MAP

துயரத்தின் பிடியில் சூடான் பெண்கள் துயரத்தின் பிடியில் சூடான் பெண்கள்  

சூடான் நாட்டுப் பெண்கள் மீதான வன்முறைகள்!

வன்முறைகளுக்கு மத்தியிலும் சூடான் நாட்டுப் பெண்கள் துணிவுடன் மீண்டெழுந்து நிற்பதோடு தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் பாதுகாவலராகவும் திகழ்கின்றனர்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்  

சூடானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் கொடூரமான வன்முறை குறித்து உலகளாவிய கவனத்தையும், நடவடிக்கையையும் வலியுறுத்தி பாக்ஸ் கிறிஸ்டி (Pax Christi) எனப்படும் அனைத்துலகக் கத்தோலிக்க அமைதி இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி இடம்பெற்ற  போர் பெருமளவில் இடம்பெயர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரை அண்டை நாடுகள் மற்றும் தற்காலிக முகாம்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளியது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RSF எனப்படும் சூடான் நாட்டின் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் திட்டமிட்டப் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ள அவ்வமைப்பு, இவ்வன்முறைச் சம்பவங்கள் போர் மற்றும் ஆதிக்கத்தின் கருவிகளாக வேண்டுமென்றே பயன்படுத்தப்படுகின்றன என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.

இவ்வன்முறையிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் உடல் மற்றும் உளவியல் அதிர்ச்சியை மட்டுமல்ல, சமூக மற்றும் கலாச்சார அவமானங்களையும் எதிர்கொள்கின்றனர் என்றும்,  பலர் இவ்வன்செயல்களின் துயரத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தப் போர் பெண்களின் உடல்களை போர்க்களங்களாக மாற்றி, அவர்களின் பாதுகாப்பு, மாண்பு மற்றும் நம்பிக்கையைப் பறித்துவிட்டது என்றும் கவலையுடன் உரைக்கிறது அவ்வறிக்கை.

இவ்வன்முறைகளுக்கு மத்தியிலும் சூடான் நாட்டுப் பெண்கள் துணிவுடன் மீண்டெழுந்து நிற்கின்றனர் என்றும், பாதிப்புக்குள்ளான பெண்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் பாதுகாவலராகவும் திகழ்கின்றனர் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சூடான் நாட்டுப் பெண்களின் வலிமையும், உறுதியும் இந்த வன்முறைக்கு எதிரான  நம்பிக்கையின் ஒளியாகவும் மாற்றத்தின் தூண்டுதலாகவும் விளங்குகின்றன என்றும் உரைக்கிறது அவ்வறிக்கை.

இறுதியாக, பரிதாபத்தால் அல்ல மாறாக, தார்மீகப் பொறுப்பால் அனைத்துலகக் கூட்டொருமைக்கு அழைப்பு விடுத்துள்ள இவ்வறிக்கை, சூடான் பெண்களைப் பாதுகாப்பது என்பது சூடானின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது போன்றதாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜூலை 2025, 13:55