MAP

நான்கு பெருங்கோவில்களின் புனித கதவுகள் நான்கு பெருங்கோவில்களின் புனித கதவுகள்  

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டு ஒரு மீள்பார்வை

உரோமில் உள்ள 4 பெருங்கோவில்களின் புனித கதவுகள், ரெபிபியா சிறைச்சாலை புனித கதவு என உரோமில் 5 புனித கதவுகளைத் திறந்து வைத்து, எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டு என்னும் 2025-ஆம் ஆண்டிற்கான யூபிலி ஆண்டினை ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அன்பு நேயர்களே எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டானது தொடங்கப்பட்டு ஏறக்குறைய ஆறு மாதங்களைச் சிறப்பாகக் கடந்து விட்டது. 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 25, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவன்று ஆரம்பமாகிய இந்த யூபிலி ஆண்டு 2025 ஆனது, 2026- ஆம் ஆண்டு ஜனவரி 6, திருக்காட்சிப் பெருவிழாவன்று நிறைவு பெற இருக்கின்றது. எனவே, இன்றைய நம் நிகழ்வில் கடந்த 6 மாதங்களாகத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட  யூபிலி ஆண்டு பற்றிய ஒரு மீள்பார்வையினைக் காணலாம்.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25, கிறிஸ்து பிறப்பு பெருவிழா நள்ளிரவு திருப்பலியின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் புனித கதவினைத் திறந்து வைத்து எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த 2025- ஆம் ஆண்டு யூபிலியினை ஆரம்பித்து வைத்தார்.

தூய பேதுரு பெருங்கோவில் புனித கதவு

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நள்ளிரவு திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “புனிதக் கதவு திறக்கப்பட்டதன் வழியாக, நாம்  புதியதொரு யூபிலி ஆண்டைத் தொடங்கியுள்ளோம். இதனால் இந்த அருள் தரும் புனித ஆண்டின் அறிவிப்பின் மறைபொருளுக்குள் நாம் ஒவ்வொருவரும் நுழைய முடியும் என்று நம்புகிறோம்” என்று கூறினார். “எதிர்நோக்கின் கதவு உலகுக்குத் திறக்கப்பட்ட இரவு கிறிஸ்து பிறந்த இந்த இரவு, உங்களுக்கும் எதிர்நோக்கு இருக்கிறது என்று கடவுள் நம் ஒவ்வொருவரிடமும் சொல்லும் இரவு இது. கிறிஸ்தவ எதிர்நோக்கு என்பது செயலற்ற முறையில் காத்திருக்கும் ஒரு மகிழ்ச்சியான முடிவு அல்ல, நமக்கே உரிய பழக்க வழக்கங்களில் வாழ்ந்துகொண்டு சோம்பலில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அது நம்மைக் கேட்டுக்கொள்கிறது” என்றும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

“நமது அன்னையாம் இப்பூமிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி, அநியாயக் கடன்களால் ஏழைநாடுகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சுமைகள், பழைய மற்றும் புதிய வகையான அடிமைத்தம் ஆகியவற்றால் சிறைபிடிக்கப்பட்ட அனைவருக்கும் நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் அளித்து இந்த உலகையே மாற்றியமைப்பதற்கு இந்த யூபிலி ஆண்டு நம்மை அழைக்கிறது” என்றும் நினைவூட்டினார் திருத்தந்தை.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா ஊர்பி எத் ஒர்பி சிறப்பு செய்தி

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று நண்பகலில் வழங்கிய ஊருக்கும் உலகிற்குமான ஊர்பி எத் ஓர்பி சிறப்புச் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “புனித கதவு மேய்ப்பரான இயேசுவை அடையாளப்படுத்துகின்றது” என்று எடுத்துரைத்தார். 

