பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு : இறையாட்சிப் பணியில் இன்பம் காண்போம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எசா 66:10-14a II. கலா 6:14-18 III. லூக் 10:1-12, 17-20)
பிரான்ஸ் நாட்டில் ஜரீன் கான் என்றொரு இஸ்லாமியப் பெண் இருந்தார். அவர் ஒரு துப்புரவுப் பணியாளர். கிறிஸ்துவின் படிப்பினைகளால் ஈர்க்கப்பட்டு, கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். அதன்பொருட்டு ஜரீன் கான் என்ற தன்னுடைய பெயரை சோபியா என்று மாற்றிக்கொண்டார் கிறிஸ்தவ மதத்திக்கு மாறிய பிறகு அவர், தான் துப்புரவுப் பணிசெய்யும் இடங்களிலெல்லாம் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தார். அதுமட்டுமன்றி, தன்னாலான உதவிகளையும் ஏழை, எளிய மக்களுக்குச் செய்துவந்தார். ஒருநாள் இவர் செய்து வந்த பணிகளைப் பிடிக்காத ஒருவர் அவரிடம், "நீங்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கிறீர்கள் என்பதற்காக போயும், போயும் ஒரு மரத்திற்கு முன்பாகவா நற்செய்தி அறிவிக்க வேண்டும்” என்று ஏளனமாகக் கேட்டார். ஏனென்றால் சோபியாவிற்கு சரியாகக் கண்பார்வை தெரியாது. அதனால்தான் சோபியா, ஒருமனிதர் தனக்கு முன்பாக இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, அவருக்கு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்திருக்கிறார். அதைப் பார்த்துதான் அந்த மனிதர், இவர் ஒரு மரத்திற்கு நற்செய்தி அறிவிப்பதாக ஏளனமாகப் பேசினார் அந்த மனிதர். அவர் ஒரு கிறிஸ்தவரும்கூட. அப்போது அம்மனிதரைப் பார்த்து, “கிறிஸ்துவின் போதனைகளைக் கேட்டுவிட்டு, மரம்போல் யாருக்குமே நற்செய்தி அறிவிக்காமல் இருக்கின்ற உங்களைக் காட்டிலும், மரத்திற்கு நற்செய்தி அறிவிக்கின்ற நான் எவ்வளவோ மேல்” என்று கூறினார். இதனால் கேள்வியெழுப்பிய அம்மனிதர் வெட்கித் தலைகுனிந்தார்.
பொதுக் காலத்தின் பதினான்காம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இயேசுவின் சீடர்களாக நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு அனுப்பப்படும் நாம் மிகவும் அர்ப்பணமுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற உயரிய கருத்தை முன்வைக்கின்றன இன்றைய வாசகங்கள். இயேசு எழுபத்திரண்டு சீடர்களை அனுப்பும் பகுதியை விவரிக்கிறார் லூக்கா நற்செய்தியாளர். 'இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்' என்று இன்றைய நற்செய்தி தொடங்குகிறது. இயேசு தனது பொதுவாழ்வுப் பணியைத் தொடங்கியபோது அவருடைய சீடர்களின் எண்ணிக்கை 72-ஆக இருந்திருக்கின்றது. இந்த எண்ணிக்கையே பின்னாளில் 12-ஆக சுருங்கியிருக்கின்றது. காரணம், கப்பர்நாகுமிலுள்ள தொழுகைக்கூடத்தில், இயேசு தன்னை வாழ்வு தரும் உணவாக, அதாவது, "மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்" (யோவா 6:53) என்ற வார்தைகளால் எடுத்துக்காட்டியபோது, "அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, “இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” (வச. 60) என்று பேசிக் கொள்வதைப் பார்க்கின்றோம். அதனால்தான், "இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், “நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?" (வச. 61) என்றும் அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றார் இயேசு. மேலும் இதனைத் தொடர்ந்து 'அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை' (வச. 66) என்றும் பதிவு செய்கின்றார் யோவான்.
