கடவுளின் அன்பான உடனிருப்பின் அடையாளம் ஆலயங்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஆலயங்கள் கடவுளின் அன்பான உடனிருப்பின் அடையாளங்கள் என்றும், திருமுழுக்குப் பெற்றவர்கள் தங்கள் நம்பிக்கை வாழ்க்கையைப் பயிற்சி செய்யக்கூடிய ஒரு புனிதமான இடம் என்றும் கூறினார் ஆயர் பால் சூ யோங்டா.
அண்மையில், குவாங்டாங் மாநிலத்தில் உள்ள இறைஇரக்கத்தின் ஆலய அர்ச்சிப்புத் திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் பெய்ஹாய்-ஜான்ஜியாங் மறைமாவட்டத்தின் ஆயர் பால் சு யோங்டா.
ஆலயத்தில் நாம் ஆறுதலையும் ஆன்மிக அடைக்கலத்தையும், வலிமையையும், துணிவையும் காண்கிறோம் என்று கூறிய ஆயர் யோங்டா அவர்கள், ஆலயத்தில் நாம் நமது ஆன்மாக்களை வளர்க்கிறோம் என்றும், கடவுளால் கொடுக்கப்பட்ட மீட்பின் அடிப்படை மூலங்களிலிருந்து நாம் வாழ்வை திரும்பப் பெறுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.
1902-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மூவொரு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயமானது காலத்தின் போக்கில் அழிக்கப்பட்டதால், மீண்டும் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டு ஆகஸ்டு 23, அன்று புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
பெரிய மறுசீரமைப்பு பணிகளுக்காக சிறிது காலம் மூடப்பட்டிருந்த ஆலயத்தை மீண்டும் திறப்பதற்கான புனித கொண்டாட்டத்தின் போது மாமிங்கின் கத்தோலிக்க சமூகம் மறக்க முடியாத ஒரு தருணத்தை அனுபவிக்கின்றது என்றும், இறைவனின் எல்லையற்ற இரக்கத்தையும் மகிழ்ச்சியை அனுபவித்தது என்றும் தெரிவித்தார் ஆயர் சூ.
1900 ஆம் ஆண்டில், மிஷன்ஸ் எட்ராங்கரெஸ் டி பாரிஸ் (MEP) இன் மறைப்பணியாளர்களால் கட்டப்பட்ட ஆலயமானது நியோ-கோதிக் பாணியில் கட்டப்பட்ட முதல் கத்தோலிக்க வழிபாட்டுத் தலமாகவும், தெற்கு சீனாவில் மிகப்பெரிய கோதிக் பாணி ஆலயமாகவும் இருந்தது.
வரலாற்றின் போக்கில், அந்த தேவாலயம் அழிக்கப்பட்டது. 1984-ஆம் ஆண்டு டிசம்பர் 19, அன்று மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட ஆலயம், அதன் கட்டிடக்கலை மற்றும் வரலாற்று மதிப்பு காரணமாக, 1991 ஆம் ஆண்டில் ஜான்ஜியாங்கின் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு நிறுவனங்களால் இந்த ஆலயம் நகராட்சியால் பாதுகாக்கப்பட்ட தளமாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்