“புனிதக் கதவு அனைவருக்காகவும் திறந்திருக்கும் மீட்பின் கதவாகிய இயேசுவைக் குறிக்கிறது. இரக்கத்தின் தந்தை நம் உலகத்தின் மத்தியில், வரலாற்றின் மத்தியில், நாம் அனைவரும் அவரிடம் திரும்புவதற்காகத் திறந்துவிட்ட கதவுதான் இயேசு. நாம் அனைவரும் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள்; தந்தையின் வீட்டிற்குத் திரும்புவதற்கு நமக்கு ஒரு மேய்ப்பரும் ஒரு கதவும் தேவை. இயேசுவே அந்த மேய்ப்பரும் கதவுமாக இருக்கின்றார்” என்று இயேசுவே நம் வாழ்வின் கதவாக இருப்பதை வலியுறுத்தினார் திருத்தந்தை.

ரெபிபியா சிறைச்சாலை புனிதக் கதவு

டிசம்பர் 26, புனித ஸ்தேவான் திருவிழாவன்று, உரோமையிலுள்ள ரெபிபியாவின் சிறையில் புனிதக் கதவைத் திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றி வழங்கிய மறையுரையில், மன்னிப்பு, சுதந்திரம் என்னும் இரண்டு இலக்குகளைப் பற்றி சிந்திக்க அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“தான் இறக்கின்ற வேளையிலும் புனித ஸ்தேவான் முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்” என்று சொல்லி உயிர்விட்டார்”. மன்னிப்பு என்னும் அன்பின் செயல் வழியாக நாம் நமது சுதந்திரத்தை மீண்டும் பெறுகிறோம். இது நாம் சரியானதைச் செய்வதற்கான வலிமையைக் குறிக்கிறது. நாம் நமது நன்மைத்தனத்தில் உண்மையாக நிலைத்திருக்கும்போது சுதந்திரமாக இருக்கிறோம்” என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

டிசம்பர் 29, அன்று  அனைத்துலக ஆலயங்களுக்கெல்லாம் தாய் ஆலயமாகத் திகழும் உரோமில் உள்ள புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் உள்ள புனிதக் கதவுகளைத் திறந்து வைத்தார்.

ஜனவரி 1, புத்தாண்டு மற்றும் அன்னை மரியா இறைவனின் தாய் பெருவிழாவன்று உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலில் உள்ள புனித கதவினைத் திறந்து வைத்தார்.

ஜனவரி 5, உரோம் புனித பவுல் பெருங்கோவிலில் உள்ள புனிதக் கதவினைத் திறந்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வாறாக உரோமில் உள்ள 4 பெருங்கோவில்களின் புனித கதவுகள், ரெபிபியா சிறைச்சாலை புனிதக் கதவு என உரோமில் 5 புனித கதவுகளைத் திறந்து வைத்து எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற 2025-ஆம் ஆண்டிற்கான யூபிலி ஆண்டினை ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

Te Deum என்ற நன்றி திருவழிபாடு

2024-ஆம் ஆண்டின் இறுதி நாளாகிய டிசம்பர் 31, நள்ளிரவு நன்றி திருவழிபாட்டின்போது  “எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டின் மையக்கருத்தானது பல்வேறு அர்த்தங்கள் நிறைந்ததாகவும், முன்னோக்கு வழிகள் பலவற்றைக் கொண்டதாகவும் இருக்கின்றது, இதுவே திருப்பயணங்களின் பாதையாகவும் அமைகின்றது” என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.

எதிர்நோக்கின் சிறந்த பாதைகளில் ஒன்று உடன்பிறந்த உணர்வு. அனைவரும் உடன்பிறந்தோரே என்ற சுற்றுமடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தி உள்ளதும் இதுவே. ஆம் உலகின் எதிர்நோக்கு என்பது நம் உடன் பிறந்த உணர்வில் உள்ளது.

புத்தாண்டு திருப்பலி

2025-ஆம் ஆண்டு புத்த்தாண்டு திருப்பலியின்போது ஆற்றிய மறையுரையில் “நமது வாழ்வில் மீண்டும் ஒரு புதிய ஆண்டினை இறைவன் கொடுத்துள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் நமது எண்ணத்தை அன்னை மரியாவை நோக்கி உயர்த்துவது மிக நல்லது. இறைவனின் தாயான மரியா இயேசுவுடனான நமது உறவை வலுப்படுத்துகின்றார். நம்மை அவரிடம் மீண்டும் கொண்டு சேர்க்கின்றார். அவரைப்பற்றி நம்மிடம் எடுத்துரைத்து அவரிடமே நம்மை அழைத்துச் செல்கின்றார்” என்று கூறினார் திருத்தந்தை.

