தடம் தந்த தகைமை : உம் பெயரால் நாங்கள்....!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்’ என்கிறார் இயேசு. (மத் 7:22&23)
கடவுள் மனிதர் வழியாகச் செயல்படுகிறார். இதில் யாரும் பெருமை பாராட்டத் தேவையில்லை. அவரது வல்ல செயல்கள் இன்று நேற்றல்ல, படைப்பின் தொடக்கத்திலிருந்தே தொடர்கின்றன. நம் வழியாக நிகழ்வுறும் எச்செயலானாலும் அது அவரது மாட்சியின் நீட்சியே. அந்நேரத்தில் நாம் அவரின் கரமும், கருவியுமாகிறோம் என்பதே உண்மை. இதை விடுத்துத் தம்பட்டம் அடிக்கும் செயல்களெல்லாம் கடவுளின் வல்லமையை வசை பாடுவதாகும். நற்செய்திக் கூட்டங்கள், கன்வென்ஷன், இறுதி காலக் கூடுகை, ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டம், பேரின்பப் பெருவிழா எனப் பற்பல பெயரில் மக்களைக் கூட்டுவது ஒருபுறம். பேய்கள் ஓடுவதாக, நோய்கள் தீர்வதாக, கடன் சுமை கரைவதாக, வல்லமை வெளிப்படுவதாக, கட்டுகள் அவிழ்க்கப்படுவதாகக் கட்டுக்கதைகள் கட்டி தாமே அதைச் செய்வதாகச் சொல்லி வசூல் வேட்டை நடத்தும் வேடதாரிகள் மறுபுறம். கடவுள் இவர்கள் கண்களுக்குத் தெரியாமாட்டார். கடவுளின் மௌனத்தைப் புரியாதவர்கள் அவரது அன்பையும், உடனிருப்பையும் உணரவோ அனுபவிக்கவோ முடியாது. மானுட உறவுகளையும், அடிப்படைத் தேவைகளையும் புறக்கணித்து நடத்தப்படும் கூட்டங்கள் பற்றி எனக்குத் தெளிவுண்டா?
இறைவா! எனக்கு உம்மை அதிகமாகத் தெரியாது. ஆனால் உமக்கு என்னை முழுமையாகத் தெரியும். இன்னும் உம்மைத் தெரிந்து, புரிந்து, அனுபவித்து வாழ அருள் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்