MAP

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 - இளைஞர் யூபிலிக் கொண்டாட்டம் ஒரு பார்வை

ஆகஸ்ட் 3 ஞாயிறன்று இளையோர் யூபிலி நாளானது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தலைமையில் சிறப்புத்த திருப்பலி நிறைவேற்றப்பட்டுக் கொண்டாடப்பட்டது. உலகெங்கிலும் இருந்து இலட்சக் கணக்கான இளைஞர்கள் இத்திருப்பலியில் பங்கேற்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை சிறப்பான முறையில் இளைஞர்களுக்கான யூபிலி நாளானது திருஅவையில் சிறப்பிக்கப்பட்டது. இந்நாளின் முத்தாய்ப்பாக ஆகஸ்ட் 2 சனிக்கிழமை உரோமில் உள்ள தோர் வெர்காதா என்னுமிடத்தில் நள்ளிரவு செப வழிபாடும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மறுநாள் காலையில் அதாவது ஆகஸ்ட் 3, ஞாயிறன்று இளையோர் யூபிலி நாளானது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தலைமையில் சிறப்புத்த திருப்பலி நிறைவேற்றப்பட்டுக் கொண்டாடப்பட்டது. உலகெங்கிலும் இருந்து இலட்சக் கணக்கான இளைஞர்கள் இத்திருப்பலியில் பங்கேற்றனர். மத்தேயு நற்செய்தியில் இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கிய போது கூறிய வார்த்தைகளான, “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? என்ற கேள்விக்குப் பதில் அளிப்பது போல் இருந்தது அந்நிகழ்வு. ஆம் மக்களும் இளைஞர்களும் இலட்சக் கணக்கான வகையில் உரோமில் கூடியிருந்து திருஅவையின் வளர்ச்சியையும் ஒன்றிப்பையும் எடுத்துரைத்தனர். இளைஞர்களின் உற்சாகமான குரல், செயல், பாடல், நடனம் என உரோம் நகரமே இக்காலங்களில் நிரம்பி வழிந்தது. எங்கு நோக்கினும் இளைஞர்கள் எத்திசையிலும் அவர்களது குரல் ஒலி. எங்கு நோக்கினும் புன்னகையும் புத்துணர்வும் ததும்ப உரோம் நகரமே இளமைத் துள்ளலுடன் திகழ்ந்தது. எம்மாவு சீடர்கள் போல இரவு முழுவதும் இயேசுவோடு தங்கியும், வைகறைப்பொழுதில் உயிர்ப்பின் ஒளியைக் கண்டும், இறைவனது அருளால் நிரப்பப்பட்டும் இளைஞர்கள் மகிழ்ந்தனர்.

நம்பிக்கை கொண்டவர்கள் ஒருபோதும் தனியாக இல்லை. அவர்கள் எப்போதும் கடவுளோடும் அவரது மக்களோடும் இணைந்து இருக்கின்றார்கள் என்ற திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகளால் மகிழ்வடைந்தனர். ஒரே திருஅவையைக் கட்டியெழுப்ப புதிய உலகம் படைக்க இளைஞர்களால் முடியும் என்ற வார்த்தைகளால் உத்வேகம் பெற்று உயிர்ப்புடன் பணியாற்ற முனைந்தனர். 2000 -ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க இளைஞர் விழாவைத் தொடர்ந்து உரோமில் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற இளைஞர் யூபிலியானது மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஆகஸ்ட் 2025, 12:32