அன்னை மரியா எதிர்நோக்கின் கதவாக இருந்து நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கின்றார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், யூபிலி ஆண்டிற்கான புனிதக் கதவினைத் திறந்துள்ள நமக்கு, இயேசுவை இவ்வுலகிற்குக் கொண்டு வரும் கதவாக நுழைவாயிலாக அன்னை மரியா இருக்கின்றார் என்றும் நினைவூட்டினார்.

உலக சமூகத் தொடர்புகளுக்கான யூபிலி நாள்

ஜனவரி 24 முதல் 26 வரை உலக சமூக தொடர்புகளுக்கான யூபிலி நாளாக திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட நிலையில், “எதிர்நோக்கின் கதைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கக்கூடியவர்களாக சமூகத்தொடர்பாளர்கள் இருக்கவேண்டும், அனைத்தையும் இழந்துவிட்டதாகத் தோன்றினாலும் அதில் மறைந்திருக்கும் நன்மையின் துகள்களைத் தேடுபவர்களாக, எதிர்நோக்கிற்கு நேர்மாறான அவநம்பிக்கைச் சூழலிலும் எதிர்நோக்கை தேட அனுமதிப்பவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

காவல் படையினர், மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி

பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய நாள்களில் இராணுவம், காவல் படையினர், மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி நாளாக சிறப்பிக்கப்பட்டது.

“சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் பல பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய பணியானது, இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், “நாடுகளின் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பு, சட்டபூர்வமான தன்மை மற்றும் நீதியின் பாதுகாவலர்களாக இருக்க அவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்” என்றும் கூறினார்.

“இயேசுவைப்போல உதவி, பாதுகாப்பு தேவைப்படும் நிலையில் இருக்கும் மக்களைப் பாருங்கள், அவர்களது வாழ்க்கைப் படகில் ஏறுங்கள், அமருங்கள், நற்செய்தியின் வெளிச்சத்திலும், நன்மைக்கான பணியிலும் தொடர்ந்து நிலைத்து நில்லுங்கள்” என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 14, Bronchitis எனப்படும் மூச்சுக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, அது தொடர்பான சிகிச்சைக்கென உரோம் நகரின் அகுஸ்தீனோ ஜெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே அதன்பின் வந்த யூபிலி நாள்கள் அனைத்தும் திருத்தந்தையின் சார்பில் திருப்பீடத்துறைகளைச் சார்ந்த கர்தினால்களின் தலைமையில் சிறப்பிக்கப்பட்டது.

கலைஞர்களுக்கான யூபிலி நாள்

பிப்ரவரி மாதம் 15 முதல் 18 வரை கலைஞர்களுக்கான யூபிலி நாளாகக் கொண்டாடப்பட்டது. “உலகில் மறைந்திருக்கும், கடவுளின் மகத்துவத்தை, நமது கண்கள் மற்றும் இதயத்தால் உணரவைப்பது கலைஞர்களின் பணி, மனிதகுலம் தனது திசையையும், எதிர்நோக்கின் எல்லையையும் இழக்காமல் இருக்க உதவுவதும் கலைஞர்களின் பணி என்று கர்தினால் José Tolentino de Mendonça அவர்கள் திருத்தந்தையின் யூபிலி நாள் கருத்துக்களைத் திருப்பயணிகளிடத்தில் பகிர்ந்துகொண்டார்.

