களும், பாப்பிறை மறைப்பணி கழகங்கள் - இந்தியாவின் இயக்குநர் மேதகு ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் இந்த நிகழ்வுக்கு ஊக்கம் தந்தார்கள்.

'இந்தப் பயிற்சிப் பாசறை ஒப்புரவு அருளடையாளம் பற்றிய ஆழமான புரிதலை உருவாக்கியது' என்று உரைத்தார் அருள்திரு ஆல்பின் லெயோன் என்னும் பங்கேற்பாளர் ஒருவர்.

அருள்திரு யேசு கருணாநிதி

மதுரை உயர்மறைமாவட்டம்

இரக்கத்தின் தூதர்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஆகஸ்ட் 2025, 15:35