MAP

சிறையிலிருக்கும் பெண்களுக்குப் பணியாற்றும் அருள்சகோதரிகள் சிறையிலிருக்கும் பெண்களுக்குப் பணியாற்றும் அருள்சகோதரிகள் 

சிறைப்பட்ட பெண்களின் நம்பிக்கையைக் கட்டமைக்கும் சகோதரிகள் !

சிறையில் உள்ள பெண்களுக்கு உதவி வருகின்றோம். சிறையில் உள்ள பெண்களிடையே நம்பிக்கையை கட்டமைத்து வருகின்றோம் - அருள்சகோதரி. Kujawska.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

சிறைத்  தண்டனை அனுபவிக்கும் பெண்களுக்கு ஆன்மிகம் மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்விலும் உறுதியான ஆதரவை, போலந்தின்  Krzywaniec  சிறைச்சாலை நிறுவனத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இறைபராமரிப்பின் நல்லாயன் சபையைச்  சார்ந்த அருட்சகோதரிகள் வழங்கி வருகிறார்கள்.

இறைபராமரிப்பின் நல்லாயன் சபை சகோதரிகள், நெருக்கடியில் உள்ள பெண்களுக்கு உதவுவதையே தங்கள் சபையின் தனிவரமாகக் கொண்டுள்ளனர் என்றும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறையில் உள்ள பெண்களை சந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் வத்திக்கான் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் அருள்சகோதரி Krzysztofa Kujawska.

மேலும், சிறையில் உள்ள பெண்களை சந்திக்கச் செல்லும் இவர்கள் குழுக்களாகவும், சில நேரங்களில் தனியாகவும் அவர்களைச் சந்திப்பதாகவும், அங்குள்ள பெண்களுக்கு ஆன்மிகத்தோடு வாழ்வியல் ஆதாரங்களையும் அதாவது, சிறையில் உள்ள பெண்கள், சிறையைவிட்டு வெளியே வந்த பின்னரும் அவர்களின் வீட்டு வசதி குறித்த பிரச்சனைகளில் உதவுதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், உளவியல் ஆதரவுகளை வழங்குதல் போன்ற உதவிகளை செய்து வருவதாகவும் விளக்கியுள்ளார் அருள்சகோதரி Kujawska.

பெண்களுக்கு உதவுவதையே தங்களின் தனிவரமாகக் கொண்ட நல்ல ஆயன் சபை அருள்சகோதரிகள் இச்சிறைப்பணிக்காக தனி மையங்களை நடத்துவதில்லை என்றும், சிறையில் உள்ள பெண்கள் தங்களின் தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர், அவர்களில் யாராவது அருள்சகோதரிகளுடன் தங்க விரும்பினால் வாழ்நாள் முழுவதும் அருள்சகோதரிகளின் இல்லத்திலேயே தங்கலாம் என்றும் அருள்சகோதரி Kujawska  தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சிறையிலிருந்து வந்த பெண்களும் தங்களோடு இருப்பதாகவும், குடும்பம் மற்றும் நண்பர்களால் விலக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக, சிறைப் பணியாளரின் ஒத்துழைப்புடன் உதவிகளை வழங்கி வருவதாகவும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி.

இறைபராமரிப்பின் நல்லாயன் சபையின் நிறுவனரான அருளாளர் Maria Karłowska அவர்கள் Poznań நகரின் வீதிகளில் உள்ள பெண்களுக்கு உதவினார் என்றும், அவர்களின் வழிதொடர்ந்து, சிறையில் உள்ள பெண்களுக்குத் தாங்கள் உதவி வருகின்றோம் என்றும் எடுத்துரைத்த அருள்சகோதரி. Kujawska அவர்கள், சிறையில் உள்ள பெண்களிடையே நம்பிக்கையை கட்டமைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

சிறைபட்ட பெண்களுடன் பணியாற்றுவது, அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சூழ்நிலைக்கான பதிலாகவும் இருக்கிறது என்றும் அருள்சகோதரி. Kujawska தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஜூலை 2025, 13:05