திருத்தொண்டர்களுக்கான யூபிலி

பிப்ரவரி 21 முதல் 23 வரை சிறப்பிக்கப்பட்ட திருத்தொண்டர்களுக்கான யூபிலி நாளின்போது, “திருத்தொண்டர்கள் தங்களது பணியின் வழியாக இரக்கமுள்ள இறைத்தந்தையின் முகத்தை உருவாக்கும் சிற்பியாகவும், ஓவியராகவும் இருக்கின்றனர்,  தமத்திரித்துவத்தின் மறைபொருளுக்கு சான்றாகத் திகழ்கின்றனர்” என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

தன்னார்வலர்களுக்கான யூபிலி நாள்

மார்ச் 8 முதல் 9 தன்னார்வலர்களுக்கான யூபிலி நாளாகத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டது. “இயேசுவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி, பணி பெற அன்று பிறருக்கு பணிபுரிவதற்காக அழைக்கப்பட்டிருக்கும் தன்னார்வலர்களின் பணி பாராட்டுக்குரியது” என்று வாழ்த்திய திருத்தந்தை, “தனிமை, வறுமை என்னும் பாலைவனத்தில் பல்வேறு தன்னார்வப்பணிகள் புதிய மனுக்குலத்திற்கான இலைகளைத் துளிர்க்கச்செய்து, புதிய தோட்டத்தை உருவாக்குகின்றது, இறைவனின் கனவான இத்தோட்டம் நம் எல்லோரது கனவாக இருக்கவேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

திருநற்கருணை ஆராதனை

மார்ச் 28, வெள்ளிக்கிழமை 24 மணி நேர திருநற்கருணை ஆராதனை யூபிலி ஆண்டை முன்னிட்டு சிறப்பிக்கப்பட்டது. மார்ச் 28 முதல் 30 வரை இறை இரக்கத்தின் மறைப்பணியாளர்களுக்காகவும், ஏப்ரல் 5 முதல் 6 நோயாளிகளுக்காகவும் யூபிலி நாள் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டது.

“நோய் என்பது மிகவும் கடினமானது, வாழ்வைக் கடினமாக்குவது, நாம் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது,  நோயினால் நாமும் சில நேரங்களில் எதிர்காலத்திற்கான நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றோம்” என்றும்  நோயாளர்களுக்கான யூபிலி நாள் செய்தியில் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர்ப்புப்பெருவிழா நாளில்

“உயிர்ப்பு உன்னதமானது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, பாடுகள் பட்டு இறந்து உயிர்த்ததால் தான், நமது நம்பிக்கை புதுபிறப்பெடுக்கின்றது. இயேசு நமக்காக உயிர்த்தார் என்ற நம்பிக்கையில் ஆழப்பட்டவர்களாய் நாம் வாழவும், நமது வாழ்வை நம்பிக்கையின் சான்றாக மாற்றவும், இந்த உயிர்ப்பு நாளில் இறைவன் நம்மை அழைக்கின்றார் என்பதை உணர்ந்து வாழ்வோம்” என்று உயிர்ப்புப்பெருவிழா திருப்பலியின்போது வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர்ப்புப் பெருவிழா ஊர்பி எத் ஓர்பி செய்தி

“எதிர்நோக்கின் அடித்தளமாகிய இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்வானது, எதிர்நோக்கு என்பது இனி ஒரு மாயை அல்ல, சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார் என்னும் ஏமாற்றமடையாத எதிர்நோக்கினை நமக்கு எடுத்துரைக்கின்றது. இந்த எதிர்நோக்கானது தவிர்க்கப்பட வேண்டியதல்ல. மாறாக, சவாலான ஒன்று. அந்நியப்படுத்துவதில்லை, மாறாக அதிகாரம் அளிக்கிறது” என்று ஊர்பி எத் ஓர்பி சிறப்புச் செய்தியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் உயிர்ப்புப்பெருவிழாவன்று நண்பகலில் இறுதியாகச் சந்தித்து வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உயிர்ப்பு ஞாயிறுக்கு மறுநாள் ஏப்ரல் 21, அன்று இறைபதம் சேர்ந்தார்.

2025-ஆம் ஆண்டு டிசம்பர் 25 கிறிஸ்து பிறப்புப்பெருவிழாவன்று புனித கதவினைத் திறந்து வைத்து யூபிலி ஆண்டினை துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவரை திருஅவையின் யூபிலிகள் அனைத்தையும் சிறப்பாக வழிநடத்தினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தொடர்ந்து மே 8 அன்று திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், மே மற்றும் ஜூன் மாதங்களில் சிறப்பித்த யூபிலி நாள்கள் குறித்த மீள்பார்வையினை வரும் வாரத்தில் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஜூலை 2025, 08:32