MAP

புனித லூர்து அன்னை பேராலய வளாகத்தில் திருப்பயணிகள் புனித லூர்து அன்னை பேராலய வளாகத்தில் திருப்பயணிகள்  (ANSA)

அன்னை ஓர் அதிசயம் – லூர்து அன்னைத் திருத்தலப் புதுமைகள்

லூர்து திருத்தல மருத்துவ அலுவலகம் ஏறக்குறைய ஏழாயிரம் புதுமைகளைப் பதிவு செய்துள்ளது. இந்தப் புதுமைகளுக்கு இயற்கையான அல்லது அறிவியல் முறைப்படி எந்த விளக்கத்தையும் அந்த அலுவலகம் கண்டுபிடிக்கவில்லை. இந்த ஏழாயிரம் புதுமைகளில் 67ஐ மட்டும்தான் திருஅவை புதுமைகளாக ஏற்றுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் வானொலி

மனித வரலாற்றின் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தோமானால், அன்னை மரியா, உண்மையிலேயே திருஅவையின் தாயாகத் தன்னைக் காண்பித்திருக்கிறார் என்பதை உணர முடியும். பிரான்ஸ் நாட்டு லூர்து நகரின் புதுமைகள், அறிவியல் உலகை ஆண்டவன் பக்கம் திருப்பும் புதுமைகளாக உள்ளன. உலகில் திருப்பயணிகள் லூர்து நகருக்கு அதிகமாக செல்லுவதற்கு, லூர்துஅன்னைத் திருத்தலத்தில் இடம்பெறும் அற்புதங்களும் ஒரு முக்கிய காரணம். அங்கு இடம்பெறும் புதுமைகள் அறிவியல்முறைப்படி விவாதத்துக்கு அப்பாற்பட்டவை. லூர்து திருத்தலத்தில் புதுமை நடந்தால், அதனை முதலில் அங்குள்ள மருத்துவ அலுவலகம் பதிவு செய்கின்றது. பின்னர் அது குறித்து தீர ஆய்வு செய்கின்றது. உலகில் எந்த மருத்துவரும், மதம், இனம் என்ற வேறுபாடின்றி யாரும் இங்கு நடக்கும் புதுமைகள் குறித்து விசாரணை நடத்தலாம். வழக்கமாக அங்கு நடக்கும் புதுமைகளை லூர்து திருத்தல மருத்துவ அலுவலகம் தீர ஆய்வு செய்த பின்னர், அவை பாரிசிலுள்ள மருத்துவக் குழுவிடம் அனுப்பப்படுகிறது.

அந்தப் புதுமைகள் குறித்து ஆராய்ச்சி செய்த பின்னர், அவை நடந்த நபர் சார்ந்த மறைமாவட்டத்துக்கு அனைத்து விபரங்களையும் அக்குழு அனுப்பி வைக்கும். பின்னர் அந்த மறைமாவட்டம் ஒரு குழுவை நியமித்து அந்தப் புதுமை குறித்து ஆய்வு செய்யப் பணிக்கும். திருஅவை அதிகாரிகள், மருத்துவர்களைவிட மிகவும் கண்டிப்பாக இதில் செயல்படுவார்கள். இவ்வாறு லூர்து திருத்தல மருத்துவ அலுவலகம் ஏறக்குறைய ஏழாயிரம் புதுமைகளைப் பதிவு செய்துள்ளது. இந்தப் புதுமைகளுக்கு இயற்கையான அல்லது அறிவியல் முறைப்படி எந்த விளக்கத்தையும் அந்த அலுவலகம் கண்டுபிடிக்கவில்லை. இந்த ஏழாயிரம் புதுமைகளில் 67ஐ மட்டும்தான் திருஅவை புதுமைகளாக ஏற்றுள்ளது. இந்தப் புதுமைகள் உண்மைதானா என்பதை தீர ஆராய்ச்சி செய்வதற்கு 1882ம் ஆண்டில் லூர்து நகரில் மருத்துவ ஆய்வுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த மருத்துவ ஆய்வுக் குழுவில் கடவுள் நம்பிக்கை இல்லாத மருத்துவர்களும் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் மக்கள் சொல்லும் புதுமைகளை ஆய்வு செய்வதற்கென மருத்துவத்துறையைச் சேர்ந்த ஏறக்குறைய 500 பேர் கலந்து கொண்டு ஆய்வு செய்கின்றனர்.

