MAP

இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொடுக்கும் இயேசு இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொடுக்கும் இயேசு  

பொதுக் காலம் 17-ஆம் ஞாயிறு : முயற்சியும் தாழ்ச்சியும் ஆன்மிகத்தின் அடித்தளங்கள்!

நமது அன்றாட ஆன்மிக இறைவேண்டல்களில் தொடர் முயற்சியும், தாழ்ச்சியும் தழைத்தோங்கட்டும்!
பொதுக் காலம் 17-ஆம் ஞாயிறு : முயற்சியும் தாழ்ச்சியும் ஆன்மிகத்தின் அடித்தளங்கள்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. தொநூ 18: 20-32     II. கொலோ 2: 12-14    III. லூக் 11: 1-13)

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அந்த நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரையும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார். அனைவரும் வந்து சேர்ந்ததும். “உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். அதில் யார் வெற்றியடைகிறீர்களோ அவர் தான் அடுத்த மேலாளர்” என்றார். “இப்போது என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த ஆண்டு கொண்டுவந்து என்னிடம் காட்ட வேண்டும். யாருடைய செடி நன்றாக வளர்ந்திருக்கிறதோ அவரே என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும்” என்றார். அனைவரும் ஆளுக்கொரு விதை வாங்கிச் சென்றனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் இரபீக் என்பவரும் ஒரு விதை வாங்கிச் சென்றார். தன் மனைவியிடம் முதலாளி கூறிய அனைத்தையும் சொன்னார். அவரின் மனைவி தொட்டி, உரம், தண்ணீர் என எல்லாம் அவருக்குக் கொடுத்து அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தாள். ஒரு வாரம் கழிந்து நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் இரபீக்கின் தொட்டியில் விதை இன்னும் முளைக்கவே இல்லை. ஒரு மாதம் ஆகியும் கூட விதை முளைக்கவே இல்லை. நாள்கள் கடந்தன. ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அப்பொழுதும் தொட்டியில் விதை முளைக்கவே இல்லை. அப்போது, “நான் விதையை வீணாக்கிவிட்டேனோ” என்று புலம்ப தொடங்கினார் இரபீக். ஆனாலும், தினந்தோறும் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதை அவர் நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவுமில்லை.

ஒர் ஆண்டு கடந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். இரபீக் தன் மனைவியிடம், “காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன்” என்று சொன்னார். அவரின் மனைவி அவரைச் சமாதானப்படுத்தி, “நீங்கள் ஓராண்டு முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் செயலில் நேர்மையாக நடந்து கொண்டீர்கள். ஆகவே, தொட்டியை எடுத்துச் சென்று முதலாளியிடம் காட்டுங்கள்” என்றாள். இரபீக்கும் காலி தொட்டியை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். எல்லாருடைய தொட்டிகளையும் பார்த்தார் முதலாளி. விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. ஆனால் இரபீக்கின் தொட்டியைப் பார்த்த அனைவரும் அவரைக் கேலி செய்து சிரிக்கத் தொடங்கினர். முதலாளி அனைவரையும் தன்னுடைய அறைக்கு அழைத்து, “நீங்கள் எல்லாரும் அருமையாகச் செடியை வளர்த்துள்ளீர்கள். உங்களில் ஒருவர் தான் இன்று மேலாளர் பொறுப்பை ஏற்கபோகிறார்” என்றார். மீண்டும் ஒருமுறை எல்லாருடைய செடியையும் பார்வையிட்டார். இரபீக் கடைசி வரிசையில் நின்றிருந்தார். அவரைத் தன்னருகில்  வருமாறு அழைத்தார்.

அப்போது முதலாளி இரபீக்கிடம், “உன் செடி எங்கே” என்று கேட்டார். அவரிடம் இரபீக் ஒராண்டாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாகக் கூறினார். முதலாளி, “இரபீக்கை தவிர அனைவரும் உட்காருங்கள்’ என்றார். பிறகு இரபீக் தோளில் கையை போட்டுக்கொண்டு, “நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான்” என்றார். இரபீக்கிற்கு ஒரே அதிர்ச்சி! “தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்தப் பொறுப்பை கொடுக்கிறார்” என்று குழம்பிப்போனார். அப்போது மேலாளர், “சென்றாண்டு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை கொடுத்து வளர்க்கும்படி சொன்னேன் அல்லவா? அவை அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் (Boiled seeds). அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அவைகள் முளைக்காது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்குப் பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால், இரபீக் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார், ஆகவே அவரே, என் நிறுவனத்தை நிர்வகிக்கும் தகுதிபடைத்தவர்” என்றார்.

