MAP

இயேசுவின் முள்முடி இயேசுவின் முள்முடி  

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – இயேசுவின் முள்முடியில் இருந்த தூய முள்

பல நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கைக்கும் சமூகத்திற்கும் இடையே ஆழமான பிணைப்பைப் பராமரித்து வரும் விலைமதிப்பற்ற நினைவுச்சின்னமாக இந்த தூய முள்முடி இன்று வரை திகழ்கின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆகஸ்டு 17, ஞாயிறு முதல் 24 , ஞாயிறு வரை  இத்தாலியின் பெருஜியாவில் உள்ள மொன்தோனே என்னுமிடத்தில், இயேசுவின் தலையில் வைக்கப்பட்டிருந்த முள்முடியில் இருந்த புனித முள் நினைவுச்சின்னம் பற்றிய பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க விழாவானது இந்த யூபிலி ஆண்டை முன்னிட்டு சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. பல நூற்றாண்டுகளாக, மக்களின் நம்பிக்கைக்கும் சமூகத்திற்கும் இடையே ஆழமான பிணைப்பைப் பராமரித்து வரும் விலைமதிப்பற்ற நினைவுச்சின்னமாக இந்த தூய முள்முடி இன்று வரை திகழ்கின்றது. யூபிலி ஆண்டினை முன்னிட்டு தூய முள்ளானது நினைவுச்சின்னமாக, மறுசீரமைக்கப்பட்ட புதிய அறையில் வைக்கப்பட்டது. பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் தூய முள்ளானது அதன் வரலாறு மற்றும் சிறப்பியல்புகளை மக்களுக்கு எடுத்துரைக்கின்றது. இந்த நிகழ்வானது இரண்டு கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளுடன் மொந்தோனே கிராமப் பகுதியில் கொண்டாடப்பட்டது. அக்கிராமம் இந்நிகழ்வின்போது அதன் வரலாறு மற்றும் அடையாளத்தையும் மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டாடியது.

தொடக்க நாளான ஆகஸ்டு  17, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தூய பிரான்செஸ்கோ நகராட்சி அருங்காட்சியகத்தில் திட்டமிடப்பட்ட "புனித முள்ளின் நினைவுச்சின்னத்தில் தொழில்நுட்ப-மொழியியல் முடிச்சுக்கள்" என்ற தலைப்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. கலை, சின்னங்கள் மற்றும் கைவினைத்திறன் வழியாக பொதுமக்களை அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் வழிநடத்தும் அறிஞரான கிளாடியோ ஃபிரான்சியின் வழிகாட்டுதலின் வழியாக நினைவுச்சின்னத்தின் இரகசியங்களைக் கண்டறியும் ஒரு வாய்ப்பாக இந்நிகழ்வானது அமைந்தது.

நிகழ்வின் முடிவில்,  கலைக்கூடம் மற்றும் புனித முள் நினைவுச்சின்னத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய அறையின் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணத்தில் பொதுமக்கள் பங்கேற்றனர். இரண்டாவது நிகழ்வாக ஆகஸ்ட் 23, சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு மீண்டும் தூய பிரான்செஸ்கோ அருங்காட்சியகத்தில், மொன்தோனில் உள்ள புனித முள் நினைவாக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் பயிற்சிப் பாசறையானது நடைபெற உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 ஆகஸ்ட் 2025, 10:09