உடல் நோயைவிட, ஒழுக்கநெறி வாழ்வும் ஆன்மீக வாழ்வும் குணமடைவதைப் போன்ற நேர்த்தியான நிகழ்வு மனிதர் வாழ்வில் இருக்க முடியாது. லூர்து அன்னையின் திருத்தலத்துக்கு முற்சார்பு எண்ணங்களுடன் செல்லும் சிலர், அங்குச் சென்றவுடன் திடீரென மனதில் பல மாற்றங்களை உணருகின்றனர். அவர்களுடைய விசுவாசம் மலருகிறது, கடவுளன்பும் மிகுதியாகின்றது. Gabriel Gargam என்பவரது வாழ்விலும் இத்தகையதொரு நல்மாற்றம் நடந்துள்ளது. லூர்து திருத்தலத்தில் நடைபெற்றுள்ள ஆயிரக்கணக்கான மிகச் சிறந்த அற்புதங்களில் Gabriel Gargam வாழ்வில் நடந்ததும் ஒன்று.

1870ம் ஆண்டில் நல்ல கத்தோலிக்கப் பெற்றோருக்குப் பிறந்த Gabriel Gargam, நல்ல திறமையான மாணவராகவும், நல்ல கத்தோலிக்கராகவும் வளர்ந்து வந்தார். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. அவர் தனது 15வது வயதில் விசுவாசத்தை இழந்தார். தபால் துறையில் தபால்களை பட்டுவாடா செய்யும் வேலையில் சேர்ந்தார்.  1899ம் ஆண்டு டிசம்பரில் ஒரு நாள் Bordeauxவிலிருந்து பாரிசுக்கு இவர் பயணம் செய்த இரயில், மணிக்கு 50 மைல் வேகத்தில் வந்த மற்றோர் இரயிலுடன் மோதியது. Gargam இரயிலிலிருந்து 52 அடி தூரத்துக்குத் தூக்கி வீசப்பட்டார். பனியில் விழுந்த அவர் படுகாயமுற்று ஏழு மணி நேரங்கள் உணர்வின்றிக் கிடந்தார். இடுப்பிலிருந்து எல்லாம் செயலிழந்து பக்கவாத நோயால் தாக்கப்பட்டார். சக்கரப் படுக்கையில் அவரை ஆட்கள் தூக்கியபோது அவர் ஏறக்குறைய இறந்தது போல்தான் இருந்தார். 78 கிலோ எடை கொண்ட அவரது உடல், எட்டு மாதங்களுக்குப் பின்னர் ஏறக்குறைய எலும்புக்கூடு போல் மாறியது. அவரது பாதங்கள் மரத்துப் போயின. எந்தத் திட உணவையும் அவரால் உட்கொள்ள முடியவில்லை. குழாய் வழியாகவே உணவு கொடுக்கப்பட்டது. அதுவும் 24 மணி நேரங்களுக்கு ஒரு தடவை மட்டுமே இவ்வாறு உணவு கொடுக்க முடிந்தது. தனது விபத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார் அவர். ஆண்டுக்கு 6,000 பிராங்குகள் கிடைத்தன. அதோடு, முன்காப்புரிமையாக 60 ஆயிரம் பிராங்குகள் இழப்பீட்டுத் தொகையும் கிடைத்தது. இவரைக் கவனிப்பதற்கு இரண்டு தாதியர்கள் இரவும் பகலும் தேவைப்பட்டனர். மருத்துவர்கள் கைவிட்டனர். இவரது நிலை சாகும்வரை இப்படியேதான் இருக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.