இன்றைய நற்செய்தியின்படி இயேசுவின் எருசலேம் நோக்கியப் பயணம் தொடர்கிறது. ஆனால், அதனை அடைவதற்கு முன்பு மூன்று ஊர்களுக்குப் போக அவர் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது. அதனால்தான் அங்குள்ள சூழ்நிலையை அறிந்துவரும் விதமாக அவர்களை முன்னதாக அனுப்புகிறார் இயேசு. அவர்களை அனுப்புவதற்கு முன்பாக முக்கியமான சில அறிவுரைகளையும் அவர்களுக்கு வழங்குகின்றார். முதலாவதாக, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" என்கின்றார் இயேசு. அப்படியென்றால், இயேசுவின் கழுகுப் பார்வையில், மக்களுக்கு ஆற்றப்படவேண்டிய பணிகளின் மொத்த வீரியமும் தெளிவாகத் தெரிந்திருக்கின்றது என்றுதான் நாம் சொல்ல வேண்டும். காரணம், இயேசுவின் இதே வார்த்தைகளை மத்தேயுவும் (மத் 9:37) குறிப்பிடுகின்றார். ஆனால் மாற்கு இதே வார்த்தைகளைக் குறிப்பிடவில்லை என்றாலும் அவரின் பரிவுள்ளத்தை எடுத்துக்காட்டுகிறார் (மாற் 6:33-44). ஆக, இயேசுவின் இந்த வார்த்தைகளில் இறையழைத்தலுக்கான தாகம் வெளிப்படுவதைப் பார்க்கமுடிகிறது.
இரண்டாவதாக, "புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்" என்று மொழிகின்றார் இயேசு. இங்கே சமயத் தலைவர்கள் மற்றும் அரசின் அதிகாரிகளைத்தான் ஓநாய்கள் என்று இயேசு குறிப்பிடுவதாக நாம் புரிந்துகொள்ளலாம். ஏனென்றால், இவர்கள் மக்களை வஞ்சித்து, ஏமாற்றி பணம் பறிப்பவர்களாகக் காணப்பட்டனர். இதன் காரணமாகவே மறைநூல் அறிஞரையும் பரிசேயரையும் கடுமையாகக் கண்டிக்கிறார் இயேசு (காண்க. மத் 23:1-36); மாற் 12:38-40; லூக் 11:37-52) குறிப்பாக, “மறைநூல் அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஏனென்றால், அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதை விரும்புகிறார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதை விரும்புகிறார்கள்; தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; நீண்டநேரம் இறைவனிடம் வேண்டுவதுபோல நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் அவர்களே” (லூக் 20:45-47) என்று உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் அவர்களின் கபட நாடகத்தைத் தோலுரித்துக்காட்டுகின்றார். அவர்களின் இந்த இரட்டை மனநிலையை அறிந்திருந்தபடியால்தான் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர்களை அறிவுறுத்துகின்றார்.
மன்றாவதாக, "பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள்" என்கின்றார். இயேசுவின் இந்த வார்த்தைகளில், சீடத்துவத்திற்கான இலக்கணம் அதாவது, வாழ்வியல் முறைகள் வெளிப்படுவதைப் பார்க்கின்றோம் இன்றையப் பணியாளர்களிடம் இத்தகையப் பண்புகள் வெளிப்படுகின்றனவா என்று சிந்திப்போம். தேவையில்லாத வேளைகளில் கூட எல்லாவிதமான வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்கின்ற மனப்போக்குகள்தாம் இன்றைய நவீனத் துறவிகளிடம் காணப்படுகின்றன. அடுத்து நான்காவதாக, "நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்" என்று உரைக்கின்றார். இயேசு தனது பொதுவாழ்வுப் பணியைத் தொடங்கியது முதல் விண்ணேற்றம் அடையும் வரை அமைதியைத்தான் அதிகம் வலியுறுத்துகின்றார். ஆக, இயேசுவின் வாழ்வில் அமைதி என்பது பிரிக்கமுடியாத ஓர் அங்கமாகவே மாறிப்போனது. குறிப்பாக, இயேசுவின் பிறப்பில் கூட அமைதி குறித்த செய்திதான் வெளிப்படுகின்றது. அவரது பிறப்பைக் குறித்து வானதூதர்கள் இடையர்களுக்கு அறிவிக்கும்போது, விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” (லூக் 2:13-14) என்று கடவுளைப் புகழ்ந்தது என்று வாசிக்கின்றோம். இறுதியில் உயிர்ப்பிற்குப் பிறகு, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" (யோவா 20:19) என்று மொழிகின்றார். அதுவும், "இந்த உலகம் வழங்க முடியாத அமைதியை உங்களுக்குத் தருகின்றேன்" (யோவா 14:27) என்கின்றார். ஆகவே, இத்தகைய அமைதியை தாங்கள் செல்லும் இல்லங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அதன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு.
