தென் சூடானின் அமைதிக்காக இறைவேண்டல் செய்யுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தேசிய மாறைச்சாட்சிகள் தினத்தை முன்னிட்டு, தெற்கு சூடானில் அமைதி நிலைபெற்றிட டோம்புரா-யம்பியோவின் ஆயர் ஹிபோரோ குஸ்ஸாலா அவர்கள், உணர்வுப்பூர்வமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
ஜூலை 31, இப்புதனன்று, இவ்விண்ணப்பத்தை முன்வைத்துள்ள ஆயர் குஸ்ஸாலா அவர்கள், தொடர்ந்து இடம்பெற்று வரும் வன்முறையையும் மனித துன்பங்களையும் கண்டித்துள்ள அதேவேளை, அதை வெறும் அரசியல் பிரச்சனையாக மட்டுமல்லாமல், மனிதாபிமான சோகம் மற்றும் தார்மீக தோல்வி என்றும் அழைத்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும், சட்டவிரோதக் குழுக்களை ஆயுதமற்றவர்களாக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய உரையாடலை ஊக்குவிக்கவும், அத்தியாவசிய சேவைகளை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசு துணிச்சலான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் ஆயர் குஸ்ஸாலா.
முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மதச் சமூகங்களை உள்ளடக்கிய தெற்கு சூடான் மக்களை, வெறுப்பு மற்றும் வன்முறையை குணப்படுத்தவும் எதிர்க்கவும் ஒன்றுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், இம்மக்களின் துயரங்களைக் கண்டு அனைத்துலகச் சமூகம் விலகிச் சென்று விடாமல் அமைதி நிலவிட உதவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் ஆயர்.
மேலும் வன்முறை தொடர்ந்தால் பேரழிவு தரும் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ள ஆயர், ஆனால் அதேவேளையில், அமைதியில் ஒன்றுபட்டால், தெற்கு சூடான் புதுப்பித்தல் மற்றும் நீதியை அனுபவிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இறுதியாக, தெற்கு சூடான் அமைதியையும் வாழ்க்கையையும் தேர்ந்தெடுக்கும் திருப்புமுனையாக இருக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார் ஆயர் குஸ்ஸாலா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்