பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலக் கொடியேற்றம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
சின்ன வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் சென்னை, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 53வது ஆண்டுத் திருவிழா ஆகஸ்ட் 29ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆகஸ்டு 29, வெள்ளிக்கிழமை மாலை பெசண்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் தலைமையில் திருக்கொடியானது ஏற்றப்பட்ட நிகழ்வில் அதிபர் தந்தை அருள்பணி E. அருளப்பா, பேரருள்தந்தை அருள்பணி வின்சென்ட் சின்னதுரை, முதன்மைக்குரு அருள்பணி ஜி.ஜே அந்தோணிசாமி, மற்றும் அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், அன்னையின் பக்தர்கள் என இலட்சக்கணக்கானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பத்திரிகையாளர்கள், முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்தியாளர்களும் மிக ஆர்வமுடன் இந்நிகழ்வில் பங்கேற்க, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல 53-ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றமானது ஏராளமான அன்னையின் பக்தர்கள் மற்றும் இறைமக்களால் சிறப்பான விதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள 75 அடி உயரக் கொடிக்கம்பத்தில் அன்னையின் திருவுருவம் தாங்கிய 12 அடி நீளமுள்ள கொடியேற்றப்பட்டு, அன்னை வேளாங்கண்ணி திருவிழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது
'யூபிலி - ஆண்டவர் அருள் தரும் ஆண்டு' என்ற மையக்கருத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டுத் திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றினார் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்