MAP

வேலூர் மறைமாவட்ட இளைஞர்கள் மற்றும் மறைமாவட்ட ஆயருடன் அருள்தந்தை ஜெயசீலன் வேலூர் மறைமாவட்ட இளைஞர்கள் மற்றும் மறைமாவட்ட ஆயருடன் அருள்தந்தை ஜெயசீலன்  

நேர்காணல் – வேலூர் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுவின் பொன்விழா

வேலூர் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுவின் பொன்விழா பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்பவர் அருள்தந்தை ஜெயசீலன். கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலூர் மறைமாவட்டத்தின் இளைஞர் பணிக்குழுவின் இயக்குனராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
நேர்காணல் - அருள்தந்தை A.ஜெயசீலன்

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருஅவையில் தங்களது முக்கியமான இடத்தை உணர்ந்து, இளைஞர்கள் செயலாற்றவேண்டும் என்பதைத் தனது தலைமைத்துவக் காலத்தில் அதிகமாக எடுத்துரைத்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகஸ்டு 3 - ஆம் தேதி உரோமில் இலட்சக் கணக்கான இளைஞர்கள் கூடியிருந்து திருஅவையில் இளைஞர்களுக்கான யூபிலி நாளானது சிறப்பிக்கப்பட்டது. வித்தியாசமான உலகம் சாத்தியம் என்பதன் அடையாளமாக இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்று எடுத்துரைத்து அவர்களை ஊக்கமூட்டினார் திருத்தந்தை 14-ஆம் லியோ. உலகெங்கும் வாழும் கத்தோலிக்க இளைஞர்கள் நாளானது அந்தந்த தலத்திருஅவைகளில் பல்வேறு வகைகளில் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இந்தியாவின் வேலூர் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுவானது தனது 50-ஆவது ஆண்டு பொன்விழாவினை அண்மையில் சிறப்பித்தது. எனவே இன்றைய நமது நேர்காணலில் வேலூர் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுவின் பொன்விழா பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள அருள்தந்தை ஜெயசீலன் அவர்களை அன்போடு அழைக்கின்றோம்.

அருள்தந்தை A.ஜெயசீலன் அவர்கள், வேலூர் மறை மாவட்டத்தை சார்ந்த அருள்பணியாளர். தனது இளங்குருமட பயிற்சியை பத்தியாவரம் குருமடத்திலும், கல்லூரி படிப்பை தூய நெஞ்ச கல்லூரி திருப்பத்தூரிலும், தத்துவவியல் மற்றும் இறையியல் படிப்பை  பூந்தமல்லி திருஇருதய கல்லூரியிலும் பயின்றார்.  கணிதத்துறையில் இளங்கலை பட்டத்தை பெற்றதோடு, முதன்மை மாணவராகவும் திகழ்ந்தவர். மேலும் கணிதத்துறையில் முதுகலை பட்டத்தையும், சென்னை பல்கலைக்கழகம் கிறிஸ்துவ துறையில் முதுகலை பட்டத்தையும்,  கல்வியியலில் இளங்கலை பட்டத்தையும் பெற்று அதிலும் முதன்மை மாணவராக சிறப்பினைப் பெற்றார். 2009-ஆம் ஆண்டு குருவாக திருநிலைபடுத்தப்பட்ட பின்பு, சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை திருத்தலத்தில் துணை பங்கு தந்தையாகவும், கோவிலூர், தண்டராம்பட்டு பங்குகளில் பங்கு பணியாளராகவும், தற்பொழுது பெருந்துறைபட்டு பங்கின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றி வருகிறார். அதோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலூர் மறைமாவட்டத்தின் இளைஞர் பணிக்குழுவின் இயக்குனராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். தமிழக ஆயர் பேரவையின் வடக்கு மண்டல மறை மாவட்டங்களான சென்னை, பாண்டிச்சேரி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மறைமாவட்டங்களின் இளைஞர் பணி குழுவின் பொறுப்பு இயக்குனராகவும் பணியாற்றுகிறார். இவ்வாண்டு வேலூர் மறைமாவட்ட இளைஞர் பணி குழுவின் பொன்விழா கொண்டாட்டத்தை மிக  சிறப்பாக கொண்டாடினார். மறை மாவட்டத்தில் உள்ள எல்லா பங்குகளிலும் இளைஞர் மற்றும் இளையோர் இயக்கங்களையும் (YOUTH and YCS) உருவாக்கி, புத்தெழுச்சியை உருவாக்கி வருகிறார். தந்தை அவர்களை வேலூர் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுவின் பொன்விழா பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஆகஸ்ட் 2025, 11:19