பொதுக்காலத்தின் 17-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இறைவேண்டலின் வலிமையையும் வல்லமையையும் சிறப்பாக நமக்கு எடுத்துரைக்கின்றன. நமது அன்றாட ஆன்மிக வாழ்வில், இறைவனின் அருள்வரங்களைப் பெற்றுவாழ்வதற்கு எவ்வித குறுக்கு வழியையும் நாம் கைகொள்ள முடியாது. மாறாக, ஆழமான இறைநம்பிக்கை, நம்பகத்தன்மை, தொடர்முயற்சி, தாழ்ச்சிநிறை உள்ளம் ஆகிய நான்கு முக்கிய பண்புகள் நமக்குத் தேவைப்படுகின்றன. இன்றைய முதல் வாசகம் இதற்கொரு மாபெரும் எடுத்துக்காட்டாக ஆபிரகாமை முன்னிறுத்துகின்றது.  

சோதோம் கொமோரா நகரங்களில் வாழும் நீதிமான்களைக் காப்பாற்றுவதற்காக கடவுளோடு ஆபிரகாம் நடத்தும் பேரம் (உரையாடல்) நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஐம்பது பேர் தொடங்கி 10 பேர் என வல்லமைப் படைத்த கடவுளுடன் அவர் நடத்தும் பேரம் நிரபராதிகளான நீதிமான்கள் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற அவரின் உயர்ந்த மனதைக் காட்டுகிறது. ஆபிரகாமின் இந்த உரையாடலை ‘இறைவேண்டலின் உரையாடல்’ என்றும் கூட நாம் அழைக்கலாம். இவ்வுரையாடலின் இறுதியில் ஆபிரகாமின் தொடர் முயற்சி வெற்றியடைவதைக் காணமுடிகிறது. இன்றைய நற்செய்தியில், தனது சீடரிடம் இறைவனிடம் எவ்வாறு இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு. ஒத்தமை நற்செய்திகளில் லூக்காவும் மத்தேயும் மட்டுமே இதுகுறித்துக் குறிப்பிடுகின்றனர் (லூக் 11: 1-13 ; மத் 6:9-15; 7:7-11). ஆனால் லூக்கா நற்செய்தியில் இயேசு ஆண்டவரின் இறைவேண்டல் வாழ்வு அதிகம் அழுத்தம் பெறுவதைக் காணமுடிகிறது (காண்க. 3:21,22; 4:16; 6:12; 9:28, 29, ; 22:39-42; 23:34-46). மேலும் இறைவேண்டல் குறித்த இயேசுவின் படிப்பினைகளும் ஏனைய ஒத்தமை நற்செய்திகளைவிட லூக்காவில் அதிகம் காணப்படுகிறது (அதி. 18:1-14).

இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்” என்று கூறி இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு. இந்த இறைவேண்டல் மிக மிக எளிமையானது. ஆனால் அதேவேளையில், எல்லா கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது. நமது கிறிஸ்தவ வாழ்வில் எல்லா நிலைகளிலும் இந்த இறைவேண்டலை தான் சொல்லுகின்றோம். இயேசு கற்றுத்தரும் இந்த இறைவேண்டலில் ஐந்து மன்றாட்டுகள் காணக்கிடக்கின்றன. அதேவேளையில், இயேசு அதிகாலையிலேயே எழுந்து இறைத்தந்தையிடம் வேண்டுதல் செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் என்பதையும், நமது தேவைகளுக்காக இறைவேண்டல் செய்வதைத் தவிர்த்து, இறைவனோடு ஒன்றித்து அவரது திருவுளப்படி வாழ்வதற்கான வழிகளைத் தேட இயேசுவின் இறைவேண்டல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது என்பதையும் நம் மனங்களில் நிறுத்துவோம்.

