வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் இந்தியத் திருஅவை
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவுகளை, ஜம்மு-ஸ்ரீநகர் கத்தோலிக்க மறைமாவட்டம் மற்றும் இந்தியாவின் காரித்தாஸ் அமைப்பு வழங்கி வருவதாக யுக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 28, வியாழக்கிழமை நிலவரப்படி கனமழையால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது நிலையில், பள்ளத்தாக்கில் உள்ள 22 கிறிஸ்தவப் பள்ளிகளில் 4 பள்ளிகள் சமையலறைகளுடன் கூடிய தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன என்று ஜம்மு-ஸ்ரீநகர் மறைமாவட்ட ஆயர் இவான் பெரேரா கூறியதாகவும் அச்செய்தி நிறுவனம் உரைத்துள்ளது.
தொடர்ச்சியான மழை மற்றும் நிலச்சரிவுகளால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் கடினமடைந்துள்ளன என்றும், இருப்பினும் விரைவில் நிலைமை சீராகும் என இறைவேண்டல் செய்வதாகவும் தெரிவித்த ஆயர் பெரேரா அவர்கள், இந்நிலை சீரானவுடன் வீட்டு உபயோகப் பொருட்கள், போர்வைகள், மாணவர்களுக்கு புத்தகங்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 26க்குள் 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் இடம்பெயர்த்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாலங்கள், மின்கம்பங்கள், வீடுகள், கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் ஆறுகள் கரைமீறி வெள்ளம் புகுந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது யுக்கான் செய்தி நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்