நேர்காணல் – இணைய வழியில் மறைப்பணியாற்றுவோர்க்கான யூபிலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
நவீன சமூகத்தொடர்பு சாதனங்கள், நம் மனிதக் குடும்பத்திற்குள் ஒன்றிப்பையும், உரையாடலையும் ஊக்குவிப்பதற்கு ஆற்றல்மிக்க கருவிகளாக இருக்கின்றன என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளுக்கேற்ப, வளர்ந்து வரும் சமூக ஊடகங்கள், சமூகத் தொடர்பு சாதனங்கள் திருஅவையின் வளர்ச்சியிலும் சிறந்த பங்கை ஆற்றி வருகின்றன. இன்றைய டிஜிட்டல் ஊடகம், குறிப்பாக, சமூக ஊடகம் எழுப்பியுள்ள பல கடுமையான அறநெறி சார்ந்த விவகாரங்களை, ஊடகவியலாளர்களும், மனித உறவுகளின் உண்மையான தன்மையை மதிப்பவர்களும், ஞானம், மற்றும், தெளிந்துதேர்வுசெய்யும் பண்புகளால் எதிர்கொள்ள வேண்டும் என்று அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். போர், வன்முறை, இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் துயர்கள், அவநம்பிக்கையற்ற சூழல், அன்பற்ற உறவுகள் என இவ்வுலகம் மக்கள் எதிர்கொள்ளும் பல சவால்களை ஊடகக் கல்வியும், கத்தோலிக்க ஊடக வலைதள அமைப்புக்களும் எதிர்கொள்கின்றன. அவற்றில் முனைப்புடன் செயலாற்றி மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கி வருகின்றன.
போலியானவற்றிலிருந்து உண்மையையும், தவறானவற்றிலிருந்து சரியானதையும், தீமையான செய்திகளிலிருந்து நன்மையையும் சமூக ஊடகங்கள் கண்டுணர வேண்டும். நீதி, சமூக நல்லிணக்கம், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை மதித்தல் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வருகின்ற ஜூலை மாதம் 28, 29 ஆகிய நாள்களில் இணையவழியில் மறைப்பணியாற்றுவோர்க்கான யூபிலியானது (The Jubilee of Digital Missionaries and Catholic Influencers) திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கின்றது.
மின்னனு ஊடகம் வழியாக கத்தோலிக்கச் சிந்தனைகளை, மறைப்பணி உணர்வுகளை மக்களிடத்தில் வளரச்செய்பவர்கள். அதனை அனுதினமும் மக்கள் மனதில் தூண்டி வளர்த்தெடுப்பவர்கள் இவர்கள். மக்கள் மனதில் கத்தோலிக்க தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள். எனவே இன்றைய நம் நேர்காணலில் இணையவழியில் மறைப்பணியாற்றுவோர் குறித்தக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்பணி ஆரோக்கிய தாஸ். இன்றைய மன்னா என்னும் வலையொளிக் காட்சிகள் வழியாகவும், சிந்தனைப்பகிர்வுகள் வழியாகவும் மக்கள் மனதில் இடம்பெற்றிருப்பவர் அருள்தந்தை ஆரோக்கிய தாஸ். சலேசிய சபை அருள்பணியாளரான எல் ஆரோக்கியதாஸ் அவர்கள், இன்றைய மன்னா என்னும் வலையொளியின் நிறுவனராவார். வலையொளி நிகழ்ச்சிகளின் வழியாகக் கிறிஸ்துவின் நற்செய்தியை இளம் உள்ளங்களில் விதைத்தும், வளர்த்தும் பணியாற்றிக் கொண்டிருப்பவர். மறையுரைச் சிந்தனைகளின் வழியாக மகத்தான கருத்துக்களை எடுத்துரைக்கும் அருள்பணியாளர் ஆரோக்கியதாஸ் அவர்கள், தற்போது சென்னையில் உள்ள தொன் போஸ்கோ விஸ்டம் டவுன் பள்ளியின் நிர்வாகத் தந்தையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.தந்தை அவர்களை இணைய வழியில் மறைப்பணியாற்றுவோர்க்கான யூபிலி குறித்தக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்