தடம் தந்த தகைமை : இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
உம்மை அத்திமரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர் (யோவா 1: 49- 50) என்றார் இயேசு.
உள்ளத்தில் களங்கமற்றவர்கள் உண்மையை உரக்கச் சொல்வர். இந்த வரிசையில் நிற்பவரே நத்தனியேல். இயேசுவின் அறிவுக்கூர்மை, கூரியபார்வை, அணுகுமுறை, அத்திமரத்தின்கீழ் பார்த்த கதை எல்லாம் நத்தனியேலின் நெஞ்சம் தொட்டது. அதனால் நேசம் ஊற்றெடுத்தது. நம்பிக்கை நதியானது. அதுவே இயேசுவை “இறைமகன்” என்றும் "இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றும் அறிக்கையிடத் தூண்டியது. சாதாரணர்கள் தங்கள்முன் சாவே வரினும் உண்மையின் சாட்சிகளாய் ஒளிர்வர்.
நாம் இறக்கும்போது நமக்கு ஐந்து உண்மையான நண்பர்கள் இருக்கிறார்கள் எனில் நாம் சிறந்த வாழ்க்கை வாழ்ந்துள்ளோம் என்றே அர்த்தம். அந்த ஐவரில் ஒருவர் நத்தனியேல் என இயேசு நம்பியிருக்க வேண்டும். அந்த நம்பிக்கையில் பூத்ததே “இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்ற சொல்மலர். உண்மையுடன் கைகோத்து வாழ்ந்தவர்கள் உலகைப் பிரிந்தாலும் உண்மை அவர்களைப் பிரிவதில்லை. உண்மை என்பது கடவுளின் இன்னொரு பரிணாமம். உண்மையை விதைப்பவர்களாலே உயர்ந்த நம்பிக்கையை அறுவடை செய்ய முடியும்.
இறைவா ! பிறருக்காக அல்ல;எனக்குள் உண்மையாக வாழ வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்