ஐந்தாவதாக, "அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில், வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்" என்கிறார். இயேசுவின் இந்த வார்த்தைகளில், பணியாளர்கள்மீது மக்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வு வெளிப்படுகின்றது. மேலும் பணித்தளங்களில் மக்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் சமநிலையான மனநிலை வேண்டும் என்று இவ்விடம் படிப்பிக்கின்றார். அடுத்து குறிப்பாக, இறையாட்சி அறிவிப்புப் பணியில் குணப்படுத்துதல் அல்லது நலப்படுத்துதல் ஓர் அங்கம் என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றார். இதற்குத் தன்னையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக்காட்டுகின்றார். அதாவது, இயேசுவின் இறையாட்சிக் குறித்த பணிகளில் குணப்படுத்தும் அருளடையாளங்கள் மையமாவதைப் பார்க்கின்றோம் (காண்க. மாற் 1:29-39). ஆக, இதனையே அவர்களும் செய்யவேண்டுமென அறிவுறுத்துகின்றார் இயேசு.
இறுதியாக, "நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, ‘எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும், இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ எனச் சொல்லுங்கள்" என்று மொழிகின்றார். இயேசுவின் பணியாளர்களாக, நமது பணித்தளங்களில் சவால்களையும், எதிர்ப்புகளையும் நாம் எதிர்கொள்ளும் வேளைகளில் நாம் மனம் தளர்ந்துபோகக் கூடாது, மாறாக, இறையாட்சிக்கான நமது பணிகள் தொய்வின்றி முழுவீச்சில் தொடர்ந்திடல் வேண்டும் என்பதை இவ்வார்த்தைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றார். இதைத்தான் புனித பவுலடியாரின் வாழ்விலும் காண்கின்றோம். "நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. 10இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்" (காண்க. 2 கொரி 4:8-10) என்கின்றார் பவுலடியார். மேலும், இன்றைய இரண்டாம் வாசகத்தில், சிலுவையில் அறையுண்ட இயேசுவைப் பற்றி அறிவிப்பதும், அச்சிலுவையைக் குறித்து பெருமைகொள்வதுமே தனது பணிவாழ்வின் நோக்கமாகவும் காட்டுகின்றார். அதேவேளையில், இந்த இயேசுவுக்காக எல்லா நிலைகளிலும் துயரங்களைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டதன் விளைவாக, "என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்" என்று எடுத்துக்காட்டுகின்றார்.
இறுதியாக, தங்கள் பணிகளை முடித்துத் திரும்பும் 72 சீடர்களும், தங்கள் அனுபவங்கள் குறித்து இயேசுவிடம் பகிர்ந்துகொள்ளும் வேளை, "தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்று அவர்களிடம் மொழிவதன் வழியாக, பணிவாழ்வில் உச்சம் தொடும்வேளையில், கர்வம்நிறைந்த மனப்போக்குகளாலும், எண்ணங்களாலும் வீழ்ந்துபோய்விடமால், விண்ணகப் பேரின்பமே என்றும் நிலையானது என்பதை மிகவும் தாழ்மையான மனதுடன் ஏற்றுக்கொள்ளப் பணிக்கின்றார் இயேசு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆப்ரிக்க நாடுகளில் டேவிட் லிவிங்க்ஸ்டன் (David Livingstone) என்பவர் மறைபோதகப் பணிகள் ஆற்றி வந்தார். இவர் பல்வேறு துன்பங்கள், இன்னல்கள், இடையூறுகள், அச்சுறுத்தல்கள், வேதனைகளுக்கு மத்தியிலும் மூன்று முறை ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள உகாண்டா மற்றும் ஜெயிர் போன்ற நாடுகளை வலம்வந்து, நற்செய்தி மையங்களை நிறுவி, அந்தக் கண்டம் முழுவதும் இயேசுவின் நற்செய்தி பரவக் காரணமாக இருந்தார். ஒருநாள் அவரைச் சந்திக்க வந்த அவரது ஆபிரிக்க நண்பர் ஒருவர் அவரிடம், “டேவிட் லிவிங்க்ஸ்டன் அவர்களே! ஆப்ரிக்க கண்டத்தில் நீங்கள் ஆற்றிய நற்செய்திப் பணி அளப்பெரியது. அதற்காக நீங்கள் மேற்கொண்ட தியாகங்கள் அதிகம்” என்றார். அதற்கு அவர், “இயேசுவின் தியாகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது என்னுடைய தியாகமெல்லாம் ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரிடம் பெற்ற கடனுக்கு நான் செலுத்தும் ஒரு சிறு தொகைதான் என் பணிகள், தியாகங்கள் எல்லாம். மேலும் நான் செய்த இந்த நற்செய்தி அறிவிப்புப் பணி என்மேல் சுமத்தப்பட்ட கடமைதானே ஒழிய, அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை” என்று பதிலளித்தார். ஆகவே, நாமும் நமது நற்செய்தி அறிவிப்புப் பணிகளில் இத்தகையதொரு மனநிலையைக் கொண்டிருப்போம். இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்