ஹெய்ட்டியின் அமைதிக்கான முயற்சிகளை ஆதரிக்கும் திருஅவை
ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்
ஹெய்ட்டி நாட்டில் கடுமையான பாதுகாப்பு மற்றும் நிறுவன நெருக்கடியை தீர்ப்பதற்கான முயற்சிகளை திருப்பீடம் வரவேற்கிறது என்று அமெரிக்க நாடுகள் அமைப்பு என்னும் OAS கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க நாடுகள் அமைப்பிற்கான திருஅவையின் நிரந்தர கண்காணிப்பாளர் பேரருள்திரு. Juan Antonio Cruz Serrano தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 20, புதனன்று அமெரிக்க நாடுகளின் அமைப்பு, நான்கு ஆண்டுகளாகத் தொடர் வன்முறையால் பாதிக்கப்பட்டு வரும் ஹெய்ட்டிக்கான ஒரு சாலை வரைபடம் ஒன்றை, வாஷிங்டனின் கொலம்பியாவில் நடைபெற்றக் கூட்டத்தில் வெளியிட்டுள்ளது.
ஆயுதக் குழுக்களின் தொடர் வன்முறையால் பாதிப்படைந்துவரும் ஹெய்ட்டி கடந்து செல்லும், துயர்மிகுந்த சூழ்நிலைக்கு இந்தச் சாலை வரைபடம் பதிலளிக்க முயல்கிறது என்றும் கூறியுள்ளார் பேரருள்திரு. Cruz Serrano.
மேலும், கொலை, வன்முறை, மனிதக் கடத்தல், கட்டாய நாடுகடத்தல், போன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் ஹெய்ட்டி மக்களின் அமைதிக்காகவும், பிணையக் கைதிகளை விடுவிக்கவும் ஆகஸ்ட் 10 அன்று திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் விடுத்த வேண்டுகோளையும் பேரருள்திரு . Cruz Serrano அக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, ஹெய்ட்டி சமூகம் சிதைந்து வருவதாகவும், மனித மாண்பை அவமதிக்கும் அனைத்து செயல்களையும் ஹெய்ட்டி ஆயர்கள் கண்டித்ததையும் பேரருள்திரு . Cruz Serrano எடுத்துக்காட்டியுள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு, ஜூலை 7, அன்று, ஹெய்ட்டி அரசுத் தலைவர் ஜோவேனெல் மோயிஸே அவர்கள், Port-au-Prince எனப்படும் தன் இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வலுவான வன்முறை கும்பல்கள் நாட்டை அழிவுக்குள்ளாக்கி வந்ததோடு, ஹெய்ட்டி தலைநகரின் 85 விழுக்காட்டுப் பகுதிகளை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்றும் இவ்வன்முறைத் தாக்குதல்களால் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, 2024-ஆம் ஆண்டில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, ஹெய்ட்டி மக்களுக்கான அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு திருப்பீடம் தனது இடையறாத ஆதரவை மீண்டும் உறுதி செய்வதாகக் கூறிய பேரருள்திரு. Cruz Serrano அவர்கள், திருப்பீடம் ஹெய்ட்டி மக்களுடன் தனது உடனிருப்பையும் வலியுறுத்துகிறது என்றும் உரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்