MAP

சலேசிய சபை அருள்சகோதரியான ஷீதா ரேமா சலேசிய சபை அருள்சகோதரியான ஷீதா ரேமா  

நம்பிக்கை, துணிவை புலம்பெயர்ந்த மக்களுக்கு அளிக்கும் பணி

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குரலைக் கேட்டு அவர்களது தேவை என்ன என்பதை அறிந்து அவர்களுக்கு பணியாற்றுவது மிக முக்கியமானது - அருள்சகோதரி ஷீதா.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பங்களாதேஷில் உள்ள சிட்டகாங், டாக்கா போன்ற புலம்பெயர்ந்தோர் பணிபுரியும் ஒவ்வொரு மறைமாவட்டத்தில் உள்ள தலத்திருஅவை ஆலயங்களில் புலம்பெயர்ந்தோர்க்கான மையங்களை அமைக்க வேண்டும் என்றும், இது தங்களுக்காக யாராவது வேலை செய்கிறார்கள் என்ற நம்பிக்கையையும், துணிவையும் புலம்பெயர்ந்த மக்களுக்கு அளிக்கும் என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி ஷீதா.

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பணியில் ஈடுபட்டு வரும் சலேசிய சபை அருள்சகோதரியான ஷீதா ரேமா அவர்கள், தனது பணி அனுபவம் குறித்தக் கருத்துக்களை குளோபல் சிஸ்டர் என்னும் நிறுவனத்தின் வலைதளப்பக்கத்திற்கு அளித்துள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எல்லா துறவற சபையைச் சார்ந்த அருள்சகோதரிகள் மற்றும் அருள்தந்தையர்கள் புலம்பெயர்ந்தோர்க்கான பணியினைச் செய்ய முன் வர வேண்டும் என்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குரலைக் கேட்டு அவர்களது தேவை என்ன என்பதை அறிந்து அவர்களுக்குப் பணியாற்றுவது மிக முக்கியமானது என்றும் கூறினார் அருள்சகோதரி ஷீதா.

பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு மேய்ப்புப்பணி பராமரிப்பு வழங்குவது குறித்து பணியாற்றி வரும் அருள்சகோதரி ஷீதா அவர்கள், மைமென்சிங் மறைமாவட்டத்தில் உள்ள பாலுகபரா மறைமாவட்டத்தில் உள்ள காரோ பழங்குடி குடும்பத்தில் 1959- ஆம் ஆண்டு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர்.

ஓர் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் நல்வாழ்வுப் பராமரிப்புப் பணியில் தன்னை இணைத்து பணியாற்றினார். 1986-ஆம் ஆண்டு சலேசிய சபை அருள்சகோதரியாக தன்னை இணைத்துக்கொண்டவர், ரேமா வங்காளதேச கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் இளைஞர் ஆணையம், திருப்பீட மறைப்பணி சங்கங்கள் மற்றும் திருத்தந்தையின் உலகளாவிய செப வலையமைப்பிலும் பணியாற்றியுள்ளார்.

முழு புலம்பெயர்ந்த சமூகத்துடனும் தனியாக பணியாற்றுவது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ள அருள்சகோதரி ஷீதா அவர்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள், தங்குமிடங்கள் போன்றவற்றிற்காகப் போராடி வருவதாகவும், அப்பணியினால் நேர்மறையான மாற்றங்கள் பல ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும், பணி என்ற பெயரில் மக்கள் கடத்தப்பட்ட நிலையில், தற்போது பல விழிப்புணர்வு திட்டங்கள் வழியாக, அவர்கள், எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதை உறுதியாக அறியாமல் வேலைக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி ஷீதா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஜூலை 2025, 15:00