பொருளாதார மற்றும் அரசியல் நோக்கங்கள் எல்லைப் போரை ஊக்குவிக்கின்றன!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“கம்போடியாவில் எல்லைப் போருக்கு பொருளாதார மற்றும் அரசியல் நோக்கங்கள் முக்கியக் காரணங்களாகின்றன” என்று தனது பெரும் கவலை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மறைப்பணியாளர் Paul Chatsirey Roeung.
“தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன” என்றும், “தொடர்ந்து இடம்பெற்று வரும் எல்லை மோதல்கள் ஏறத்தாழ 1,40,000 தாய்லாந்து மக்களும் 40,000 கம்போடிய மக்களும் பெரும் இடம்பெயர்வைச் சந்திக்க வழிவகுத்துள்ளன” என்றும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் மறைப்பணியாளர் Roeung.
“மாநில மோதல்களுக்கு அப்பால், இந்த மோதல் அரசியல் நோக்கங்கள் மற்றும் எண்ணெய், எரிவாயு மற்றும் எல்லை தாண்டிய வணிகங்கள் உள்ளிட்ட பொருளாதார நலன்களால் இயக்கப்படுகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார் மறைப்பணியாளர் Roeung.
“கம்போடிய கத்தோலிக்கத் தலத்திருஅவை எந்தப் பக்கமும் சாய்ந்துவிடாமல் அமைதிக்காகப் போராடி வருகிறது” என்று கூறியுள்ள அவர், சமூக ஊடகங்கள் தேசியவாதத்தை எவ்வாறு தூண்டிவிடுகின்றன என்பதையும், Preah Vihear கோயில் தொடர்பான சர்ச்சை மற்றும் வலிமை வாய்ந்த அரசியல் குடும்பங்களின் செல்வாக்கு போன்ற நீண்டகால பிரச்சனைகள் நிலைமையை எவ்வாறு மோசமாக்குகின்றன என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.
“மோதல்கள் இருந்தபோதிலும், கம்போடியாவில் உள்ள தாய்லாந்தைச் சேர்ந்த மறைப்பணியாளர்கள் விரோதத்தை எதிர்கொள்ளாமல் தங்கள் மேய்ப்புப் பணியைத் தொடர்கின்றனர்” என்று கூறியுள்ள அவர், அனைத்துலகத் தலையீட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், சமூகங்கள் இறைவேண்டலில் ஈடுபட்டு அமைதியை வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அங்கு வன்முறை தீவிரமடைந்து வரும் நிலையில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1,70,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்