Gargamக்கு இரயில் விபத்து நடப்பதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே அவர் ஆலயம் செல்வதை நிறுத்திவிட்டார். இந்த விபத்துக்குப் பின்னர், அருள்சகோதரியான அவரது அத்தை அவரை லூர்து நகருக்குச் செல்லும்படி வருந்திக் கேட்டுக்கொண்டார். Gargam மறுத்துவிட்டார். லூர்து அன்னையிடம் உன்னை அர்ப்பணித்துவிடு என்று அவரது அத்தை விடாது சொல்லிக் கொண்டே இருந்தார். அத்தையின் தொடர் வேண்டுதலை அவர் முற்றிலும் புறக்கணித்தார். பின்னர் அவரது தாயும் அதேபோல் வருந்திக் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் இசைவு தெரிவித்தார். அந்த விபத்து நடந்து ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. Gargam படுத்த படுக்கையாகவேதான் கிடந்தார். ஒரு நிமிடம்கூட அவர் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. அவரை சக்கரப் படுக்கையில் இரயிலுக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் மயக்கமடைந்து ஏறக்குறைய ஒருமணி நேரம் நினைவிழந்தார். லூர்து நகருக்குத் திருப்பயணமாகச் செல்ல வேண்டாம், ஏனெனில் அவர் வழியிலே இறந்து விடுவார் என, அவரை இரயிலுக்குத் தூக்கிச் சென்றவர்கள் சொன்னார்கள். ஆனால் அவரது தாயின் வற்புறுத்தலின்பேரில் லூர்து நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

லூர்து நகர் சென்றதும் ஒப்புரவு அருள்சாதனம் பெற்று திருநற்கருணை உட்கொண்டார். அவரது உடலில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. பின்னர் புதுமைத் தண்ணீர்த் தொட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் வைக்கப்பட்டார். அப்போதும் எந்த மாற்றமும் நிகழவில்லை, எதிர்மாறாக, அவர் இறந்தது போல் ஆனார். இவர் இறந்துவிட்டார் என்றே எல்லாரும் நினைத்தார்கள். வருத்தத்துடன் அவர் தங்கியிருந்த பயணியர் விடுதிக்கு எடுத்து வந்தார்கள். வரும் வழியில் ஓர் அருள்பணியாளர் திருநற்கருணையை ஏந்திப் பவனியாக அவர்கள் பக்கம் வருவதைக் கண்டார்கள். எனவே Gargamஐ தூக்கிச் சென்றவர்கள் அங்கு நின்று, Gargamஐ வெள்ளைத் துணியால் மூடினார்கள். ஏனெனில் அவர் இறந்துவிட்டார் என்றே அனைவரும் கருதினார்கள். அந்த அருள்பணியாளர், வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த Gargamஐ திருநற்கருணையால் ஆசீர்வதித்தார். அவரைச் சுற்றிச் சோகத்துடன் நின்று கொண்டிருந்த குழுவையும் ஆசீர்வதித்தார். உடனடியாக அந்த மூடப்பட்டிருந்த துணிக்குள் அசைவு இருப்பதை அனைவரும் கண்டார்கள். Gargam எழுந்து உட்கார முயற்சித்தார். ஆனால் இறப்பதற்கு முன்னர் காணப்படும் செயல் இது என அங்கிருந்தவர்கள் நினைத்து அவரைப் படுக்க வைக்க முயற்சித்தனர். Gargamன் குடும்பமும் அங்கு இருந்தவர்களும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் நின்று கொண்டிருக்க, அவரோ உறுதியான தொனியில் பேசினார். நான் எழுந்திருக்க விரும்புகிறேன் என்றார். அவர் படுக்கையைவிட்டு எழும்பி நேராக நிமிர்ந்து நின்றார். சிறிது தூரம் நடந்தார். ஆம். Gargam முற்றிலும் குணப்படுத்தப்பட்டார். அவர் மாற்றுத்திறனாளிக்குரிய ஆடைகளை அணிந்திருந்ததால் அவரைப் படுக்கையிலே கிடத்தி தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சென்றதும் நல்ல உடையணிந்து கொண்டு இதுவரை எதுவுமே நடக்காததுபோல் நடந்தார். இரண்டு ஆண்டுகள் வாய்வழியாக எதுவுமே சாப்பிடாத அவர், அன்று நன்றாகச் சாப்பிட்டார்.

