MAP

பெரு நாட்டு மக்களுடன் அருள்சகோதரி ஹில்டா மேரி பெர்னத் (இடப்புறம் நிற்பவர்)  பெரு நாட்டு மக்களுடன் அருள்சகோதரி ஹில்டா மேரி பெர்னத் (இடப்புறம் நிற்பவர்)  

நேர்காணல் – பெரு நாட்டில் மறைப்பணி அனுபவம்

இந்தியாவின் தென்தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து, மரியாயின் பிரான்சிஸ்குவின் மறைபரப்புப் பணி சபைத் துறவியாக தன்னை மாற்றி பெரு நாட்டில் மறைப்பணியாளராகப் பணியாற்றி வருபவர் அருள்சகோதரி ஹில்டா மேரி பெர்னத்.
நேர்காணல் - அருள்சகோதரி ஹில்டா மேரி பெர்னத்

மெரினா ராஜ் – வத்திக்கான்

வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் நற்செய்தியின் சான்றுகளாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் செயல்படவேண்டும். திருமுழுக்கு பெற்ற நாளிலிருந்து நாம் ஒவ்வொரும் நற்செய்தியை அறிவிக்கும் அழைப்பினைப் பெற்றிருக்கின்றோம். கடல்கடந்து குடும்ப உறவுகளைத் துறந்து, துறவறம் ஏற்று உலகெங்கும் மறைப்பணியாற்றும் மனிதர்கள் ஏராளமாக உள்ளனர். இந்த மறைப்பணி அனுபவத்தின்போது இயேசுவுடனான ஒன்றிப்பினால், சோர்வடையாத ஒரு படைப்பாற்றலை பெற்று நற்செய்தியை அதனை அறியாத பிறமக்களுக்கு அறிவிக்கும் புதிய வழிகளையும், ஏழைகளுக்குப் பணிபுரியும் மனநிலையையும் மறைப்பணியாளர்கள் ஒவ்வொருவரும் பெறுகின்றனர். அவ்வழியில் இந்தியாவின் தென்தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து, மரியாயின் பிரான்சிஸ்குவின் மறைபரப்புப் பணி சபைத் துறவியாக தன்னை மாற்றி பெரு நாட்டில் மறைப்பணியாளராகப் பணியாற்றி வருபவர் அருள்சகோதரி ஹில்டா மேரி பெர்னத்.

இந்தியாவின் தென்தமிழகத்தை சார்ந்த அருள்சகோதரி ஹில்டா மேர் பெர்னத் அவர்கள், மாண்டிசோரி கல்வி, குழந்தைகளுக்கான உளவியல் கற்று தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி பயில்வோருக்கான ஆசியராகத் திகழ்பவர். விளையாட்டுத்துறைகளில் தங்கப் பதங்கங்களைப் பெற்ற சகோதரி அவர்கள், மரியாயின் பிரான்சிஸ்குவின் மறைபரப்புப் பணி சபைத் துறவியாகத் தன்னை மாற்றிக்கொண்ட பின்னர், இறையியல், ஆன்மிகம், மறையியல் போன்றவற்றில் பட்டம் பெற்றார். தனது சபையின் புகுமுக நிலையினருக்கான உருவாக்குனராகப் பணியாற்றிய சகோதரி ஹில்டா அவர்கள், கடந்த ஆறு ஆண்டுகளாக பெருவில் மறைப்பணியாளராகப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்.

அங்கு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் சகோதரி அவர்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் அருகில் உள்ள 3 கிராமங்களுக்கு, அப்பகுதி மேலதிகாரிகளுடன் படகில் சென்று அங்குள்ள மக்களுக்கு உடைகள், மற்றும் உணவுகளை வழங்கி வருகின்றார். மேலும் நோயாளிகளுக்கு தலத்திருஅவை பிரதிநிதிகள் வழியாகக் கிடைக்கும் மருந்துகள் அவர்களைச் சென்றடைய உதவுகின்றார். குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் குரல்களுக்கு செவிசாய்க்கும் சகோதரி ஹில்டா அவர்கள் இறையழைத்தல் ஊக்குநராகவும் பணியாற்றி வருகின்றார். இத்தகைய சிறப்புமிக்க அருள்சகோதரி ஹில்டா மேரி பெர்னத் அவர்களை பெருவில் ஆற்றி வரும் மறைப்பணி பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

மறைப்பணியாற்றுவது என்பது பிறரை திருமறைக்கு மனம் திருப்புவதைக் குறிப்பிடாது. மறைப்பணியில் ஒன்றிணைந்து ஆன்மிகக் கூட்டுறவில் செயலாற்றுவதே இங்கு முக்கியம். மறைப்பணி நோக்கிய மனமாற்றம் நம் ஒவ்வொருவருக்கும் தேவை என்பதால் ஆன்மிக பயிற்சிமுறைகளின் அவசியம் மிகத்தேவை. ஒன்றிணைந்து நடத்தல், ஒருவர் ஒருவருக்கு செவி மடுத்தல், ஒருவர் ஒருவரோடு உரையாடுதல் போன்றவைகளையும் மிக முக்கியம் என வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களுக்கேற்ப நாமும் மறைப்பணியாளர்களாக வாழ முயல்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஆகஸ்ட் 2025, 09:13