இதே பகுதியை மத்தேயு நற்செய்தியாளர் வேறொரு சூழலில் எடுத்துக்காட்டுகிறார். அதாவது, இயேசுவே முன்வந்து இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொடுப்பதாகக் கூறுகிறார். இதற்கு முக்கியக் காரணம் பரிசேயர் எழுப்பிய இறைவேண்டல்களில் தற்பெருமையும், ஆணவமும், வெற்று வார்த்தைகளும், போலி இறைநிலை பண்புகளும் தலைவிரித்தாடின. அதனால்தான், இயேசுவே முன்வந்து அவர்கள் எப்படி இறைவேண்டல் எழுப்ப வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார். “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில், நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.  ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்” (மத் 6:7,8) என்று கூறி இந்த இறைவேண்டலை கற்றுக்கொடுக்கிறார். மேலும், பரிசேயரின் போலித்தனமான ஆன்மிக நடவடிக்கைகளையும் கடுமையாகக் கண்டிக்கிறார் இயேசு. தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள். (மத் 23:5-7)

ஆணவமும் தற்பெருமையும் சுயநலமமும் நிறைந்த நமது இறைவேண்டல்களை கடவுள் எப்போதும் விரும்பமாட்டார். இதற்கு மிகப்பெரும் உதாரணமாக அமைவது இயேசு கூறும் ‘பரிசேயர் மற்றும் வரிதண்டுபவர்’ உவமை. பரிசேயர் இறைவேண்டல் செய்வதைப் பாருங்கள். பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’  (லுக் 18:11, 12). அதேவேளையில், வரிதண்டுபவர் உள்ளம் உடைந்தவராய் இறைவேண்டல் செய்கிறார். ஆனால், வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.” (லூக் 18:13). இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் கடவுளுடன் மேற்கொள்ளும் உரையாடலில் வரிதண்டுவோரிடம் காணப்பட்ட தாழ்ச்சிநிறை உள்ளதைக் காணமுடிகிறது. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது  (குறள் 124). என்ற குறளில், எந்த நிலையிலும் மாறுபடாமல் இருப்பவரின் பணிவு, மலையை விடப் பெரியது, உயர்வானது என்கிறார் வள்ளுவர் பெருந்தகை. ஆக, நமது அன்றாட இறைவேண்டல்களில் வெளிவேடமற்ற தொடர் முயற்சியும், தாழ்ச்சியும் வெளிப்பட வேண்டும்.

இன்றைய நற்செய்தி இரண்டு முக்கிய கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது. முதலாவதாக, நமது இறைவேண்டலில் தொடர் முயற்சி இருக்க வேண்டும். இரண்டாவதாக, நாம் தாழ்ச்சிநிறை உள்ளத்துடன் நமது இறைவேண்டல்களை எழுப்ப வேண்டும். அதனால்தான், இந்த இறைவேண்டல் கற்பித்தலைத் தொடர்ந்து, ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று அப்பம் கேட்கும் நிகழ்வு குறித்து எடுத்துக்காட்டி, "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்" என்று நம்பிக்கையுடன் இறைவேண்டல் செய்ய அறிவுறுத்துகின்றார் இயேசு. மேலும் "பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?" என்று கூறி விண்ணகத் தந்தை நமது இறைவேன்டலின் பயனாக, தனது உன்னதமான தூய ஆவியாரைத் தந்து நம்மைக் காப்பார் என்று மொழிகின்றார் இயேசு. அவ்வாறே, நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றி இயேசு கூறும் உவமையில், அந்தக் கைம்பெண்ணின் தொடர் முயற்சி (தொந்தரவு) காரணமாகவே, அந்த நேர்மையற்ற நடுவர் அவருக்கு நீதி வழங்குகிறார் என்பதைப் பார்க்கின்றோம் (காண்க லூக் 18: 1-8). அவ்வுமையின் இறுதியில், "நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?" என்கிறார் இயேசு.

ஆக, இறைவேன்டலில் தொடர் முயற்சிதான் வெற்றிதரும் என்பதை இந்த உவமையின் வழிநின்று எடுத்துக்காட்டுகின்றார் இயேசு. நாமும் பிள்ளைகளுக்குரிய பாசமுடனும் உரிமையுடனும் நமக்கான தேவைகளுக்காக இறைத்தந்தையை நோக்கிக் குரலெழுப்பி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஜூலை 2025, 15:14