1901ம்ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதியன்று 60 புகழ்பெற்ற மருத்துவர்கள் Gargamஐ பரிசோதனை செய்தனர். குணமடைந்த முறையை அறிவிக்காமல் அவர் முழுமையாய்க் குணமடைந்துவிட்டார் என்பதை மட்டும் அறிவித்தார்கள். திருநற்கருணை ஆண்டவருக்கும் அன்னைமரியாவுக்கும் நன்றியாக, Gargam லூர்து நகரில் மாற்றுத்திறனாளிகளுக்குப் பணிபுரிவதற்குத் தன்னை அர்ப்பணித்தார். ஒரு சிறிய தொழில் தொடங்கி ஒரு பக்தியுள்ள பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். ஏறக்குறைய 50 ஆண்டுகள், ஒவ்வோர் ஆண்டும் லூர்து நகர் சென்று சேவை செய்தார். 1952ம் ஆண்டு ஆகஸ்டில் கடைசியாக லூர்து நகர் சென்றார். அதற்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தனது 83வது வயதில் இறந்தார்.

லூர்து நகரில் முதல்கட்டப் புதுமைகள் 1860க்கும் 1862ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தன. Marie Bailly என்பவருக்கு நடந்த ஒரு புதுமை, நொபெல் விருதுபெற்ற அறிவியலாளர் மருத்துவர் Alexis Carrel என்பவரது வாழ்வையே மாற்றியிருக்கிறது, Marie Bailly என்ற பெண் ஒரு காச நோயாளி. இவர் ஒவ்வொரு நிமிடமாய்க் குணமடைந்ததை. Carrel அருகிலிருந்து கவனித்திருக்கிறார். இந்த மருத்துவர் தனது நூலில் இந்தப் புதுமை குறித்து விவரித்திருக்கிறார். Marie Baillyன் ஒட்டுமொத்தக் குடும்பமும் காச நோயால் இறந்துவிட்டது. இறுதியில் இந்தப் பெண் மட்டும் இருந்தார். இந்தப் பெண்ணையும் நுரையீரல் காச நோய்த் தாக்கியது. இவர் இனிமேல் உயிர் பிழைக்கவே மாட்டார் என்று மருத்துவர்கள் கைவிட்டு விட்டனர். இவரை லூர்து நகருக்கு அழைத்துச் சென்றபோதுகூட நிமிடத்துக்கு நிமிடம் செயற்கை சுவாசம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். லூர்து சென்ற பின்னரும், அந்தப் புனிதத் தண்ணீர்த் தொட்டியில் இந்தப் பெண்ணை இறக்க முடியவில்லை. அதனால் அவர்மேல் தண்ணீரைத் தெளித்தார்கள். செபம் சொல்லிக் கொண்டிருக்கும்போது அப்பெண்ணின் அடிவயிற்றில் அந்த நீரைத் தெளித்துக் கொண்டிருந்தார்கள். அவர் அசைவின்றிக் கிடந்தார். மூச்சுத் திணறியது. மரணத்தின் பிடியில் இருந்தார்.

திடீரென அவரது முகம் மாறத் தொடங்கியது. தோலிலும் மாற்றம் தெரிந்தது. அது நடந்தது பிற்பகல் 2.40. அவரது வயிற்றை மூடியிருந்த துணியின் உயரம் குறையத் தொடங்கியது. வீங்கிய அடிவயிறும் குணமாகிக் கொண்டிருந்தது. அப்போது ஆலயக் கடிகாரம் 3 மணியை அடித்தது. ஆம். அப்பெண் குணமடைந்து விட்டார். மருத்துவர் Carrel, “Man the Unknown” என்ற தனது புகழ்பெற்ற நூலில் இந்தப் புதுமை குறித்து விவரித்திருக்கிறார். பாரிசில் இந்தப் புதுமை குறித்து மற்ற மருத்துவர்களிடம் Carrel விவரித்தபோது, அவர்கள் அவரை வித்தியாசமாகப் பார்த்தனர். அதனால் அவர் வேலையைவிட்டு வேறு நாடு செல்ல வேண்டியதாயிற்று.

அன்பர்களே, இப்படி இறைவனின் தாயாம் அன்னை மரியா தன்னை நம்பி வருவோருக்கு நாளும் உடலுக்கும் மனதுக்கும் குணமளித்து வருகிறார். ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற தலைப்புடன் இடம்பெறும் இந்த யூபிலி ஆண்டில் நமது விசுவாசத்தை ஆழப்படுத்துவோம். நம்பினோர் ஒருநாளும் கெடுவதில்லை. அன்னை மரியா தாய்க்குரிய பாசத்தோடு தனது பிள்ளைகளின் கவலைகளையும் கண்ணீரையும் போக்கி வருகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 ஜூலை 2025, 13:10