தடம் தந்த தகைமை : உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்காதே
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் ( மத் 4:6-7 )என்றார் இயேசு.
எருசலேம் திருநகரம் ஏனைய எல்லா அரசர்களின் கண்களையும் உறுத்திய நகரம். எப்படியேனும் அதனைக் கவர வேண்டுமென்ற கனவுத்தாகம் கொண்டிருந்தனர். அதன் அழகும் வடிவமைப்பும் அப்படி இருந்தது. அந்நகரின் உச்சியில் நிறுத்திக் குதிக்கச் சொல்வதும், தூதரெல்லாம் உமைத் தாங்கிக் கொள்வர் என்பதும் இயேசுவின் இறைமீதான நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட சவால்.
வாழ்வில் உயர உயர சோதனைகளும் உயரமாகவே இருக்கும். இதனை இயேசு உள்ளத்தில் ஆழமாகப் பதித்திருந்தார். எல்லாரையும் போலவே ஓர் எளிய, சாமானிய வாழ்க்கை வாழ விரும்பியவர் இயேசு. "கடவுள் என்னோடு பேசிக் கொண்டிருக்கின்றார். ஆகவே, நான் சொல்வதுபோலச் செய்யுங்கள்” எனச் சொல்லிக் கடவுளைத் தன் சட்டைப் பையில் வைத்திருப்பதுபோலக் கதைவிடும் போலிச் சமயவாதிகளுக்கு இயேசுவின் இச்செயல் ஒரு பெரும் சவால். உள்ளத்துள் வாழும் கடவுளைக் குதித்துத்தான் வெளிப்படுத்த வேண்டுமா என்பதே இயேசுவின் அடிமனக் கேள்வியாக இருந்திருக்கும்.ஒருவரின் குணமறிய அவர் யார்யாருடன் சேர்கிறார் என்பதல்லாமல், யார் யாரை, எதையெதைத் தவிர்க்கிறார் என்பதை வைத்து நிர்ணயம் செய்யலாம்.
இறைவா! வாழ்வில் எழும் சவால்களைச் சமாளிக்க அல்ல, எதிர்கொள்ளும் துணிவைத் தாரும்!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்