MAP

கர்தினால் மால்கம் இரஞ்சித் கர்தினால் மால்கம் இரஞ்சித்   (AFP or licensors)

இலங்கை அரசால் கௌரவிக்கப்பட்ட கர்தினால் மால்கம் இரஞ்சித்!

“கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் நாட்டின் ஒழுக்கத்தைக் காக்க சோர்வின்றி முயற்சி செய்து வருவதோடு, மற்ற மதத் தலைவர்களுக்கும் சிறந்ததொரு முன்மாதிரியாகத் திகழ்கின்றார்” : புத்த மதத் தலைமை அறிஞர் Omalpe Sobitha Thera

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான் 

அருள்பணித்துவ திருநிலைப்பாட்டின் 50-ஆம் ஆண்டு நிறைவையொட்டி இலங்கை அரசு மற்றும் சமூகத்திற்கு கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காக, அவரை கௌரவிக்கும் விதமாக அந்நாட்டு அரசு அஞ்சல் முத்திரை ஒன்றை வெளியிட்டுள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஜூலை 7, திங்களன்று,  கொழும்பில் இடம்பெற்ற அஞ்சல் முத்திரை வெளியீட்டு விழாவில் அரசுத் தலைவர் அனுர குமார திசநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியா இருவரும் கலந்து கொண்டதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

“நேர்மையின் ஒளிவிளக்கு” என்று கர்தினால் இரஞ்சித் அவர்களைப் பாராட்டிய அரசுத் தலைவர் திசநாயக்க அவர்கள், “சமுதாயத்தில் மத மற்றும் ஒழுக்க அடித்தளங்கள் சரிந்துள்ள சூழலில், இவர் போன்றவர் மிகவும் தேவைப்படுகிறார்” என்றும் கூறியதாக அச்செய்தி நிறுவனம் உரைத்துள்ளது.

 “சமூகத்தில் தந்தை-மகன் உறவு, ஆசிரியர்-மாணவர் உறவு மற்றும் திருநிலையினர்-பொதுநிலையினர் உறவுகள் அழிந்து விட்டன” என்று இலங்கை அதிபர் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது அச்செய்திக் குறிப்பு.

“புதுப்பித்தல் மற்றும் நம்பிக்கையின் சின்னமாகத் திகழும் கர்தினால் இரஞ்சித் போன்ற சிறந்த ஆளுமைகள் சமூகத்திற்குத் தேவை” என்றும், “அவர் இலங்கையின் சமூகக் கட்டமைப்பில் புதிய வாழ்க்கையையும் ஆன்மிகத்தையும் புகுத்த வேண்டும்" என்றும் அதிபர் செய்தி நிறுவனத்திடம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கர்தினால் இரஞ்சித் அவர்கள்  நாட்டின் ஒழுக்கத்தைக் காக்க சோர்வின்றி முயற்சி செய்து வருவதாகவும், மற்ற மதத் தலைவர்களுக்கு சிறந்ததொரு முன்மாதிரியாகத் திகழ்வதாகவும் புத்த மதத் தலைமை அறிஞர் Omalpe Sobitha Thera அவர்கள் கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.

“நாட்டின் தற்போதைய சமூக-பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கர்தினால் இரஞ்சித் அவர்களின் வார்த்தைகளும் செயல்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை” என்றும், “அவருடைய ஆழ்ந்த ஞானத்தை அவரது கருத்துகள் வெளிப்படுத்துகின்றன” என்றும், மற்றுமொரு புத்தத் துறவி Niyangoda Vijitha Siri Thera அவர்கள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

உயிர்ப்பு ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் இரஞ்சித் அவர்கள், விலையேற்றம் காரணமாக மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைக் குறைக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதையும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

இதற்கிடையில், கடந்த 2019-ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை வழங்க இலங்கை அரசுத் தலைவர் உறுதி அளித்ததாகவும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஜூலை 2025, 14:45